Published:Updated:

திருப்பதி தரிசனம்: தவிக்கும் பக்தர்கள், நிம்மதியான தரிசனம் பெறத் தீர்வு என்ன? - வாசகர் அனுபவம்!

திருப்பதி திருமலை ( SREENIVASAN G )

அனைத்து சிரமங்களும் வேங்கடேச பெருமாளைப் பார்க்கும்போது போய் விடுகிறது என்றாலும் தேவஸ்தானம் சில வழிமுறைகளைச் செய்து கொடுக்க வேண்டியது அதன் கடமையாகும்.

திருப்பதி தரிசனம்: தவிக்கும் பக்தர்கள், நிம்மதியான தரிசனம் பெறத் தீர்வு என்ன? - வாசகர் அனுபவம்!

அனைத்து சிரமங்களும் வேங்கடேச பெருமாளைப் பார்க்கும்போது போய் விடுகிறது என்றாலும் தேவஸ்தானம் சில வழிமுறைகளைச் செய்து கொடுக்க வேண்டியது அதன் கடமையாகும்.

Published:Updated:
திருப்பதி திருமலை ( SREENIVASAN G )
திருமலை திருப்பதி - இந்தியா முழுவதும் உள்ள பெருமாள் பக்தர்களின் விருப்பமிக்க தலம். ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஏழுமலையானை தரிசனம் செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கும் பக்தர்கள் அநேகர். தினந்தோறும் திருமலையில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர்வரை தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

முன்பெல்லாம் தென்னிந்தியாவைச் சேர்ந்த பக்தர்களே அதிகமாக சுவாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தனர். காலப்போக்கில் திருப்பதி தேவஸ்தானம் டெல்லி, மும்பை என்று வட இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் தனது தேவஸ்தானக் கிளைகளைத் தொடங்கி, அவ்வப்போது திருமலை திருப்பதி பற்றிய செய்திகளை ஆன்லைன் மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்த நிலையில் வட இந்திய பக்தர்களின் வருகையும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

கடந்த ஐந்து ஆண்டுகளில் வட இந்திய பக்தர்களின் எண்ணிக்கை மொத்த பக்தர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கு இணையாக மாறியிருக்கிறது. திருப்பதியில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்து ஆந்திர, தமிழக மக்கள் தரிசனம் செய்யச் சற்று பயிற்சி அடைந்திருந்த நேரத்தில், வட இந்திய பக்தர்கள் எதற்கும் கவலைப்படாமல் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் தொடர்ந்து திருமலைக்குப் படையெடுத்து வரத் தொடங்கிவிட்டனர்.

இதனால் சமீப காலமாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற வாரத்தின் இறுதி நாள்களில் கிட்டத்தட்ட முப்பது மணி நேரம் வரை, கொட்டும் மழையிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஓரளவு கூரை வேயப்பட்ட நிழற்குடைகள் இருந்தாலும், பல நேரங்களில் ஆறு கி.மீ தூரம்வரை வரிசை நீள்கிறது. இதில் குழந்தைகள், முதியோர்கள், உடல் நலம் பாதிப்பு உள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆன்லைன் குளறுபடிகள்

முன்பெல்லாம் ஆன்-லைன் புக்கிங் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் 300 ரூபாய் தரிசனம், ரூம் புக்கிங், சேவா புக்கிங் போன்ற எல்லாவற்றையும் ஆன்லைனில் பக்தர்கள் புக்கிங் செய்ய வசதியாக ஓப்பன் செய்வார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு புக்கிங்க்கும் ஒவ்வொரு நாளைத் தேர்வு செய்து ஓப்பன் செய்கிறார்கள். இதனால் பக்தர்களுக்கு மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. எந்த நாளில் எதற்கு ஓப்பன் செய்யப் போகிறார்கள், எதற்கு குளோஸ் செய்கிறார்கள் என்பதெல்லாம் பெரிய குழப்பமாக இருந்து வருகிறது. தினமும் தவறாமல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குரிய இணையதளத்தை கவனித்து வந்தால் மட்டுமே அவற்றை அறிந்துகொள்ளமுடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி
அதேபோல் சுப்ரபாத சேவை, தோமாலை, அர்ச்சனை போன்றவற்றை ஆன்லைனில் ஓப்பன் செய்வதில்லை. ஆனாலும், அவை உடனடியாகவே புக்கிங் ஆகிவிடுகின்றன. லக்கி டிப் முறை என்று குலுக்கல் முறையில் சுப்ரபாத சேவாவை தரிசனம் செய்யக் கூடிய வாய்ப்பும் 80 சதவிகிதம் ஆந்திர மாநில மக்களுக்கே வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

‘விர்ச்சுவல் க்யூ' முறை என்று ஒன்றை ஏற்படுத்தி இருப்பதால், பக்தர்கள் தங்களுக்கான தரிசன புக்கிங் செய்வதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். முன்பெல்லாம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் 5,000 டிக்கெட்டுகள் வீதம் என மூன்று முறை ஒரு மாதத்தில் ஓப்பன் செய்வார்கள். அப்படி செய்யும் போது ஒரு முறை தவறவிட்டவர்கள் மறுமுறை புக் செய்வதற்கு வாய்ப்பாக அமையும். ஆனால் இப்போது ஒரு முறை தவறவிட்டால், பிறகு அடுத்த மாதம்வரை காத்திருக்க வேண்டும். இப்படியாக ஆன்லைன் புக்கிங் என்பது இருக்கிறதே தவிர, அதை முழுவதுமாக நம்பி பக்தர்களால் சிரமம் இல்லாத தரிசனத்தைப் பெற முடிவதில்லை.

சர்வதரிசனம்

முன்பெல்லாம் சர்வதரிசனம் செய்ய 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம்வரை காத்திருக்கச் செய்வது ஒரு நியாயமான விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது 24 மணி நேரம் 36 மணி நேரம் 40 மணி நேரம் என்றெல்லாம் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலையைப் பார்க்க முடிகிறது.

இந்த சிரமம் எல்லாம் வேங்கடேச பெருமாளைப் பார்க்கும்போது போய் விடுகிறது என்றாலும் தேவஸ்தானம் சில வழிமுறைகளைச் செய்து கொடுக்க வேண்டியது அதன் கடமையாகும்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி
TTD PHOTO

சிறு குழந்தைகளும் முதியோர்களும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு உள்ளவர்களும் குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய ஆசைப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பெரிதும் துன்பப்பட்டு போகிறார்கள். சிலர், 'அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்' என்று வெளியில் வந்து விடுவதும்கூட உண்டு. அதேபோல் சர்வ தரிசனம், 300 ரூபாய் தரிசனம் என்பதற்கான அறிவிப்பு பலகைகளை பெருமளவில் வைத்தால் நல்லது. பலரும் 300 ரூபாய் தரிசனத்தில் கிட்டத்தட்ட ஒரு கி.மீ அளவுக்குக் கூட உள்ளே சென்று மீண்டும் திரும்பி வெளியில் வந்து சர்வ தரிசன குழுவில் சேர்வதைப் பார்க்க முடிகிறது.

இந்தச் சிரமங்களை எல்லாம் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. உதாரணமாகப் பழைய தரிசன முறையான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடிய நேரத்தை அவர்களுக்கு குறித்துக் கொடுத்துவிட்டால் அந்த நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாக வந்து அதன் பிறகு 3 மணி நேரமோ இரண்டு மணி நேரமோ காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மிக அருமையான அந்தத் திட்டத்தை சோதனை முறையில் செய்து பார்த்தவர்கள் என்ன காரணத்தினாலோ அதைத் தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

திருப்பதி திருமலைக்குச் செல்கின்ற பக்தர்கள் மூன்று விதம். ஒரு சாரார் திட்டமிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பாக மனதளவில் தங்களுடைய யாத்திரையை முறையாகத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப பயண டிக்கெட், அறை எடுப்பதற்கான வசதிகள், தரிசன நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து கொண்டு வருபவர்கள்.

பிரார்த்தனைக்காக மட்டும் எனத் திருமலைக்கு வருகிறவர்கள் மற்றொரு வகை.

திடுதிப்பென்று புறப்பட்டுத் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய நினைப்பவர்கள் ஒரு ரகம்.

இதில் இந்த மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் 80 சதவிகிதம் பேர்.

இவர்கள்தான் மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள். சில முறை சுவாமி தரிசனம் செய்ய முடியாமலும் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி விடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறைப்படுத்தினால், பக்தர்களுக்கும் சுவாமிக்கும் தேவஸ்தானத்துக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு திருமலையில் 50 முதல் 60 ஆயிரம் பேர் இருந்தாலே போதுமானது என்றால் அதற்கு அதிகமாக வரும் பக்தர்களை அலிப்பிரி செக்போஸ்ட் அளவிலேயே தடுத்துக் கீழே இருக்கச் செய்து விடுவது நல்லது. மேலே அனுமதித்து விட்டு அவஸ்தைப்பட வைக்கக்கூடாது.

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு

லட்டு பிரசாதம்

நடுத்தர வர்க்கக் குடும்பத்தினருக்கு திருப்பதியில் கிடைக்கும் லட்டு பிரசாதம் மிகவும் விசேஷம். 25 ரூபாயில் கிடைத்த லட்டு பிரசாதத்தை இப்போது 50 ரூபாயாக்கிவிட்டார்கள். 300 ரூபாய் தரிசனத்தில் முன்பு இரண்டு லட்டுகள் கிடைத்து வந்தன. இப்போது ஒரு லட்டு மட்டுமே வழங்குகிறார்கள். சின்னச் சின்ன சந்தோஷங்கள் போன்று திருப்பதியில் லட்டில் கிடைக்கும் முந்திரிப் பருப்பு முன்பெல்லாம் அதிகம் இருந்து வந்தது. அந்த சந்தோஷம் இப்போது எங்கோ காணாமல் போய்விட்டதுதான் வருத்தமான விஷயம்

திருமலைக்கு வருடத்துக்கு ஒருமுறை வருபவர்கள், வருடத்துக்கு இரண்டு முறை வருபவர்கள், வருடத்துக்கு நான்கு முறை வருபவர்கள் மாதாமாதம் வருபவர்கள் என்று பலவிதமான பக்தர்கள் உண்டு. அதேபோல் படியேறி வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் இன்னமும் வழங்கப்படாமல் இருக்கிறது. இதனால் அவர்கள் மலையேறி வந்தும் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய சிரமங்கள் ஏற்படுகின்றன.

அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ, எம்.பி. சிபாரிசு கடிதங்களுக்கு தேவஸ்தானம் எந்தவித மரியாதையும் தருவதில்லை என்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருந்தாலும், பக்தர்களிடம் கனிவு காட்டாமல் சற்று எரிச்சலான போக்கைக் கடைப்பிடிப்பது, பிற மாநில பக்தர்களிடம் காட்டும் பாரபட்ச போக்கு இவையெல்லாம் சற்று வருத்தம் தருவதாகவே இருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

இவற்றை எல்லாம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து விரைவில் அனைத்து பக்தர்களும் மகிழ்வுடன் தரிசனம் செய்ய வகை செய்ய வேண்டும் என்பதுதான் ஏழுமலையானின் பக்தர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

- சுகுண ரோஷினி, விகடன் வாசகர்