
கடன் பிரச்னைக்கு எளிய பரிகாரங்கள்

கடன் பிரச்னை விரைவில் தீர்வதற்கு ஞானநூல்கள் எளிய வழிபாடுகள், பதிகங்கள் மற்றும் பரிகாரங்களை விளக்குகின்றன. அவற்றை முறைப்படி கடைப்பிடித்தால், நம்மை வாட்டும் கடன்கள் விரைவில் நீங்கும்; வாழ்வு செழிக்கும்!
கடன் தொஷம் நீங்கும்
முந்தைய வினைகளின் காரணமாக, உண்டான கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு துணை செய்யும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வர வேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி, முடிந்த அளவு படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கட்டாயம் கடன்கள் அடைபடும்.

காசு - பணம் சேரும்
குளிகை நேரத்தில் வாங்கிய கடனில் ஒரு பங்கை அடையுங்கள். நிச்சயம் முழு கடனும் தீரும். அதுபோல குளிகை நேரத்தில் கடனே வாங்காதீர்கள். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை மனதில் தியானித்து `வாசி தீரவே, காசு நல்குவீர்... படித்து வேண்டிக்கொண்டால், விரைவில் கடன் தீரும். வீட்டில் பொன்பொருள் சேரும்.
கடன் சஞ்சலங்கள் விலகும்
சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கும்.
கஷ்ட சூழல்கள் அகலும்
கோமாதாவின் வழிபாடு செல்வ கடாட்சம் தருவதாகும். காலையில் விழித்ததும் பசு மாட்டை தரிசிப்பதும், தினமும் பசுவுக்குக் கீரை மற்றும் பழங்கள் கொடுப்பதுவும் சிறப்பான பலனைத் தரும். ஆலயங்களில் நடைபெறும் கோபூஜைகளில் கலந்து கொண்டு தரிசிப்பதால் வீட்டில் வறுமை நிலையும் கஷ்ட சூழலும் அகலும்; தொட்டது துலங்கும்.

லட்சுமி கடாட்சம் பெருகும்!
கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண் கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும். பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண் தாமரை ஆகியவை செல்வச் சாந்நித்தியம் அளிப்பவை. இவை வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
தன வரவு கூடும்
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.