கல்வியே நம் பிள்ளைகளுக்கு நிலையான செல்வம். தங்கள் குழந்தைகள் படிப்பில் மேன்மையுற பெற்றோர் மேற்கொள்ளும் முயற்சிகளும் எதிர்கொள்ளும் சிரமங்களும் அதிகம். ஆனால், பிள்ளைகளில் சிலர் படிப்பில் ஆர்வமும் கவனமும் இல்லாமல் இருப்பார்கள். எவ்வளவு முயன்றும் அவர்களால் கல்வியில் ஜொலிக்க முடியாமல் போய்விடுகிறது.பிள்ளைகளின் கல்வி நிலை எங்ஙனம் என்பதை ஜாதகம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்கின்றன ஜோதிட நூல்கள்.

பொதுவாக ஆரம்பக்கல்விக்கு புதன் ஆதார கிரகமாக விளங்குகிறது. ஜாதகத்தில் புதன் கிரகம் பலமாக அமைந்துவிட்டால், அடிப்படைக் கல்வி சிறப்பாக அமையும்.
புதன் பலம் பெறும் நிலைகள்...
புதன் ஆட்சி வீடான மிதுனத்திலோ, உச்ச வீடான கன்னியிலோ அமையவேண்டும். புதன் ராசி மற்றும் அம்சச் சக்கரங்களில்இந்த வீடுகளில் அமைந்து வர்க்கோத்தமம் எனும் நிலையைப் பெற வேண்டும்.
ஜாதகத்தில் புதன் இருக்கும் வீட்டுக்கு முன்னும் பின்னும் சுப கிரகங்கள் அமைந்திருக்க, சுப கத்திரி யோகம் அமைந்தால் சிறப்பு.
புதன் ஜாதகத்தில் பலவீனம் அடைந்திருந்தால் ஆரம்பத்தில் கல்வியில் ஆர்வம் குறைவாகவே இருக்கும்.
புதன் பலவீனம் பெறும் நிலைகள்
புதன் பகை வீடான கடகத்திலோ, நீச்ச வீடான மீனத்திலோ இருத்தல்.
புதன் இருக்கும் வீட்டின் முன்பின் வீடுகளில் அசுப கிரகங்கள் இருக்க, அசுப கத்திரி யோகம் பெறுதல்.
புதன், அசுப வீடுகளான 6, 8, 12 ஆகிய இடங்களில் அமைவது.
புதன் பலம் பெற்று இருப்பது போன்று ஜாதகத்தில் நான்காம் வீடும், நான்காம் வீட்டின் அதிபதியும் பலமாக இருத்தல் அவசியம். இந்த இடமும் அதன் அதிபதிக் கிரகமும் பலவீனம் அடைந்திருந்தால் படிப்பில் கவனக்குறைவு ஏற்படும்.

எளிய பரிகாரம்: ஜாதகத்தில் புதன் மற்றும் நான்காம் வீட்டு அதிபதி கிரகம் பலவீனம் அடைந்து இருந்தால், புதனை வழிபட்டு பலன் பெறலாம். புதனின் அதிபதி மகாவிஷ்ணு. ஐந்து புதன் கிழமைகள் தொடர்ந்து பெருமாள் சந்நிதியில் துளசி மாலை சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
`ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே’
என்ற ஸ்லோகத்தை, உங்களின் பிள்ளைகளைச் சொல்லச் சொல்லி ஹயக்ரீவரை வழிபடவைக்கலாம். இதனால் அவர்களின் கல்வியில் மேன்மை உண்டாகும்.
ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்
இந்தப் பதிகத்தைப் பாடி சரஸ்வதிதேவியை வழிபட, உங்கள் பிள்ளைகளின் கல்வி - கலைஞானம் பெருகும். அனைத்துத் தேர்வு களிலும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.

ரேகை சாஸ்திரம் சொல்லும் தகவல்!
கைரேகை சாஸ்திரம் மூலமும் ஆரம்பக் கல்வியில் ஏற்றமா இறக்கமா என்பதை அறியலாம். உள்ளங்கைகளில் பலவித ரேகைகள் உள்ளன. அவற்றில் புத்திரேகை கல்வி நிலைக்கு அடிப்படை ஆகும். சுட்டுவிரலின் கீழே (சற்றுத் தள்ளி) ஆரம்பித்து உள்ளங்கையின் குறுக்காகச் செல்லும்.
இந்தப் புத்தி ரேகையானது அருகேயுள்ள ஆயுள் ரேகையைத் தொடாமல் சென்றால் சிறப்பு. கல்வியில் ஆர்வமும் மேன்மையும் இயற்கையாகவே அமைந்துவிடும். புத்தி ரேகை ஆயுள் ரேகையைத் தொட்டுச் சென்றால், கல்வியில் ஆர்வம் உண்டு என்றாலும் உணர்ச்சிவயப்படும் இயல்பு உண்டாகும்.
புத்திரேகையானது ஆயுள் ரேகையின் உட்பகுதியிலிருந்து பிரிந்து சென்றால் படிப்பில் கவனம் குறையும்.