Published:Updated:

செவ்வாய் மேடும் நவகிரகங்களும்!

செவ்வாய் மேடு
பிரீமியம் ஸ்டோரி
செவ்வாய் மேடு

ரேகை சாஸ்திர பலன்கள் - ஜோதிடர் டி.எஸ்.என்

செவ்வாய் மேடும் நவகிரகங்களும்!

ரேகை சாஸ்திர பலன்கள் - ஜோதிடர் டி.எஸ்.என்

Published:Updated:
செவ்வாய் மேடு
பிரீமியம் ஸ்டோரி
செவ்வாய் மேடு

நவகிரகங்களில் தனியிடம் பெற்றவர் செவ்வாய். இவருக்கு ‘குஜன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘கு’ என்றால் பூமி; ‘ஜன்’ என்றால் `பிறந்தவர்' எனப் பொருள்; ஆகவே குஜன்.பூமி புத்திரன் என்பார்கள்.

செவ்வாய்
செவ்வாய்


பூமி, வெப்பத்துடன் இணைந்திருக்கும். செவ்வாயிடமும் வெப்பம் உண்டு. பூமியில் விதைக்கப்படும் விதையானது, நீரின் துணையோடு அதிலிருக்கும் வெப்பத்தால் முளை விடும். படைப்புக்கு வெப்பத்தின் துணை அவசியம். பிரம்மன், ரஜோகுண சேர்க்கையில் படைப்பை நிகழ்த்துகிறார் என்கிறது புராணம். இந்த ரஜோகுணத்துடன் இணைந்தவர் செவ்வாய். அவரின் நிறம் சிவப்பு என்கிறது சாஸ்திரம்.

‘அக்னிர்மூர்த்தா’ என்ற மந்திரத்தை அவரை அழைப்பதற்காகப் பயன்படுத்தச் சொல்கிறது வேதம். இதில் வரும் ‘அக்னி’ எனும் சொல், வெப்பத்தைச் சுட்டிக்காட்டும். செவ்வாய்க்கு அதிதேவதை- பூமி; பிரத்யதி தேவதை- க்ஷேத்ரபாலன். க்ஷேத்ரம் என்றால் பூமி; பாலன் என்றால், காப்பாளன் எனப் பொருள். இப்படி, பூமியின் சம்பந்தம் செவ்வாய்க்கும் அதன் அதிதேவதைகளுக்கும் உண்டு.

வாழ்க்கைத் தரத்தை நிலைபெறச் செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும் என்கிறது ஜோதிடம். போர்வீரர்கள், வேட்டையாடுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள், அரசர்கள், நீதிபதிகள், வேள்வி செய்பவர்கள், மந்திரிகள், படைத்தலைவர்கள் ஆகியோரை உருவாக்கி, அவர்களது பணியில் வெற்றிபெற வைப்பதில், செவ்வாய்க்கு தனிப் பங்கு உண்டு. இவர்கள், கருணை உள்ளம் படைத்தவர்களாகவே இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, இலக்கை நோக்கிச் செயல்படும் சுறுசுறுப்பை செவ்வாய் அளிப்பார்.

செவ்வாய் மேடு
செவ்வாய் மேடு


சுறுசுறுப்பு, செயல்பாடு, சிந்தனையோட்டம், தன்மானம், வீரம், தைரியம், கண்டிப்பு, ஆர்வம், பிடிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் செவ்வாயின் சேர்க்கையில் முழுமை பெற்று விளங்கும்.

அத்யுச்சம், உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், ஸீஹ்ருத்க்ஷேத்ரம் போன்ற பலம் பெற்ற செவ்வாய், வாழ்க்கையில் தடையில்லா மகிழ்ச்சியை அளிப்பார். அதிநீசம், நீசம், சத்ருக்ஷேத்ரம், மௌட்யம், அஸ்தமனம்... போன்ற பலமிழந்த நிலையில், இன்னல்களுக்கு இரையாக்கிச் சங்கடத்தைச் சந்திக்கவைப்பார் என ஜோதிடம் விளக்கும்.

விண்வெளியில் சூரியனுக்கும் குருவுக்கும் இடையில் செவ்வாயின் ஓடுபாதை அமைந்துள்ளது. செவ்வாய் சூரியனுடன் இணைந்தால்... வெப்பம் மேலிட்டு, சாகஸ வேலைகளில் ஆராயாமல் ஈடுபடவைத்து துயரத்தில் ஆழ்த்துவார்.

சந்திரனுடன் செவ்வாய் இணையும்போது, செவ்வாயின் வெப்பம் தணிந்து, இதமான சூழலை உருவாக்கி, மனதை ஆனந்தத்தில் ஆழ்த்துவார். இதை, ‘சசிமங்கள யோகம்’ என்று பெருமையாகச் சொல்கிறது ஜோதிடம்.

புதனோடு இணைந்தால், சிந்தனையில் சுணக்கம் எழாமல் செய்து, நம்மை உசுப்பி செயல்பட வைத்து, வெற்றி பெறவைப்பார்.

குருவோடு இணைந்தால் அறவழி சிந்தனைகளை வெளிப்பட வைத்து, பொதுநலத் தொண்டில் இன்பம் காண்பவராக நம்மை மாற்றிவிடுவார்.

சுக்கிரனுடன் இணைந்தால், உலக சுகத்தை சுவைத்து மகிழ வைப்பார். வலுவான செவ்வாயுடன் வலுவான சுக்கிரன் இணையும் போது, புகழுடன் வாழச் செய்வதுடன், இறந்த பிறகும் புகழுடன் திகழவைப்பார்.

சனியுடன் இணைந்தால், சனியிடமிருந்து வலுப்பெற்று, விபரீத விளைவுகளைச் சந்திக்கவைப்பார். காற்றும் நெருப்பும் இணைந்ததுபோல் ஆகிவிடும், சனி- செவ்வாய் சேர்க்கை.

இதை, ‘அக்னிமாருத யோகம்’ எனக் குறிப்பிடுகிறது ஜோதிடம். நெருப்பு கொழுந்து விட்டு எரியும் போது, காற்று அதற்கு உதவி புரிந்து நெருப்பை மேலும் மேலும் வளரச் செய்யும். அதேபோல் சனியின் சேர்க்கை, செவ்வாய்க்கு வலுவூட்டி, ரஜோ குணத்தைப் பெருக்கி, அவசர கோலத்தில் நம்மைச் செயல்படவைத்து, துயரத்தை சந்திக்கவைக்கும்.

ராகுவுடன் இணைந்தால் செயல்பாடு சிறக்காமல் போகும் அல்லது காரியத்தை அரைகுறையாக முடிவடைய வைப்பார். செவ்வாய், கேதுவுடன் சேர்ந்தால், நன்மையை விட தீமையைச் சந்திக்க வைப்பார் என்கிறது ஜோதிடம்.

சரி, பாதிப்பான கிரகச் சேர்க்கையை செவ்வாய் பெற்றிருந்தால் என்ன செய்வது? தேவஸேனாதிபதியை மகிழ வைத்தால், செவ்வாய் மனமிரங்கி அருள்வார் என்பார்கள். செவ்வாயின் இடையூறு விலக, முருகனை வழிபடுவர். நாமும் செவ்வாய் தோஷம் போன்ற பாதிப்புகள் நீங்கவும், செவ்வாய் கிரகத்தால் நற்பலன்கள் பெருகவும் முருகனை வழிபட்டு அருள்பெறுவோம்.

ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் செவ்வா யின் நிலையை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் கணிக்கப்படுவது போன்று, பஞ்சாங்குலி எனும் ரேகை சாஸ்திரத்திலும் செவ்வாய் மேடு பெற்றிருக்கும் அமைப்பு, அதிலுள்ள குறியீடுகள், ரேகைகள் ஆகியவற்றைக் கொண்டு பலன்கள் சொல்லப்படுகின்றன.

உள்ளங்கையில் கிரக மேடுகள்!

பஞ்சாங்குலி எனும் ரேகை சாஸ்திரத்தின் முக்கியமான பகுதி உள்ளங்கையில் உள்ள மேடுகள். ஒவ்வொரு மேடும் நமது வாழ்வின் ஒருசில அம்சங்களைக் கட்டுப்படுத்தும் கேந்திரம் ஆகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரகம் அதிபதி.

அந்த வகையில் செவ்வாய் மேடு சொத்து சேர்த்தல், செல்வம் ஈட்டுதல், ஈட்டிய செல்வத்தை அனுபவித்தல், வாழ்க்கை, மாங்கல்யபாவம், தைரியம், மனோபலம் போன்ற பலாபலன்களைச் சுட்டிக்காட்டும்.

செவ்வாய் மேடு இரண்டு வகையாகும். மேல் செவ்வாய் மேடு வளர்ச்சி வாய்ப்புகளையும், கீழ்ச்செவ்வாய் மேடு வீழ்ச்சிக்கான அறிகுறிகளையும் காட்டும்.

இனி செவ்வாய் மேடுகளில் அமைந்திருக்கும் நவ கிரக சின்னங்களுக்கு ஏற்ப, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

செவ்வாய் மேடும் நவகிரகச் சின்னங்களும்!

நவகிரகச் சின்னங்கள்
நவகிரகச் சின்னங்கள்


கையில் உள்ள ஒவ்வொரு நவகிரக மேட்டுக்கும், ஒரு குறிப்பிட்ட சங்கேதக் குறி உண்டு. ஜோதிட சாஸ்திரத் தில், எந்த ராசி வீட்டில் எந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச நீச நிலை இருக்கிறது என்பதை வைத்து, ஜாதகப் பலன்கள் கணக்கிடப்படுகின்றன.

அதுபோல, எந்த மேட்டில் எந்தக் கிரகத்துக்குரிய சின்னம் - அடையாளம் இருக்கிறது என்பதை வைத்து, எந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச நீச நிலை இருக்கிறது என்பதைக் கண்டு, கையிலும் பலன் சொல்ல முடியும். சரியாகக் கணித்தால், ஜாதகத்தில் காணப்படும் நிலையும், கையின் கிரக மேடுகளின் குறிகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.

கிரகங்களின் சின்னங்கள் மற்றும் பல சின்னங்களின் அடையாள விளக்கங்களை இந்தப் பக்கத்திலுள்ள அட்டவணையில் காணலாம் அவற்றில் எவ்விதமான குறிகள் நம் உள்ளங்கையில் செவ்வாய் மேட்டில் இடம் பெற்றுள்ளன என்பதை வைத்து பலன்களை அறியலாம்.

ஒரு கோடு: அபார தைரியம் உண்டாகும்.

பல கோடுகள்: பிறரை இம்சிக்கும் இயல்பு.

குறுக்குநெடுக்குக் கோடுகள்: சண்டை குணம்.

புள்ளி: போர் அல்லது சண்டையில் அடிபடுதல்.

பெருக்கல் குறி: யுத்தம்அல்லது எதிர்பாராத காரணத் தால் உயிராபத்து.

நட்சத்திரம்: ராணுவம் காவல் துறையில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும்.

சதுரம்: அதிக அளவிலான கோபம்.

முக்கோணம்: திட்டமிட்டுச் செயல்படும் திறமை.

வட்டம்: ராஜ தந்திரம்.

வலை: தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணம்.

செவ்வாயின் சின்னம்: ஆதிக்கம் செலுத்துதல், உடல் வலிமையைக் காட்டி முக்கியத்துவம் பெற முயற்சி செய்தல்.

குருவின் சின்னம்: பிறரை வசீகரிக்கும் தன்மை.

சனியின் சின்னம்: கடுமையான அல்லது கொடும் குணம் இருக்கும்.

சூரியனின் சின்னம்: அதீத தற்பெருமை.

புதனின் சின்னம்: எதிர்பாராத வகையில் பொருள் ஈட்டுதல்.

சுக்ரனின் சின்னம்: உடலியல் ஆசையில் ஈடுபாடும் அவசரமும்.

சந்திரனின் சின்னம்: மனக்குழப்பம் சிந்தனை தடுமாற்றம்.

ராகுவின் சின்னம்: காரியத் தடை அல்லது தாமதம்.

கேதுவின் சின்னம்: சோர்வு, தயக்கம் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism