யோகங்கள் பெறப்போகும் ரிஷபம், கன்னி, விருச்சிகம் ராசிகள்... சனிப்பெயர்ச்சி பொதுபலன்கள்!

எண்ணெய் வித்துகள், வாசனைப் பொருட்கள் போன்ற பணப் பயிர்களுக்கு நல்ல யோகமான ஒரு காலம். வேலை கொடுப்பவர் வேலை செய்பவர் இருவருமே நல்ல லாபம் ஈட்டக்கூடிய காலம்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான், ஜனவரி மாதம் 24 - ம் தேதி (24-1-2020) தை மாதம் 10 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.03 மணியளவில், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.
சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் மனதில் கவ்விக் கொள்வது இயல்பு. காரணம், 'சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை' என்பதுதான் காரணம்.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி இவையெல்லாம் நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என்கிற பயம், பலரின் மனத்திலும் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் வருவதுண்டு.
மனிதன் செய்த தீவினைகளுக்கு ஏற்ப அவனைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்றவர் சனி பகவான். சனி பகவான்ஒரு ராசியில் பிரவேசித்து விட்டு, அதிலிருந்து புறப்பட்டு 30 வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் அதே ராசிக்குள் பிரவேசிக்கிறார். அதனால்தான் '30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை' என்னும் பழமொழி உருவானது.
இப்படிப் பெயர்ச்சியாகக் கூடிய சனி பகவான் எல்லோருக்கும் கெடுதலை செய்வார் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு சிலருக்கு நன்மையும் அவரின் கர்மாவுக்கு ஏற்றபடி தருவார் என்பதுதான் உண்மை.
உதாரணமாக, ரிஷபம், துலாம் ராசிக்கு அவர் ராஜயோகாதிபதியாகவும் பாக்கியஸ்தானத்பதியாகவும் வருவதால், இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கெடுதலைச் செய்யமாட்டார். அதேபோல் மகரம் கும்பம் ஆகிய இரண்டு ராசிகளும் சனி பகவானின் சொந்த வீடு என்பதால், அந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் கெடுதல் விளைவிக்க மாட்டார்.
2020 ஜனவரி 24 - ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசியில் சனிபகவான் பிரவேசிக்கிறார். காலபுருஷ தத்துவத்தின்படி மேஷ ராசிக்கு பத்தாம் வீடு மகரம். சனிபகவான், மகரத்தில் வந்து அமர்கிறார் என்பதால், தொழில் வேலைவாய்ப்பு ஆகியவை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
மகரம், மேன்மையான ராசியாகவும் கும்பம் ஸ்திர ராசியாகவும் ஜோதிட ரீதியாகப் பார்க்கப் படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர் மிகச் சிறப்பான நிலையை அடைவார்கள். அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம், தவறாமல் கிடைக்கும்.
ஜோதிடப்படி உலக நாடுகளில் மகரராசி இந்தியாவைக் குறிக்கிறது. இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலமாக, 2020 நிச்சயம் விளங்கும். இந்தியாவில் விவசாயம் மற்றும் பொருளாதார அளவில் வளர்ச்சி அடையும்.
சனி பகவான் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியில் இருக்கப் போகின்றார். இதனால், இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும் . குறிப்பாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் தினக்கூலிகள், தொழிலாளிகள், பாட்டாளிகள், விவசாயிகள் ஆகியோரை மேம்படுத்தும்விதமாக இந்த இரண்டு ஆண்டுக்காலம் அமையும்.

2020 - ம் ஆண்டு இறுதியில் 2021 - ம் ஆண்டு குருவுடன் இணைகிறார். குரு சுபத்துவம் பெற்ற ஒரு கிரகம் என்பதால், 2021 -ம் ஆண்டு மேலும் சிறப்பான பலன்கள் நம் நாட்டுக்குக் கிடைக்கும்.
கால புருஷ தத்துவப்படி மேஷ ராசிக்கு பத்தாம் வீடான மகர ராசியில் குரு பகவானுடன் சனி இணையும்போது தொழில்துறை விவசாயத்துறை ஆகியவை செல்வவளம் கொழிக்கக்கூடிய துறைகளாக மாறும் என்பது நிச்சயம்.
எளிய மக்கள், உழைப்பாளிகள், உண்மையானவர்கள் ஆகியோருக்கெல்லாம் சனி பகவான் மிகவும் நெருக்கமானவராக இருந்து தன்னால் இயன்ற நற்காரியங்களை அவர்களுக்குச் செய்வார். அதிர்ஷ்டத்தை நம்பாமல், தன் உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு, வேலை வேலை என்று இருப்பவர்களுக்கு இது உன்னதமான நேரமாகும்.

உலக அரங்கில் இந்தியா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் முன்னிலை வகிக்கும் நாடாக திகழும். இதற்கு உறுதுணையாக மத்திய மாநில அரசுகள் இருக்கும். ஸ்திரத்தன்மையான அரசாங்கம் அமையும்.
காலி நிலங்கள், விவசாய நிலங்களுக்குச் சனிபகவான் காரகத்துவம் பெற்றவர். விவசாயிகளின் மனம் குளிரும் அளவு மழை பெய்யும்.
எண்ணெய் வித்துகள், வாசனைப் பொருட்கள் போன்ற பணப் பயிர்களுக்கு நல்ல யோகமான ஒரு காலம். வேலை கொடுப்பவர் வேலை செய்பவர் இருவருமே நல்ல லாபம் ஈட்டக்கூடிய காலம்.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளில் 3 ராசிகளுக்கு இது சிறப்பான பலன்களைத் தரும். 3, 6, 11 - ம் இடங்களில் சனி வரும்போது அந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் நடக்கும் என்பது ஜோதிட விதி. அதேபோல் ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கும்போது அவர்களுக்கு அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுக் கொடுப்பார் சனி பகவான்.

சனி பகவான் விலகும் ராசி என்று பார்த்தால், விருச்சிக ராசிக்கும் அஷ்டம சனி நடந்து வரும் ரிஷப ராசிக்கும் அர்த்தாஷ்டம சனி நடக்கும் கன்னி ராசிக்கு சிறப்பான பலன்களையும் வழங்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
கடந்த 7 ஆண்டுகளாக விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய அளவில் துன்பத்தை அனுபவித்து வந்தனர். அவர்களுக்கு ஏழரைச் சனி நடந்ததால் இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்மச் சனி நடந்து வந்தது அல்லவா? இப்போது அவர் தனுசு ராசியில் இருந்து பெயர்ந்து போய் மகர ராசியில் அமர்வதால், அவர்கள் சற்று சுதந்திரமாகச் செயல்படுவார்கள்.
குறிப்பாக தனுசு ராசியில் பிறந்து வேலை கிடைக்காமல், மிகுந்த துயரத்தில் இருந்தவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி ஒரு புதிய விடியலாக இருக்கும். மனத்திலிருந்த தாழ்வு மனப்பான்மை விலகி தெளிவு பிறக்கும்.
ரிஷப ராசி நேயர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மனத்தில் உற்சாகத்தையும் தெளிவையும் தரும்.
சாதகமற்ற பலன்களாக நடைபெற்றுவந்த விருச்சிகம், தனுசு, ரிஷபம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் சிறப்பான பெயர்ச்சியாக அமையும்.
மீன ராசிக்காரர்களுக்கு 11 - மிடமான லாபஸ்தானத்துக்கு சனி பகவான் வருவதால் பணவரவு இந்த மூன்று வருடங்களில் சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு 6- மிடம் என்று சொல்லக்கூடிய மகர ராசியில் சனிபகவான் இருப்பதால் எதிரிகள், கடன்கள் இவற்றையெல்லாம் பொடிப்பொடியாக ஆக்கிடும்ய வலிமை இவர்களுக்குக் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிகளும் சாதகமாக இருப்பதால் பொற்காலத்தின் கதவுகள் திறக்கக் கூடிய ஒரு காலகட்டமாக இந்த காலகட்டம் இருக்கும்.
விருச்சிக ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி பகவான் இருப்பதால் இவர்களுக்கு இனி தொட்ட காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும்.
இந்த சனிப்பெயர்ச்சியில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் என்று பார்த்தால், முதலில் வருவது மகர ராசி. சனி பகவான் இங்கு ஜன்மத்தில் இருப்பதால் என்னதான் சொந்த வீடு, ஆட்சி என்றாலும், நாமும் காரியங்களில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இவர்கள் பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ கியாரண்டி கையெழுத்து போடுவதோ கூடாது.

மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி வருவதால் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. பொருள்களை எங்கு வைத்தோம் என்பது அடிக்கடி மறந்து போய்விடும். ஞாபக மறதியைத் தருவார். சிறு கையேட்டில் குறித்து வைத்துக் கொண்டு செய்வது நல்லது.
சனி பகவான் நீதிமான், என்பதால் நாம் சரியாக இருந்தால்தான் நமக்கான எல்லா வழிகளும் பிறக்கும் என்பதை, உணர்ந்துகொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது.
மேஷம், கடகம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளாகும். இந்த சனிப் பெயர்ச்சி, பெண்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கும் ரியல் எஸ்டேட் துறையினருக்கும் மிகச்சிறந்த பொற்காலமாக சனிப்பெயர்ச்சி இருக்கும்.