
14.4.2023 முதல் 13.4.2024 வரை
நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் 14.4.2023 கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம் லக்னத்திலும், சுக்கிரன் ஓரையிலும், மந்தயோகத்திலும் சந்திர மகாதசையில் ராகு புத்தி, ராகு அந்தரத்திலும், சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது ஆண்டு மதியம் 1.57 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மதியம் 2.59 மணிக்கும் பிறக்கிறது.

மேஷம் 65%: சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ள உங்கள் ராசிக்கு 10-வது ராசியில் இந்த சோபகிருது வருடம் தொடங்குவதால் உங்களின் சாதனை தொடரும். திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். எதையும் முன்னரே திட்டமிடுவீர்கள். கணவர், உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டு. ஆரோக்கியம் கூடும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நவீன எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகள் செய்து கடையை அலங்கரிப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும் என்றாலும், இந்த வருடம் கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். வேலைச்சுமை அதிகரித்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆக மொத்தம், இந்தப் புத்தாண்டு ஆரோக்கியத்திலும்,
பண விஷயத்திலும் திருப்பங்கள் கொண்டதாக அமையும்.

ரிஷபம் 78%: சொன்ன சொல்லை நிறைவேற்றும் ரிஷப ராசிக்காரர்களின் ராசிக்கு 9-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கணவரால் பாராட்டப்படுவீர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் திருப்பித் தருவார்கள். விலகிச் சென்ற பழைய சொந்தங்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்கள் மதிப்பார்கள். பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிகாரிகளிடத்தில் செல்வாக்கு கூடும். புதிய வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தப் புத்தாண்டு குடும்பத்தில் அமைதியையும், வசதி வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

மிதுனம் 87%: போற்றுதல், தூற்றுதலை சமமாக எடுத்துக்கொள்ளும் மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்தப் புத்தாண்டில் குருபகவான் நுழைவதால் எதிர்பாராத பணவரவு, புகழ் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர், உங்கள் செயல்களுக்குப் பக்க பலமாக இருப்பார். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். சகோதர வகையில் இருந்த மன வருத்தம் நீங்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். எதிலும் வெற்றி கிட்டும். திடீர்ப் பயணங்கள் அமையும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இந்த சோபகிருது புத்தாண்டு எதிர்பாராத செலவுகளில் உங்களை சிக்கவைத்தாலும் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் அமைத்துத் தரும்.

கடகம் 55%: எதிலும் புதுமையை விரும்பும் கடக ராசிக்காரர்களுக்கு ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர், உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்பை ஒப்படைப்பார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். எதிர்பாராத பணவரவு உண்டு. புதிய முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலருக்கு விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக்கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு, எந்த வேலையையும், கொஞ்சம் அலைய வைத்து முடிக்க வைத்தாலும் முன்னேற்றப் பாதையில் தடைப்படாமல் செல்ல வைக்கும்.

சிம்மம் 64%: உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சாமல் அன்புக்கு அடிமையாகும் சிம்ம ராசிக்காரர்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த சோபகிருது ஆண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். கணவர், உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மாமனார், மாமியார் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஏளனமாகவும் இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும். உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். ஆக மொத்தம், இந்த சோபகிருது வருடம் திடீர் வெற்றியையும் புகழையும், பண பலத்தையும் தருவதாக அமையும்.

கன்னி 58%: தொடங்கியதை முடிக்கும் வரை துவளாத கன்னி ராசிக்காரர்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்த சோபகிருது வருடம் பிறப்பதால் புதிய யோசனைகள் பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். கணவரால் பெருமையடைவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். தோழிகளால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. சிலர் உங்கள் வாயைக் கிளறிப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வருடத்தின் மத்தியில் பிள்ளைகளால் பிரச்னை, மனக்குழப்பம், மாமனார், மாமியார் வகையில் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். வைகாசி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. இந்தப் புத்தாண்டு சமூகத்தில் அந்தஸ்தையும் நிம்மதியையும் தருவதாக அமையும்.

துலாம் 72% : நெருக்கடி நேரத்திலும் நீதி தவறாத துலாம் ராசிக்காரர்களின் ராசிக்கு 4-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றும். கணவர், உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு செயல்படுவார். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குற்றம், குறை கூறிக்கொண்டிருந்த மாமியார், நாத்தனார் மனசு மாறும். பூர்வீகச் சொத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்குவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்தங்கள் மதிப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் எதிராக இருந்த அதிகாரியின் மனம் மாறும். திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். இந்த சோபகிருது ஆண்டு உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

விருச்சிகம் 63%: விருப்பு, வெறுப்பு இல்லாத விருச்சிக ராசிக்காரர்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த சோபகிருது ஆண்டு பிறப்பதால் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவர், உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வழக்கு சாதகமாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தேவையான பணம் கிடைக்கும். சொத்து பிரச்னைகள் தீரும். உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். ஆவணி, மாசி மாதங்களில்
இட மாற்றம் உண்டு. இந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்கவைத்தாலும் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அமைத்துத் தரும்.

தனுசு 90%: பாகுபாடு பார்க்காமல் பழகும் தனுசு ராசிக்காரர்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்ந்திருந்த நீங்கள், உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவரின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னைகளுக்குப் புது வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புது நிலம், வீடு வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 26.8.2023 முதல் 19.12.2023 வரை ஏழரை சனி தொடர்வதால் சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய கொள்முதல் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பை மேலதிகாரி அங்கீகாரம் அளிப்பார். எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை, வைகாசி மாதங்களில் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த சோபகிருது வருடம் அடங்கிக்கிடந்த உங்களைப் பொங்கி எழ வைப்பதுடன், அடிப்படை வசதிகளை உயர்த்துவதாக அமையும்.

மகரம் 70%: மன்னிக்கும் குணம் அதிகமுள்ள மகர ராசிக்காரர்களின் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். கணவர் சில நேரம் கடுகடுவெனப் பேசுவார். விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. காரியத் தாமதம், இழப்பு, ஏமாற்றம், விபத்து, தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். மற்றவர்களின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். ஆனால், 8.10.2023 முதல் ராகு 3-ல் நுழைவதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். பூர்வீக சொத்தைச் சீரமைப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அமையும். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களின் நெடுநாள் கனவாக இருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் வைகாசி மாதத்தில் நிறைவேறும். ஆக மொத்தம், இந்தப் புத்தாண்டு அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

கும்பம் 50%: கொள்கைக் குறிக்கோள்களில் இருந்து மாறாத கும்ப ராசிக்காரர்களின் 12-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத தர்ம சங்கடமான செலவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருக்கப் பாருங்கள். வீண் அலைச்சல், வேலைச்சுமை அதிகரிக்கும். கணவரின் குற்றம் குறைகளை அடிக்கடிக் குத்திக் காட்ட வேண்டாம். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ஒருவித படபடப்பு, முன்கோபம், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். திடீர்ப் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். 14.4.2023 முதல் வருடம் முடியும் வரை ஜன்மச் சனியாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தாழ்வுமனப்பான்மை, மறைமுக அவமானம், விமர்சனங்கள் வந்து போகும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபமீட்டுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரவு உயரும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதுச் சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. இந்த சோபகிருது ஆண்டு விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களை வெற்றிக்கனியை சுவைக்க வைக்கும்.

மீனம் 77%: குறை நிறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்தும் மீன ராசிக்காரர்களின் ராசிக்கு 11-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். சுருங்கிய முகம் மலரும். எப்போதும் எரிந்து விழுந்த கணவர் இனி அன்பாகப் பழகுவார். உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு அதிகரிக்கும். பாதியில் நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். 7.10.2023 வரை ராகு 2-ல் நிற்பதால் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வழக்கில் நிதானம் அவசியம். 20.12.2023 முதல் ஏழரைச் சனி தொடங்குவதால் மறைமுக எதிர்ப்பு, உறவினர் பகை, சொத்துப் பிரச்னை, மருத்துவச் செலவு, கடன் தொந்தரவுகள் வரக்கூடும். ஆனால், லாப வீட்டில் சனி பகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வர வேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது முரண்டு பிடிப்பார்கள். உத்தியோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த நிலை மாறும். இனி விரும்பிப் பணி புரிவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்தப் புத்தாண்டு, சமயோஜித புத்தியாலும் சகிப்புத்தன்மையாலும் சாதிக்க வைக்கும்.