திருக்கதைகள்
Published:Updated:

கிரகங்கள் தரும் செல்வ யோகம்!

அதிர்ஷ்ட யோகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிர்ஷ்ட யோகம்

உங்கள் லக்னத்துக்கு அதிர்ஷ்ட யோகம் எப்படி?

உலகில் மனிதர்களின் சகல தேவைகளுக்கும் அடிப்படையாக அமைவது பணம் மட்டுமே. `அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது வள்ளுவரின் வாக்கு. சாணக்கியரும் அர்த்தசாஸ்திரத்தில் தனிமனித பொருளாதாரத் தேவையை தெளிவாக எடுத்துரைக்கிறார். ஜோதிடமும் ஜாதகப்படி நம்முடைய பொருளாதார நிலை, செல்வ யோக நிலையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

கிரகங்கள் தரும் செல்வ யோகம்!
ஜோதிடர் வேல்முருகன்
ஜோதிடர் வேல்முருகன்

பொதுவாக கிரகப்பெயர்ச்சி நிகழ்வுகளையும் பலன்களையும் ராசி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் காண்போம். ஆனால் ஒருவரு டைய தனிப்பட்ட ஜாதகத்தின் பலம், பலவீனத்தை லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு தெளிவாக அறியலாம்.

அவ்வகையில் லக்ன அடிப்படையில் செல்வ நிலை குறித்த விளக்கங்களைப் பார்ப்போம்.

பெரும்பாலான அன்பர்கள் தங்களின் ராசி இன்னதென்று அறிந்து வைத்திருப்பது போன்றே, லக்னத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள்.

உங்களின் ஜாதகக் கட்டத்தைக் கவனித்தால், அதில் `ல’ என்று உங்களின் லக்னம் குறிப்பிடப் பட்டிருக்கும். ஜாதகம் கணித்த ஜோதிடர் உங்களின் லக்னத்தைத் துல்லியமாகக் குறித்திருப்பார். உதாரணமாக மேஷம் இருக்கும் இடத்தில் அந்தக் குறியீடு (ல) இருந்தால், நீங்கள் மேஷ லக்னக்காரர்கள். இவ்வண்ணம் நீங்கள் உங்களின் லக்னத்தை அறிந்துகொள்ளலாம்.

லக்னம் என்பது நமது அறிவுத்திறன், ஆளுமைத் திறன், உலக ஞானம், நமது வாழ்வில் ஏற்படும் இன்ப-துன்பங்களை எதிர்கொள்ளும் நிலை, வாழ்வியல் முறை, குணநலன், மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும்.

அதேபோல் லக்னத்திலிருந்து எண்ண வரும் 2-ம் வீடும், அந்த வீட்டின் அதிபதிக் கிரகமும் ஒருவரின் வருமானம், பொருளாதார நிலை, சேமிக்கும் குணம், குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, அவருடைய பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றை எடுத்துரைக்கும்.

இந்த இரண்டாம் இடம் அல்லது அந்த இடத்தின் அதிபதியோடு பூர்வபுண்ணியத்தைக் குறிக்கும் 5-ம் இடத்தின் அதிபதி தொடர்பு கொள்வது சிறப்பு. இதனால் பூர்விகச் சொத்தால் ஆதாயம், ஷேர் மார்க்கெட்டால் லாபம், லாட்டரிச் சீட்டு மூலம் பண வரவு, திடீர் அதிர்ஷ்டத்தால் செல்வ யோகம் உண்டாகும்.

கிரகங்கள் தரும் செல்வ யோகம்!

2-ம் இடம் அல்லது 2-ம் வீட்டு அதிபதியோடு பாக்கியாதிபதி ஆகிய 9-ம் இடத்தின் அதிபதிக் கிரகம் தொடர்பு கொள்வதும் மிகப் பெரிய யோக அமைப்பாகும். ஏனெனில் 9-ம் இடம் லட்சுமி ஸ்தானம் ஆகும். வெளிநாட்டுத் தொடர்பால் பண வரவு, தந்தை வழியில் சொத்து, அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் வருமானம் ஆகிய நிலைகளை இந்த 9-ம் இடம் குறிக்கும். ஆக, இந்த இடத்துக்கான அதிபதி 2-ம் இடம் அல்லது அந்த இடத்தின் அதிபதியோடு தொடர்பு கொண்டிருந்தால்... துறவியாக இருந்தாலும் பலகோடிகளுக்கு அதிபதியாக பெரும் செல்வந் தராகத் திகழும் அமைப்பு உண்டாகும்.

11-ம் இடத்தை லாப ஸ்தானம் என்பார்கள். இந்த இடத்துக்கான அதிபதிக் கிரகம் 2-ம் வீடு அல்லது 2-ம் வீட்டு அதிபதியோடு தொடர்பு பெற்றிருந்தாலும், மிகப்பெரிய யோகம் அமையும்.

2 மற்றும் 11-ம் வீடுகளின் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவதும் சிறப்பு. இந்த அமைப்பு மிகப் பெரிய செல்வயோகத்தை சுய முயற்சியால் பெறும் வாய்ப்பைத் தரும். கடின உழைப்பு, சேமிப்பு, அதன்மூலம் செய்யும் முதலீடு, சிறிய உழைப்பிற்கு மிகப் பெரிய வருமானம் ஆகிய வற்றை உண்டாக்கும்.

ஆக ஜாதகத்தில் 2, 5, 9, 11-ம் இடங்கள் செல்வநிலைக்குக் காரணமாகின்றன. இந்த இடங்களுக்கு உரிய அதிபதிக் கிரகங்களில் எவரேனும் மூவர் ஏதேனும் ஒரு வகையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்தால், அந்த ஜாதகர் பல கோடிகளுக்குச் சொந்தக்காரர் ஆகும் நிலை வாய்க்கும்.

இப்படியான செல்வயோக நிலைகள் ஜாதகத் தில் இருந்தாலும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, உரிய திசை மற்றும் புக்தி நடக்கும் காலத்திலேயே மேற்சொன்ன பலன்கள் நடைமுறைக்கு வரும். ஆகவேதான், ஏழ்மையுடன் திகழும் சிலர், குறிப் பிட்ட வயதுக்குமேல் செல்வத்தில் கொழிப்பார்கள்!

இனி, பன்னிரு லக்னங்கள் ரீதியாக செல்வ நிலை பெறும் அமைப்பைக் காண்போம்.

கிரகங்கள் தரும் செல்வ யோகம்!

மேஷ லக்னம்: இந்த லக்னத்திற்குச் சுக்கிரன், சூரியன், குரு, சனி இதில் எவரேனும் இருவர் அல்லது மூவர் இணைவது மிகப் பெரிய தன யோகத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்: இந்த லக்னத்திற்குப் புதன், சனி, குரு இணைப்பு தன யோகத்தை ஏற்படுத்தும்.

மிதுனம்: சந்திரன், செவ்வாய், சனி, சுக்கிரன் இணைவு விசேஷம்.

கடகம்: சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் இணைப்பு தன யோகத்தை ஏற்படுத்தும்.

சிம்மம்: புதன், குரு, செவ்வாய் இணைப்பு தன யோகத்தை ஏற்படுத்தும்.

கன்னி: சுக்கிரன், சனி, சந்திரன் இணைப்பு விசேஷம்.

துலாம்: செவ்வாய், சனி, புதன் மற்றும் சூரியன் இணைப்பு சிறப்பு.

விருச்சிகம்: குரு, சந்திரன், புதன் இணைப்பு தன யோகத்தைத் தரும்.

தனுசு: சனி, செவ்வாய், சூரியன், சுக்கிரன் இணைப்பு செல்வ யோகம் உண்டாக்கும்.

மகரம்: சனி, சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் இணைப்பு சிறப்பாகும்.

கும்பம்: குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் இணைந்தால் செல்வ யோகம் உண்டாகும்.

மீனம்: செவ்வாய், சந்திரன், சனி ஆகியோர் இணைந்தால் மிகப் பெரிய தன யோகத்தை ஏற்படுத்தும்.

கிரகங்கள் தரும் செல்வ யோகம்!

ஒன்பதாம் அதிபதியாக வரக்கூடிய கிரகங்களும் தெய்வங்களும்!

பொதுவாக அன்பர்கள் யாவரும், லட்சுமி ஸ்தானமாகிய 9-ம் இடத்துக்கு உரிய தெய்வங்களை வணங்குவதால் செல்வம் சேரும்; தடைகள் நீங்கி பொருளாதார நிலை உயரும்; பண வரவைத் தரும் வாய்ப்புகள் தேடி வரும்; எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

ஆகவே. உங்கள் ஜாதகப்படி லக்னத்திலிருந்து எண்ண வரும் 9-ம் வீட்டின் அதிபதி எந்த கிரகம் என்பதை அறிந்து, உரிய தெய்வங்களை வழிபட்டு வரம் பெறலாம்.

சூரியன்: 9-ம் வீட்டு அதிபதி சூரியன் எனில், சிவபெருமான் அல்லது சூரியதேவனை வழிபடலாம். பிரதோஷ காலத்தில், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று வணங்கி வாருங்கள்; வளம் பெருகும். அதேபோல், சூரியனார்கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்து வரலாம்.

சந்திரன்: அம்பாள் அல்லது வேங்கடாசலபதியை வணங்கி வழிபடலாம். பெளர்ணமி தினங்களில் வீட்டில் நெய்விளக்கு ஏற்றி வைத்து அம்பாளை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் வேங்கடா சலபதியை வழிபட செல்வகடாட்சம் பெருகும்.

செவ்வாய்: செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று முருகனைத் தரிசித்து வழிபட்டு வருவது சிறப்பு.

புதன்: மகாவிஷ்ணு வழிபாடு நன்மை அளிக்கும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து வருவது விசேஷம்; உங்களின் முயற்சிகள் நல்ல பலனளிக்கும்.

குரு: வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபடுவது நல்லது. ஆலங்குடி ஆபத்சகாயேஸ் வரரையும் குருபகவானையும் ஒருமுறை தரிசித்து வாருங்கள்; நன்மை உண்டாகும்.

சுக்கிரன்: மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு. இயன்றால் திருவரங்கம் சென்று பெருமாளையும் தாயாரையும் வணங்கி வரலாம்.

சனி: ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் செல்வயோகங்கள் கைகூடும். ஒருமுறை திருநள்ளாறு கொயிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம்.

ராகு - கேது: இந்தக் கிரகங்கள் ஒன்பதாம் இடத்துடன் தொடர்பு பெற்றிருந்தால், பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெரு மாளை தரிசித்து வழிபட்டு வரலாம். நாகாபரணம் அணிந்திருக்கும் அம்மனை வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் வந்துசேரும்.

கிரகங்கள் தரும் செல்வ யோகம்!

எந்த நட்சத்திரத்தில் தொழில் தொடங்கலாம்?

தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் 10-ம் இடம் ஆகும். 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். இவற்றில் 10 என்பது உயர் கேந்திரமாகும். 10-ம் இடமும், 10-ம் வீட்டோனும் வலுப் பெற்றிருக்கும் அன்பர்கள், சொந்தத்தொழிலில் வெற்றி பெறமுடியும்.

கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு உலவும்போது, தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத்துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.அதேபோல், அமிர்த யோகம் உள்ள நாள் விசேஷம். அடுத்தபடியாக சித்தயோகம் நல்லது.

மரணயோகமும், பிரபாலாரிஷ்ட யோகமும் நிச்சயம் விலக்கப்பட வேண்டும். தொழில் தொடங்கும் நாள் சுப முகூர்த்த நாளாக அமைவது சிறப்பு. தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் பலமாக உள்ள லக்னத்தைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட லக்னம் அமையும் பஞ்சக சுத்தம் உள்ள (திதி, வார, நட்சத்திரம், லக்னம், துருவம்) நேரத்தில் தொழில் ஆரம்பிப்பது நல்லது. மேலும் உலகில் பலவிதமான தொழில்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கிரகம் வலுப் பெற்றிருக்க வேண்டும். தொழிலில் ஈடுபடும் முன் அந்தத் தொழிலுக்குரிய கிரகம் ஜாதகத்தில் பலமாக உள்ளதா என்பதை அறிந்து செயல்பட்டால் தொழில் செழிக்கும்!