Published:Updated:

செவ்வாய் தோஷ ஜாதகமா? - பலன்கள்... பரிகாரங்கள்... வழிகாட்டல்கள்

செவ்வாய் தோஷ ஜாதகமா
பிரீமியம் ஸ்டோரி
News
செவ்வாய் தோஷ ஜாதகமா

உண்மையில், நம் வீழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் நாமேதான். பழம்பெரும் ஜோதிட நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

செவ்வாய் தோஷ ஜாதகமா? - பலன்கள்... பரிகாரங்கள்... வழிகாட்டல்கள்

மனிதனின் வாழ்க்கைச் சக்கரம் எத்தனையோ மேடு-பள்ளங்களில் ஏறி இறங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. உச்சத்தைத் தொடும்போது, ‘என் உழைப்புக்குக் கிடைத்த பரிசு’ என மகிழும் நாம், பள்ளத்தில் வீழ்ந்து தவிக்கும் தருணங்களில்... ‘கிரக தோஷம் இப்படி பாடாய்ப் படுத்துதே’ என மிக எளிதாக ஜாதகத்தின் மீதும், கிரகங்களின் மீதும் பழி போட்டுவிடுகிறோம்.

உண்மையில், நம் வீழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் நாமேதான். பழம்பெரும் ஜோதிட நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

செவ்வாய்
செவ்வாய்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


பூர்வ ஜன்ம வாசனையே இந்தப் பிறவியின் பலாபலன்களுக்குக் காரணம் என்கின்றன. அவ்வகையில், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையவும் முன்வினைகள் சில காரணமாகின்றன.

பூர்வ ஜன்மத்தில் பெற்றோரைச் சரியாகக் கவனிக்காதவரும் முதிய வயதில் அவர்களை முறையாகப் பேணாதவரும் மறு ஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவார்கள். சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும்போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்குகிறது. ஆக, அவர் பிறக்கும்போது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம்.

எனில், ‘தோஷ ஜாதகத்துடன் பிறக்கும் ஒருவன் அதிலிருந்து மீள வழியே இல்லையா, பரிகாரம் கிடை யாதா? சகல தோஷங்களையும் அனுபவித்தே தீர வேண்டுமா?’ எனும் கேள்விகள் எழலாம்.

விதியை மதியால் வெல்லலாம்! பெரும் கடற்பரப்பில் திசைதெரியாமல் அல்லாடுபவன்தான் கவலைக்கு உரியவன். திசைமானியோடு உரிய திசை அறிந்து பயணிப்பவன், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை அல்லவா?

திசை தெரிந்துவிட்டால், பயணிக்கவேண்டிய பாதை எது, அதில் என்னென்ன தடைகள் உண்டு என்பவை எளிதில் புலப்பட்டுவிடும். அதற்குத் தயாராக அவன் தன் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டு தொடர்வான். வாழ்க்கைப் பயணத்துக்கும் ஒரு திசைகாட்டி உண்டு. அதுதான் ஜனன ஜாதகம்.

ஜாதகத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து, என்ன காரணத்தால் இந்த தோஷத்துக்கு ஆளானோம் என்பதைத் தெளிந்துணர்ந்து, அதற்குக் காரணமான பூர்வஜன்ம குற்றம் - குறைகளுக்கு நிவர்த்தி தேடினால், தோஷங்களின் பாதிப்பு குறையும். நாமும் செவ்வாய் தோஷத்துக்கான காரண காரியங்கள், கிரக நிலைகள், பாதிப்புகள், பரிகாரங்கள், பலன்கள் ஆகியவை குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.

செவ்வாய் தோஷ ஜாதகமா? - பலன்கள்... பரிகாரங்கள்... வழிகாட்டல்கள்

மங்கல நாயகன் செவ்வாய்!

அங்காரகன், மங்கல நாயகன் என ஞான நூல்கள் போற்றும் கிரகமூர்த்தி செவ்வாய் பகவான். சூரியனுக்குத் தெற்கில் திரிகோண மண்டலத்தில் தென்முகமாக வீற்றிருப்பவர்.

இவரின் அதிபதி முருகக்கடவுள். சூரியன், சந்திரன், வியாழன் மூவரும் இவருக்கு நட்பு கிரகங்கள். புதனுக்கு இவர் பகை. மகரம் உச்ச வீடு; கடகம் நீச வீடு. இவருக்கு உகந்த நிறம் சிவப்பு. உலோகம் செம்பு. இவரைப் பூஜிக்க உகந்த மலர் செண்பகப்பூ. நமது உடலில் கைகளும், தோளும் செவ்வாயின் சாந்நித்தியம் பெற்றவை.

இந்தக் கிரக மூர்த்தியின் அனுக்கிரகம் உள்ள ஒருவரை, ‘கடன்காரன்’ என்று எவரும் இகழ முடியாது. ஆமாம்! கடன் இல்லாத வாழ்வை தரும் தெய்வம் இவர். அதுமட்டுமா? சகோதர-சகோதரிகள் நல்லவிதமாக அமையவும், மங்கல காரியங்கள் தொய்வின்றி நிகழவும், வீடு, மனை, தொழில் முதலானவை பழுதின்றி திகழவும் இவரது அனுக்கிரகமே காரணம்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிலைகள்

ஒருவரது ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங் களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்.

2-ல் செவ்வாய்: தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். அதில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேச்சு வெளிப்படும். அதனால் பிரச்னைகள் எழும். குடும்பத்துக்கு உரிய இடமாகவும் இது வருவதால், குடும்ப ஒற்றுமையைக் கெடுப்பதாகவும் அமையும். மனைவியிடமும் மனைவி வழி உறவுகளிடமும் பேச்சாலேயே பிரச்னையை உண்டாக்குவார்.

4-ல் செவ்வாய்: 4-ஆம் இடம் என்பது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், கடுமையான பிடிவாதம் இருக்கும். அதுவே மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக்கும்.

7-ல் செவ்வாய்: ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணைக்கானது மட்டுமல்லாது, கூட்டு வியாபாரத்தையும் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக் கொண்டிருப்பார். இவர்களுக்கு 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது.

பொதுவாகவே ரத்தம், விந்து, வீர்யம், மர்ம ஸ்தானத்துக்கு உரியவராகச் செவ்வாய் வருகிறார். மர்ம ஸ்தானத்தின் இயல்பு மற்றும் இயக்க நிலைகளை நிர்ணயிக்கும் பங்கு செவ்வாய்க்கு உண்டு. எனவேதான் திருமணத்தின்போது அத்தனை முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தோஷத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அறிவுப் பசி, உடற்பசியோடு வயிற்றுப்பசியும் கூடுதலாகவே இருக்கும். இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய்: எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். நிலையாமைக்கு உரியது 8-ஆம் இடம் என்பதால், வாழ்வில் ஸ்திரத் தன்மை இருக்காது.

12-ல் செவ்வாய்: இந்த இடம் அயன, சயன, சுக ஸ்தானத்துக்கு உரியது. இதில் செவ்வாய் அமரும்போது, நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேசவிடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும், நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

எந்த ராசிக்கு என்ன பாதிப்பு?

மிதுன ராசிக்கு சங்கடங்களைத் தரும் சத்ரு ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருகிறார். கன்னி ராசிக்கு அவர் அஷ்டமாதிபதி. மகரத்துக்கு பாதகாதிபதி. கும்ப ராசிக்காரர்களுக்கு முடக்கிப் போடும் பகையாளிகளாகத் திகழ்பவர். ஆகவே, இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு, கூடுதல் கவனத்துடன் செவ்வாயின் நிலையைப் பார்க்க வேண்டும்.

மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கும், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் அதிபதி. அனுஷ நட்சத்திரத்தை எந்த தோஷமும் பாதிக்காது. ஆகவே, இவர்களுக்கெல்லாம் தோஷம் ஒன்றும் செய்யாது என்றொரு கருத்து உண்டு. ஆனால் உண்மை அப்படி அல்ல!

எந்த நட்சத்திரக்காரராக இருந்தாலும், செவ்வாய் தோஷம் இருப்பின், அது தன் வேலையைக் காட்டத்தான் செய்யும்.

செவ்வாய் தோஷம்...சில பரிகாரங்கள்!

செவ்வாய் தோஷத்துக்குச் செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பது நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வு களைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளிச் சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாக சேர்ப்பது நல்லது.

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள (நிலம், சகோதரர்கள் முதலான...) விஷயங்களில் நேர்மறையான அணுகு முறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

அதேபோல் இயன்றவரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகளையும் பெற்றோரையும் ஏமாற்றி அபகரிக்க முயற்சிக்காதீர்கள். முதல் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டிய கட்டடமாக வாங்குவது சிறப்பு.

நிறுவனத்தை நடத்துபவராக இருந்தால், தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பே கூலியைத் தந்துவிடுங்கள். ஊர்க்காவல் முதல் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் நன்று.

ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை செம்மையுறும்!

கடன் தொல்லை அகற்றும் மங்கல ஸ்தோத்திரம்!

கடன் இல்லாத வாழ்க்கைதான் கவலை இல்லாத வாழ்க்கை. பொருளாதார ரீதியாக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் கடன் பிரச்னைகள், நமது ஒட்டுமொத்த நிம்மதியையும் அழித்துவிடும். கடன் இல்லாமல் வாழ என்ன செய்யலாம்?

செவ்வாய் பகவானை வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது ஸ்காந்த புராணம்.

செவ்வாயின் திருவருள் இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை அமையுமாம். சுக்ராசார்யர் உபதேசம் செய்த அற்புதமான ஸ்தோத்திரம் ஒன்று ஸ்காந்த புராணத்தில் உள்ளது.

அதை, தினமும் பாராயணம் செய்து செவ்வாய் பகவானை வழிபட, பூமியில் குபேரனைப் போல வாழலாம்; கடன் நீங்கும். மிக அற்புதமான அந்த ஸ்தோத் திரத்தின் இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உங்களுக்காக...

மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாகாய: ஸர்வகர்ம விரோதக:


கருத்து: மங்கலத்தைக் கொடுப்பவர், பூமியின் புத்ரன், கடனை போக்குபவர், பொருளை கொடுப்பவர், ஸ்திரமான ஆசனத்தை உடையவர், பெருத்த சரீரமுடையவர், சர்வ கர்மாக்களையும் தடுப்பவர் செவ்வாய் பகவான்.

லோஹிதோ லோஹிதாக்ஷஸ்ச ஸாமகானாம் க்ருபாகர:
தராத்மஜ: குஜோ பௌமோ பூதிதோ பூமிநந்தன:


கருத்து: சிவந்த நிறமுள்ளவர், சிவந்தக் கண்களை யுடையவர், சாம கானம் செய்கிறவர்களுக்குக் கருணை செய்கிறவர், பூமியின் புத்திரர் செவ்வாய். ஐஸ்வர்யத்தையும் பூமிக்கு ஆனந்தத்தையும் கொடுப்பவரான செவ்வாய் பகவானை வணங்குகிறேன்.

செவ்வாய் தோஷம் சில விதிவிலக்குகள்!

- ஜோதிடஸ்ரீ முருகப்ரியன்

செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க, செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து, விதி விலக்குகள் தரப்பட்டுள்ளன. அதன்படி அமைந்தால் அவர்களுக்குச் செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம்.

 கடகம், சிம்மம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் எந்த வீட்டி லிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

 செவ்வாய் இருக்கும் 2-ம் இடம், மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷம் இல்லை

 செவ்வாய் இருக்கும் 4-ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷம் இல்லை

 செவ்வாய் இருக்கும் 7-ம் இடம் கடகம், மகரமானால் தோஷம் இல்லை.

 செவ்வாய் இருக்கும் 8-ம் இடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.

 செவ்வாய் இருக்கும் 12-ம் இடம் ரிஷபம், துலாம் ஆனால் தோஷம் இல்லை.

 சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

 குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.

 சந்திரனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 புதனுடன் சேர்ந்தாலும் புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

 சூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

 செவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி, லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளிலிருந்தால் தோஷம் கிடையாது.

உதாரணமாக கும்ப லக்ன ஜாதகருக்குக் கும்ப ராசியில் செவ்வாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவரது ஜாதகத்தில், சனி துலா ராசியில் இருப்பதாகக் கொள்வோம்.

`லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு’ என்று எண்ணத் தோன்றும். ஆனால் கும்ப ராசியின் அதிபதியான சனி, லக்னத்துக்கு 9-வது வீடான துலாத்தில் இருப்பதால், செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.

 8, 12-ல் அமைந்த செவ்வாய் இருக்கும் ராசியானது மேஷம், சிம்மம், விருச்சிகம் என்றால் செவ்வாய் தோஷம் இல்லை.

 செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம் ஆகியவை. உச்ச வீடு மகரம். எனவே மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்குச் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.

 செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், சந்திரன், குரு. இவர்களின் வீடான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

அதிர்ஷ்ட பூக்கள்
அதிர்ஷ்ட பூக்கள்

அதிர்ஷ்ட பலன்கள் அதிகரிக்க...

ஜாதகத்தில் சூரியன் வலுத்திருப்ப வர்கள் செந்தாமரையைக் கொண்டு சூரியனை அர்ச்சித்தால் அதிர்ஷ்டம் கூடும். சந்திர பலம் உள்ளவர்கள் வெள்ளாம்பல் மலர்களால் சந்திரனை அர்ச்சிப்பதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாகும்.

இதுபோல் மற்ற கிரகங்களுக்கும் குறிப்பிட்ட மலர்களால் அர்ச்சிக்கும் போது, குறிப்பிட்ட கிரகம் மகிழ்ந்து நமக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித் தரும்.

அந்த வகையில் மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள் செண்பக மலரும், ரிஷப, துலாம் ராசிக்காரர்கள் வெண்தாமரையும், மிதுன, கன்னி ராசிக்காரர்கள் வெண் காந்தள் மலரும், கடக ராசிக்காரர்கள் வெள்ளாம்பல் மலரும், சிம்ம ராசிக்காரர்கள் செந்தாமரையும், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் முல்லையும், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கருங்குவளையும் (கருநீல சங்கு புஷ்பம்) கொண்டு அர்ச்சித்து தெய்வ வழிபாடு செய்யலாம்.

செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமியை, யோக பலம் உள்ள வெள்ளிக்கிழமையில் 1,008 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்குச் சகல செல்வங்களும் சேரும்.

பூக்களுக்குச் சுக்கிரன் அதிபதி. சுக்கிரனுக்கு அதிதேவதை மகாலட்சுமி. ஆக, சுக்கிரனையும் மகாலட்சுமியையும் வழிபடுவோருக்கு இகலோக வாழ்வுக்கான அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

- கே.மீனா, மதுரை-3

செவ்வாய் தோஷ ஜாதகமா? - பலன்கள்... பரிகாரங்கள்... வழிகாட்டல்கள்

திருஷ்டி போக்கும் வாழை!

புது வீட்டின் முகப்பில் வாழை மரங் களை வளர்த்தால், கண் திருஷ்டி விலகும். கண் திருஷ்டி விழுவதைத் தடுக்கும் சக்தி வாழைக்கு உண்டு.

வாழை மரங்கள் ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். அதனால், நம் வீட்டின் மீது எந்த மாதிரியான திருஷ்டி இருந்தாலும் அது உடனடியாகவே காணாமல் போய்விடும். பொதுவாகவே, இயற்கைத் தாவரங்கள், செடி கொடிகளை வீட்டின் முகப்பில் வளர்ப்பது நல்லது.

- செ.ராஜராஜன், செஞ்சி