Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் சிம்ம ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் சிம்ம ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சிம்மம்: மனதில் உதித்ததை மறைக்காமல் பேசுபவர்களே! சுக்ரன் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தமிழ் வருடம் பிறப்பதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். வீட்டில் தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்கள் ராசியிலேயே இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு வரக்கூடும். முடிந்தவரை சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

இந்த வருடம் முழுக்க சனிபகவான் 6-ல் நீடிப்பதால் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழி சொத்தை பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வாய்தா வாங்கி தள்ளிப் போய் கொண்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவிற்கு வருமானம் உயரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

9-ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு, தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஆனால் கேது 3-ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லும் விசா கிடைக்கும்.

குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வுகள் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். அவர்களிடம் கனிவாக நடத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள்.

சிம்மம்
சிம்மம்

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்...

17.5.2022 முதல் 26.06.2022 வரை செவ்வாய் 8-ல் நிற்பதால் வீடு, மனை வாங்கும் போது தாய்ப்பத்திரத்தை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். சகோதரங்களுடன் சண்டை, சச்சரவுகள் வந்து போகும். தாய்வழி உறவுகளுடன் கருத்து மோதல்கள் ஏற்படும்.

30.12.2022 முதல் 23.1.2023 வரை உள்ள காலகட்டங்களில் சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரமாக விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகனம் பழுதாகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும்.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபத்தை காண்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சின்ன இடத்தில் அவஸ்தைப் பட்டீர்களே! பெரிய இடமாகவும் மக்கள் கூடும் முக்கிய இடமாகவும் புது கடை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, பெட்ரோ கெமிக்கல், இரும்பு, கடல் உணவு வகைகள் மூலம் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். தை,பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும்,அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். மார்கழி, மாசி மாதங்களில் போட்டிகள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்யோகஸ்தர்களே, திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களில் நெடுநாள் கனவான பதவியுயர்வும், சம்பள உயர்வும் வருட மத்திய பகுதியில் உண்டு. எப்பொழுதும் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். ஆனி மாதத்தில் வெளிநிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக்குறைவுகளை தந்தாலும்! பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism