Published:Updated:

19 - ம் தேதி சந்திரகிரகணத்தின் ஜோதிட முக்கியத்துவம் என்ன... பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?

நவம்பர் 19 - ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் மிகவும் அரிய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திரகிரகணம் பிற்பகல் 12: 48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும். கிரகணம் நிகழும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பரிகாரங்கள் சொல்லப்படுவதுண்டு. அந்த நாளில் தவறாமல் தர்ப்பணங்களும் தானங்களும் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. கிரகண வேளைகளில் செய்ய வேண்டியவை போன்றே செய்யக் கூடாதவை என்னும் பல விஷயங்கள் உண்டு. பொதுவாக கிரகண வேளையில் உண்பது, உறங்குவது, கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பது ஆகியன கூடாது என்பார்கள்.

முழுமையான சந்திர கிரகணம்
முழுமையான சந்திர கிரகணம்

நாளை மறுதினம் (19 நவம்பர்) சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் மிகவும் அரிய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. நவம்பர் 19 நிகழும் இந்தச் சந்திரகிரகணம் 12: 48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் ஆறுமணி நேரங்கள் நீடிக்கும் இந்த கிரகணம் மிகவும் அரிதானது என்றும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்வது என்றும் கூறுகிறார்கள். இந்தச் சந்திரகிரகணம் இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் குறுகிய நேரத்திற்குத் தெரிய வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள்.

நம் பஞ்சாங்கங்களில் பிலவ ஆண்டில் கிரகண அனுஷ்டானங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த கிரகணங்களுக்கு அனுஷ்டானங்கள் செய்ய வேண்டுமா என்னும் குழப்பம் பலரிடம் உள்ளது. இதுகுறித்து காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாசார்யரிடம் கேட்டபோது,

"வரவிருக்கும் கார்த்திகை பௌர்ணமி அன்று சந்திர கிரகணம் பாரதீய ப்ரமாண நேரத்தின்படி பிற்பகல் 12.49 முதல் 16.17 க்குள் முடிகிறது. இந்த கிரகணம் புறநிழல் கிரகணமாகவே அமைகிறது. புறநிழல் கிரகணங்கள் இயந்திரங்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். வெறும் கண்ணுக்குத் தெரியாது. எனவே இதை அனுஷ்டான விஷயமாக சாஸ்திரங்கள் ஏற்கவில்லை.

சண்முக சிவாசார்யர்
சண்முக சிவாசார்யர்

நம் பாரத தேசத்தின் அனைத்து ஊர்களிலும் கிரகண காலம் என்பது பகல் வேளையாக அமைவதால் இந்த சந்திர கிரகணம் நமக்குத் தெரிய வாய்ப்பேயில்லை. பௌர்ணமி அன்று சூரிய அஸ்தமன வேளையில்தான் சந்திரன் உதயமாவார். எனவே அப்போதுதான் சந்திரனைக் காணமுடியும். சந்திரன் தெரியாத நிலையில் சந்திர கிரகணத்தையும் காணமுடியாது. எனவே சந்திரகிரகணங்களுக்கு என்று இருக்கும் அனுஷ்டானங்கள் எதையும் நாளை செய்யத் தேவையில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு