கிழமைகளை அறிமுகம் செய்தது வான சாஸ்திரம். அதன்படி சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி- இந்த வரிசையில், அண்டவெளியில் தனித் தனி ஓடு பாதையில் கிரகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பெயர்களால் கிழமைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஆகாயத்தின் அடித்தட்டில் சந்திரன்; அதற்கும் மேல் தட்டில் புதன்... இந்த வரிசையில் கடைசியில் இருப்ப வன் சனைச்சரன் (சனி). இன்று சனிக் கிழமை எனில், சனியில் இருந்து 4-வது கிரகத்தின் பெயரே அடுத்த கிழமைக்கு!
அதாவது, சனியை விட்டு விட்டு அடுத்த கிரகத்தில் இருந்து எண்ண வேண்டும். சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன்; நான்காவதாக வருவது சூரியன். ஆகையால், சனிக் கிழமைக்கு அடுத்த நாள் ஞாயிறு. ஞாயிறை (சூரியன்) விட்டு விட்டு அடுத்த கிரகத்தில் இருந்து எண்ணினால், 4-வது வருவது சந்திரன். எனவே, ஞாயிறுக்குப் பிறகு திங்கள்.
இப்படியே செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று கிரகங்களின் பேரில் கிழமைகள் குறிப்பிடப்படுகின்றன. சூரியன் தோன்றும் வேளை, ‘சனி ஹோரை’யாக இருந்தால், அன்று முழுவதும் சனிக் கிழமை. இப்படியே ஒவ்வொரு கிழமைக்கும்.
கிழமைகளும் செயல்பாடுகளும்
கிழமைகளைக் குறிப்பிடும்போது, அந்தப் பெயருக்குரிய கிரகங்கள் நமது ஞாபகத்துக்கு வரும். அந்த கிரகத்தின் இயல்புகளை, அன்று தொடங்கும் செயல்பாடுகள் அல்லது வைபவங்களுடன் நம் மனம் தானாகவே சேர்த்து வைத்துப் பார்க்கும்.
உதாரணமாக... சனிக்கிழமையன்று ஒரு நல்ல காரியத்தை செய்ய உத்தேசிக்கிறோம். உடனே, சனி பகவானும் அவரது இயல்புகளும் ஞாபகத்துக்கு வரும். சனி, துயரத்துக்குக் காரகன். எனவே, ‘அன்று செய்யப்படும் காரியம் துயரத்தில் முடிந்து விடுமோ!’ என்றொரு நெருடல் மனதில் எழும். உடனே, சனிக் கிழமையைத் தவிர்த்து விடுவோம்.
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது!’ என்பார்கள். புதன் பகுத்தறியும் திறனை அளிப்பவன். புதனைப் பற்றிய சிறப்பான இந்த சிந்தனைகள், செயல்பாட்டை வெற்றியடையச் செய்யும். எனவே, புதன் கிழமையை ஏற்றுக் கொள்வோம். கிழமைக்கும், செயல்பாட்டுக்கும் மனம் வழி தொடர்பு உண்டு. ‘செவ்வாய்க் கிழமை, விருப்பத்தை நிறைவேற்றாது!’ என்பார் வராஹமிகிரர். புதன் மற்றும் சனிக் கிழமைகளில்- ஆண்களும்; செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து நீராடுவர்.
வழிபாட்டின் சிறப்பும் கிழமைகளின் பங்கும்
ஞாயிறு- சூரிய வழிபாட்டுக்கு உரியது. திங்கட் கிழமைகளில் ஈசனையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாளையும் ஆராதனை செய்யலாம். சனிக் கிழமைகளில் தர்மசாஸ்தா வையும் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மந் நாராயணனையும் வழிபடலாம்.
அதேபோல் கார்த்திகை-ஞாயிறு வனபோஜனம். புரட்டாசி சனிக் கிழமைகளில் ஏழுமலையான் வழிபாடு என்று அனுஷ்டிப்பர். சோமவாரம், கிருஷ்ணாங்காரக சதுர்த்தி போன்றவையும் கிழமைக்கு முன்னுரிமை அளிக்கும் விரதங்களே. சித்த யோகம், அமிர்த யோகம் மற்றும் மரண யோகம் ஆகியவற்றிலும் கிழமைகளின் பங்கு குறிப்பிடத் தக்கது.
‘தலை முடியைக் களைய திங்களும் புதனும் சிறந்த நாள்கள். தகப்பன் இருப்பவர்கள், வெள்ளிக்கிழமை முடி வெட்டக் கூடாது. தாய்- தந்தையைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் ஸபிண்டீகரண ஆராதனையை வெள்ளிக்கிழமையில் செய்யக் கூடாது’ என்கிறது தர்ம சாஸ்திரம். சுமங்கலிகள் வெள்ளியில் பயணம் மேற்கொள்ளக் கூடாது. செவ்வாயில் வீடு திரும்பக் கூடாது என்பது ஜோதிடம் சொல்லும் கருத்து.
வார சூலை என்பது கிழமைகளை மட்டுமே வைத்து உருவானவை. நாம் செய்யும் சங்கல்பத்திலும் வருஷம், மாதம், நட்சத்திரம் ஆகிய வற்றுடன் கிழமையையும் சேர்த்துக் கொள்வது உண்டு.
பிறந்த நாளும் பலன்களும்!
பிறந்த நாள் இன்னின்ன கிழமைகளில் அமைந்தால் இன்னின்ன பலன்கள் என்றொரு கருத்து உண்டு.
ஞாயிறு: நீண்ட தூர பயணம்
திங்கள்: நல்ல உணவு கிடைத்தல், தான்ய விருத்தி
செவ்வாய்: உடல் நலம் பாதித்தல்
புதன்: கல்வியில் ஆர்வம்
வியாழன்: ஆடை ஆபரணச் சேர்க்கை
வெள்ளி: அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம்.
சனி: பெற்றோருக்கு பாதிப்பு.
-எம்.வேலு, திருச்சி-3
சிகிச்சைக்கான தினங்கள்!
நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி.
சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகள் பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திர நாள் களில் வந்தால் மட்டும் சிகிச்சை தேவை என்பது முன்னோர் வாக்கு.
சிகிச்சைக்கு ஏற்ற நாளும் நட்சத்திரமும்
திங்கள் - அஸ்தம்
புதன் - அஸ்வினி
வியாழன் - சித்திரை
வெள்ளி - புனர்பூசம்
இந்தக் கிழமைகள் அல்லது நட்சத்திர நாட்கள் சிகிச்சை செய்ய உகந்தவை ஆகும்.
-சி.சரவணன், சென்னை-47