Published:Updated:

தொழிலில் வெற்றி பெறப்போகும் மேஷராசியினரின் திருக்கணித பஞ்சாங்க சனிப்பெயர்ச்சிப் பலன்கள்!#Astrology

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு பாவ கிரகம் கேந்திர வீட்டுக்குச் செல்வது சிறப்பான ஓர் அம்சமாகும். தொழிலில் நிலவி வந்த மந்தநிலை மாறி, சுறுசுறுப்பான முறையில் உங்களின் பணிகளைத் தொடங்குவீர்கள்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24 - ம் தேதி (24-1-2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் பலன்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

''மேஷ ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடமான தனுசிலிருந்து பத்தாமிடம் கர்ம ஸ்தானமான தொழில் ஸ்தானத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.

சனி பகவான் பத்தாம் இடத்துக்குச் செல்வது பெரிய அளவு சிறப்பான பலன்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், திரிகோண ஸ்தானத்திலிருந்து கொண்டு பல தடைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த சனி பகவான் இப்போது கேந்திர ஸ்தானமான பத்தாம் இடத்துக்குச் செல்கிறார். இதனால், தொழிலில் இதுநாள் வரை இருந்து வந்த மந்தநிலை மாறி, வரவு செலவுகள் சிறப்பாக இருக்கும்.

Aries
Aries

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு பாவ கிரகம் கேந்திர வீட்டுக்குச் செல்வது சிறப்பான ஓர் அம்சமாகும். தொழிலில் நிலவி வந்த மந்தநிலை மாறி, சுறுசுறுப்பான முறையில் உங்களின் பணிகளைத் தொடங்குவீர்கள். வாழ்க்கையின் புதிய இலக்குகளை நிர்ணயித்து, அந்த இலக்குகளை வெகு இலகுவாகத் தாண்டி வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இந்தத் தொழிலை செய்யலாமா வேண்டாமா என்று மனக் குழப்பத்தில் இத்தனை நாள்களாக இருந்து வந்தீர்கள் அல்லவா? அந்தக் குழப்பத்துக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்கும். துணிச்சலுடன் நம்பிக்கையுடன் உங்கள் தொழிலில் இறங்கி அடித்து வெற்றிகளைக் குவிப்பீர்கள். சுயதொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

திருமணமாகாமலிருந்த கன்னிப்பெண்களுக்குத் தடைகள் நீங்கி, இப்போது சிறப்பான இடத்தில் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமலிருந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். வெளிநாட்டுக்குச் சென்று நல்ல பணி வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். கூடவே உங்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் திறமையைப் பாராட்டுவார்கள்.

Saturn
Saturn

உடல்நலனில் சின்னச்சின்ன உபாதைகளையும் தொல்லைகளையும் அனுபவித்து வந்தவர்களுக்கு உடல்நலம் சீரடைந்து உற்சாகம் பிறக்கும். பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்திலிருந்து சனி வெளியேறப் போகிறார் என்றாலே, எல்லா பாக்கியங்களும் உங்களை நோக்கி வரப்போகிறது என்றுதானே அர்த்தம்.

பேரன் பேத்தியைப் பார்க்க ஆசைப்பட்டுக்கொண்டிருந்த தாத்தா பாட்டிக்குப் பேரன் பேத்திகளைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட தெய்வங்களை வணங்குவதற்காகப் புனித யாத்திரையையும் சிலர் மேற்கொள்வார்கள்.

விவசாயத்துக்குக் காரத்துவம் பெற்றவர் சனி என்பதால், விவசாயம் சீரும் சிறப்புமாக நடைபெறும். கிராமப் பொருளாதாரம் நல்லவிதமாக உயரும். நகரத்தை நோக்கி வந்தவர்கள், தங்கள் சொந்த கிராமத்துக்கே சென்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜோதிடப்படி சனி பகவான் நல்ல இடத்துக்கு வந்திருப்பதால், ஆலய பரிகாரங்கள் தேவையில்லை. அதற்குப் பதிலாகத் தாய் தந்தை இல்லாதவர்கள், ஆதரவற்ற முதியோர் ஒன்பது பேருக்கு மதிய வேளையில் அன்னதானம் வழங்கினால், பலன்கள் மிகுதியாகக் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு