திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஜோதிடம் சொல்லும் ஆயுள் ரகசியம்!

ஶ்ரீதன்வந்திரி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீதன்வந்திரி பகவான்

ஜோதிடர் ஶ்ரீமுருகப்ரியன்

ஜோதிடவியல் கணக்கின்படி ஒரு மனிதனுக்குப் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள். லிங்க புராணத்தில் வரும் மோட்ச சாம்ராஜ்யத்தின் வதைபடு ஸ்தானப் பகுதியில் ஆயுள் குறித்து ஒரு விளக்கம் உண்டு.

ஜோதிடம் சொல்லும் 
ஆயுள் ரகசியம்!

`ஒரு மனிதன் அற்ப ஆயுளுடன் தனது வாழ்க்கையை முடிக்கக் கூடாது. பூரண ஆயுளுடன் பூமியில் வாழ்ந்து, ஆயிரம் பிறைகள் கண்டு ஆனந்தம் அடைந்தபிறகு, பேரன்- பேத்திகள் சூழ 60-ம் கல்யாணம், உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் ஆகிய சாந்தி கர்மங்களைச் செய்து, வாழ்க்கையை நன்கு அனுபவித்துப் பூர்த்தி செய்தல் வேண்டும்’ என்கிறது அந்தப் புராணப் பகுதி.

சரி, பூரண ஆயுள் எனும் மகா பேறு எல்லோருக்கும் கிடைத்துவிடுவது இல்லையே! மனிதர்களின் ஆயுள் காலத்தைக் கொடிய நோய்கள் அசைத்துப் பார்க் கும் இந்த காலகட்டத்தில், பூரண ஆயுளுடன் வாழ மார்க்கம் உண்டா?

நிச்சயம் உண்டு அதுபற்றி அறியுமுன் புராணக் கதை ஒன்றைப் பார்க்கலாம்.

முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு ஆயுள் பாவம் பற்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார். சந்திராதரன் எனும் மாணவனின் ஜாதகத்தை வைத்து, அவனுடைய ஆயுள் குறித்துக் கணக்கிடும் பயிற்சியை எல்லா சீடர்களுக்கும் முனிவர் சொல்லிக்கொடுத்தார்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஆராய்ந்ததில், சந்திராதரனின் ஆயுள் அன்று மாலை சூர்ய அஸ்தமனத்தில் முடிந்து விடும் என்ற உண்மையை எல்லா சீடர்களும் கண்டறிந் தனர். முனிவருக்கும் சந்திராதரனுக்கும்கூட இந்த உண்மை புலனாகியது.

அறிவும் ஆற்றலும் மிக்க சந்திராதரனை அத்தனைச் சிறிய வயதில் இழப்பதற்கு எவரும் தயாராக இல்லை. அவனைக் காப்பாற்றும்படி எல்லோரும் முனிவரிடம் வேண்டினர். அவரும் தனது தவ வலிமையால் சந்திராதரனை அழைத்துக்கொண்டு பிரம்ம லோகம் சென்று பிரம்மனிடம் முறையிட்டார்.

‘`ஆயுளைக் கட்டுப்படுத்துபவர் மகேஸ்வரன் எனும் ருத்ரன். அவர் மிருத்யுஞ்ஜயன். அவரால் மட்டுமே மரணத்தை மாற்ற முடியும். எனவே, சிவபெருமானிடம் சென்று முறையிடுங்கள்’’ என்று கூறினார் பிரம்மதேவன்.

முனிவரும் சிவலோகம் சென்றார். சிவபெருமானோ ‘`முனிவரே! உயிரினங்களின் ஆயுள் முடியும் நேரத்தைக் கணக்கிட்டு நிர்ணயித்துத் தரும் நானே, நியதியை மாற்றுவதோ மீறுவதோ தர்மம் அல்ல. எனவே, காக்கும் கடவுளான மந் நாராயணனிடம் சென்று வேண்டிப் பாருங்கள்’’ என்றார்.

ஜோதிடம் சொல்லும் 
ஆயுள் ரகசியம்!

முனிவரும் சீடனுடன் சென்று வைகுண்டநாதனைத் தரிசித்து, சீடனைக் காப்பாற்றும்படி வேண்டினார்.

மந் நாராயணன் முனிவரை நோக்கி, ‘`தபஸ்வியே! உமது தவ பலத்தால் பிரம்ம லோகமும், சிவலோகமும் சென்றுவிட்டுப் பிறகு என்னிடம் வந்திருக்கிறீர். இதை ஒருநாள் முன்னதாகவே நீர் செய்திருந்தால், ஏதாவது செய்ய வழி இருந்திருக்கும். இவன் மரணம் நிகழக்கூடிய நாள், நக்ஷத்திரம், திதி எல்லாமே வந்துவிட்டன. மும்மூர்த்திகளாலும் இனி எதுவும் செய்யமுடியாது. வேண்டுமானால், இவன் உயிரைக் கவரவிருக்கும் எமதர்மனிடமே சென்று முறையிட்டுப் பாருங்கள். அது ஒன்றே இப்போது நீர் செய்யக்கூடியது!’’ என்று சாமர்த்தியமாகக் கூறிவிட்டார்.

மூன்று லோகங்களுக்குச் சென்ற பின்பு, மிஞ்சியிருந்த தவ பலத்தை வைத்துக்கொண்டு, சந்திராதரனையும் அழைத்துக்கொண்டு, எம தர்மன் முன்னால் போய் நின்றார் முனிவர். அவர் வேண்டுகோள் விடுக்கும் முன்பே எமதர்மன் பேசினான்...

‘`முனிவரே! இச்சிறுவனின் மரணத்துக்கு நீங்கள்தான் காரணம்’’ என்றான். முனிவர் ஆச்சர்யமும் கோபமும் அடைந்து, ‘`ஏன் அவ்வாறு கூறுகிறாய்?'’ என்று எமதர்மனைக் கேட்டார்.

‘`பூலோகத்தில் இருந்தபடியே, உம்முடைய தவ வலிமையால் ‘தீர்க்காயுஷ்மான் பவது’ (நீண்ட ஆயுளோடு வாழ்வாய்) என்று நீர் வாழ்த்தியிருந்தால், அது பலித்திருக்கும். இவன் உயிரைக் கவர்ந்துகொண்டு வருவது எனக்குப் பிரச்னையாக இருந்திருக்கும். ஆனால் நீங்களோ, உங்களின் தவ பலத்தையெல்லாம் மூன்று உலகத்திற்கும் செல்வதில் வீணாக்கிவிட்டு, இப்போது கடைசியாக இவனை என்னுடைய உலகத்திலேயே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்.

இவனைத் திரும்ப அழைத்துச் செல்லும் தவ வலிமையும் இப்போது உம்மிடம் இல்லை. எனது வேலையைச் சுலபமாக்கிவிட்டீர். இனி, நீர் செல்லலாம். இவன் ஆயுள் முடிந்தது. உமக்கு ஆயுள் முடிந்த பிறகு என்னிடம் வந்து சேர்வீர்!’’ என்று கூறிவிட்டான். முனிவரும் வேறு வழியின்றி, சந்திராதரனை எமலோகத்தில் விட்டுவிட்டு ஆசிரமம் திரும்பினார்.

பெற்றோரையும் பெரியோரையும், தெய்வீக புருஷர்களையும் தபஸ்விகளையும் வணங்கும்போது, அவர்கள் ‘தீர்க்காயுஷ்மான் பவது’ என்று ஆசி கூறினால், அந்த நல்லாசியினால் நமது ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.

ஜோதிடம் சொல்லும் 
ஆயுள் ரகசியம்!

விதி வலியது. எனினும், பெரியோர்கள் மற்றும் மகான்களின் ஆசியும் அருளும் கிடைத்தால், பாதிப்புகள் குறையும் அல்லது விலகும் என்பதை விளக்கும் அற்புதமான கதை இது. சரி, இனி ஆயுள் பாவம் குறித்து ஜோதிடம் தரும் விளக்கங் களைக் காண்போம்.

ஜோதிடவியல் கணக்கு, ஒருவரது ஆயுட்காலத்தை அற்ப ஆயுள், மத்திமமான ஆயுள், தீர்க்க ஆயுள் என்று பிரித்துக் கூறும். ஆயுள்காரகனான சனி, குரு, சந்திரன் ஆகியோரது பார்வையில் இருந்தாலும், இந்த கிரகங்கள் ஆயுள் ஸ்தானாதிபதியைப் பார்த் தாலும், ஜன்ம ராசியைப் பார்த்தாலும் பூரண ஆயுள் கிட்டும்.

லக்னத்துக்கு அதிபனும், சந்திரனும் பலம் பெற்றிருந்தால், ஜாதகருக்குத் தீர்க்காயுள் கிடைக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து, ஆயுள்காரகனான சனி, ராகு மற்றும் கேதுவுடன் விரய நிலையில் இருந்தால் அற்பாயுள் தோஷம் இருப்பினும்... குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்த்தால் ஆயுள் பங்கத்தைத் தராமல் மத்திம ஆயுளைத் தரும்.

ஜனன லக்னத்துக்கு 8-ம் இடத்தின் அதிபன், எந்த ராசியில் உள்ளாரோ அதில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நோய் உபாதைகள் ஏற்படலாம். அதேபோன்று, லக்னத்துக்கு 5, 9-ல் சனி இருந்து, தீய கிரகங்களின் பார்வை இருந்தால் நோய்கள் தாக்க வழி உண்டு.

லக்னத்துக்கு 2 மற்றும் 12-ம் இடங்களில் பாப கிரகங்கள் கூடி நின்றால் நோயுடன் வறுமையும் தாக்க நேரிடலாம்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் லக்னத்தில் இருக்க, லக்னாதிபதி 2, 8, 12-ல் அமர்ந்து கேந்திரங்களில் பாபர்கள் இருப்பார்கள் எனில், அந்த ஜாதகர் நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.

இப்படியான கிரக நிலை குறைபாடுகள் இருப்பின், ஜோதிட - சாஸ்திர விற்பன்னர்கள் மூலம் உரிய பரிகாரங்களை அறிந்து, தகுந்த வழி பாடுகள் செய்து நிச்சயம் நிவர்த்தி பெறலாம்.

சிவனருளால் சிரஞ்ஜீவியானான் மார்க்கண்டேயன். பெற்ற தந்தையே தன்னைக் கொல்ல முயற்சி செய்தபோது, பகவான் விஷ்ணுவின் பேரருளால் காப்பாற்றப்பட்டான் பக்த பிரகலாதன். ஆகவே இறைவனின் திருவருள் இருந்தால் எம பயம் எவருக்கும் இல்லை.

அனுதினமும் குலதெய்வத்தை, இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் பிணித் தொல்லைகள் நீங்கும்; ஆயுள் பலம் கூடும். அத்துடன் ஞானநூல்கள் வழிகாட்டும் எளிய வழிபாடுகளையும் செய்து பலன் பெறலாம். அப்படியான வழிபாடுகளில் ஒன்று தன்வந்திரி பகவான் வழிபாடு.

பஞ்சாங்க சுத்தியுள்ள சனி, செவ்வாய், திரயோதசி திதி ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாளில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

தன்வந்த்ரி பகவான், விஷ்வக்சேனர், ஆயுள்தேவி வர்தனீ தெய்வங்களை கலசங்களில் ஆவாஹனம் செய்து விரிவான முறையில் செய்யப்படும் ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு உண்டு. இதை தகுந்த விற்பன்னர்கள் மூலம் செய்து நன்மை அடையலாம்.

இயலாதவர்கள், மேற்சொன்ன புண்ணிய நாள்களில், பக்தியோடு தன்வந்திரி பகவானை தியானித்து வணங்கி...

`ஓம் ஆயுர்தேவதாயை வித்மஹே
விஷ்ணு ரூபாய தீமஹி
தந்நோ தன்வந்தரி ப்ரசோதயாத்:


என்ற மந்திரத்தைச் சொல்லி உள்ளம் உருக வழிபடலாம். இதனால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்வும் அமையும்.

ஜோதிடம் சொல்லும் 
ஆயுள் ரகசியம்!

மதுரையில் ஒரு திருக்கடவூர்!

துரையில் தெற்குமாசி வீதியில் உள்ள தென் திருவாலவாய ஸ்வாமி கோயில், நம் ஆயுளைக் கூட்டி, ஆரோக்கியத்துடன் வாழவைக்கும் திருத்தலம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க, அவன் மீது எமதர்மன் பாசக் கயிற்றை வீசியபோது, அது சிவலிங்கத்தின் மேல் பட்டது அல்லவா? அதனால் உண்டான அபவாதம் நீங்கிட எமதர்மன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டான்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கு ஸ்வாமி திருவாலவாயர்; அம்பாள் மீனாட்சி. திங்கள் கிழமைகளில் விரதமிருந்து இந்தச் சிவனாரை வழிபடுவது விசேஷம் மீனாட்சியம்மனுக்கும் வெள்ளிக்கிழமைதோறும் துர்கைக்கும் பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருக்கடையூர் திருத்தலம் போலவே இங்கேயும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் சிறப்புற நடத்தப் படுகின்றன. தங்களின் அறுபதாம் கல்யாணம் மற்றும் சதாபிஷேகத்தின் போது இந்த ஆலயத்துக்குச் சென்று சிவ-பார்வதியை வணங்கித் தொழுதால், தீராத நோய் தீரும்; ஆயுள் பலம் பெருகும்; மரண பயம் நீங்கப் பெற்று நிம்மதியாக வாழ்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்.

- மீனா,மேலூர்.