விரதம் இறையருளில் நம்மைத் திளைக்கவைக்கும் வழிபாட்டு வழிமுறைகளில் ஒன்று. விரதம் நம் உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் சக்தி அளிக்கும் ஒன்று; தேக சுத்தியுடன் ஆத்ம சுத்திக்கும் இது வழிவகுக்கும் என்பார்கள் பெரியோர்கள்.


விரத முறைகளில் ஏகாதசி - துவாதசி விரதம், சோமாவார விரதம், சனிக்கிழமை விரதம், புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம், ஆடியில் அம்மனுக்கு விரதம், மார்கழியில் பாவை நோன்பு என பலவிதமான விரதங்களைக் கடைப்பிடித்து வழிபடுகிறோம்.
நாம் யாரை குருவாக பாவிக்கிறோமோ அல்லது நம் குடும்ப ஜோதிடராக எவரைக் கருதுகிறோமோ அவரது வழிகாட்டலைக் கொண்டு, உரிய தெய்வ விரதமுறைகளை அனுஷ்டித்து தெய்வங்களை வழிபடுவதால், சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்; வாழ்வில் அனைத்து காரியங்களில் வெற்றி உண்டாகும்.
விரதங்களால் நவகிரகங்களும் மகிழ்ந்து திருவருள் புரிவார்கள்; குடும்ப ஒற்றுமை மேலோங்கவும், இல்லறம் செழிக்கவும், சுபிட்சம் பெருகவும், பிணியில்லா வாழ்வைப் பெறவும் கிரகமூர்த்திகள் அருள்பாலிப்பார்கள் என்கின்றன ஜோதிட ஞானநூல்கள்.
குறிப்பாக... ஒரு குடும்பத்தில் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் தவிர்த்து, அதிகாலை நேரத்தில் ஸ்நானம் செய்து, துவரம் பருப்பு, நெய், பால், வெல்லம் போன்றவற்றை உணவில் சேர்த்தும் இரவு நேரங்களில் அரிசி உணவைத் தவிர்த்தும் விரதம் அனுஷ்டிப்பதால், அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக் கும். ஜோதிட ஞானநூல்கள் தரும்
இன்னும்பல விளக்கங்களையும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
சூரிய பகவான் ஒரு ஜாதகத்தில் மேஷம், துலாம் அல்லது சிம்ம ராசியில் இருந்தாலோ அல்லது சூரிய தசை நடந்துகொண்டிருந்தாலோ, அந்த ஜாதகர் அட்சயதிருதியை அன்று அசைவம் தவிர்த்து, கோதுமைப் பொருட்களால் ஆன உணவை ஏற்று விரதம் இருக்கலாம்.
அக்ஷயதிருதியை அன்று விரதம் இருந்து வழிபடலாம். அன்று கொதுமையால் ஆன உணவை ஏற்கலாம். அல்லது ஒருபொழுது மட்டும் அரிசி உணவு உண்ணலாம். மற்ற வேளைகளில் பால், பழம் மற்றும் சிறுதானிய வகை உணவுகளை ஏற்று விரதம் அனுஷ்டிக்கலாம். இதன் மூலம் சூரிய பகவானின் அருளால் சகல காரியங்களிலும் ஜெயம் உண்டாகும்.

சந்திரன் ஜாதகத்தில் ரிஷபம், விருச்சிகம் அல்லது கடக ராசியில் இருந்தால் அல்லது சந்திர தசை நடந்துகொண்டிருந்தால், அந்த ஜாதகருக்கு சோமவார விரதம் மேன்மை தரும். சோமவாரமாகிய திங்கள் அன்று அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும். இரவில் மட்டும் அரிசி உணவை ஏற்கலாம்.
காலையும் மதியமும் பூஜையில் வைக்கப்பட்ட பால், பழங்கள் மற்றும் பழச்சாறு ஏற்கலாம். இதன் மூலம் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் குறைகள் நீங்கும்; சந்திரனின் பூரண அருள் கிடைக்கும்; மனத்தில் நம்பிக்கை பிறக்கும்.
செவ்வாய் பகவான் ஒரு சுய ஜாதகத்தில் மேஷம், விருச்சிகம் அல்லது கடக ராசியில் இருந்தாலோ, செவ்வாய் தசை நடந்துகொண்டிருந்தாலோ அந்த ஜாதகர் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு விரதம் வழிபட்டு, வளமும் செல்வபோகமும் பெறலாம்.
அன்றைய தினம் மதியம் நெய் கலந்த துவரம் பருப்பு சாதத்தைச் சமர்ப்பித்து உணவாக ஏற்கலாம். மற்ற பொழுதுகளில் செந்நிற கனிகள், பால் சாப்பிடலாம். சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம், குமாரஸ்தவம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வணங்கலாம். இங்ஙனம் விரதம் அனுஷ்டிப்பதால் குடும்பத்தில் சகல நன்மைகளும் உண்டாகும்; சுபிட்சம் பெருகும்; செல்வம் செழிக்கும்.
புதன் பகவான் ஜாதகத்தில் மிதுனம், கன்னி, அல்லது மீனம் ராசியில் இருந்தாலோ அல்லது புதன் தசை நடந்துகொண்டிருந்தாலோ, அந்த ஜாதகர் புதன்கிழமைகளில் அசைவம் தவிர்க்க வேண்டும். அன்று பச்சை நிற காய்கறிகளை வேகவைக்காமல் சாப்பிடுவதும், பச்சை நிற தானியங்களை சமைத்து உண்பதும் சிறப்பு. இது, குடும்பத்தில் கல்வி, கேள்வி, வித்தை, ஞானம், அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்கு வதற்கான உபவாச முறையாக இருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் தனுசு, மீனம், கடகம் அல்லது மகர ராசியில் அமைந்திருந்தாலோ அல்லது குரு தசை நடந்து கொண்டிருந்தாலோ, அந்த ஜாதகர் வியாழக்கிழமைகளில் விரதம் அனுஷ்டிக்கலாம்.
அன்று அசைவம் தவிர்த்து, ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு எடுக்கலாம். பால், வெல்லம் ஆகியவற்றையும் சேர்க்கலாம். மற்ற வேளைகளில் உணவு தவிர்த்து விரதம் கடைப்பிடித்தால், காரிய வெற்றி உண்டாகும்; வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அசையும் அசையா சொத்துக்கள் நிறைய சேரும். இந்த ஜாதகர்கள் வியாழக் கிழமையன்று ஒரு ஒரு மணி நேரமாவது மௌன விரதம் கடைப்பிடிப்பது நன்று. அதேபோல் அருகில் அமைந்திருக்கும் மகான்களின் சந்நிதிக்குச் சென்று, அங்கு அமர்ந்து மெளனம் காப்பதும் தியானிப்பதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.
சுக்கிரன் ஒரு சுய ஜாதகத்தில் ரிஷபம், மீனம், துலாம் மற்றும் கன்னி ராசியில் அமையப் பெற்றிருந்தாலோ, சுக்கிர தசை நடந்துகொண்டிருந்தாலோ, அந்த ஜாதகர் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும்.
வெள்ளிக் கிழமைகளில் அசைவம் தவிர்த்து ஒருபொழுது மட்டும் பச்சரிசி சாதம் ஏற்கலாம். வெல்லம், வெண்ணெய், நெய், தேன் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கலாம். மற்ற வேளைகளில் பால், பழம் எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இங்ஙனம் விரதம் அனுஷ்டிப்பதால் சுக்ரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். குடும்பத்தில் கடன்கள் அடைபடக்கூடிய அமைப்பு உருவாகும்.
சனிக்கிழமை விரதம் என்பது மகத்துவமானது. சனிக்கிழமைகளில் அசைவம் தவிர்த்தல் சிறப்பு. வலிமை வாய்ந்த பாவ கிரகம் என்று சனிபகவானையே கூறுவார்கள்.
சனி பகவான் ஒரு சுய ஜாதகத்தில் மகரம், கும்பம், துலாம் அல்லது மேஷ ராசியில் அமையப்பெற்றிருந்தாலோ, சனி தசை நடந்துகொண்டிருந்தாலோ அந்த ஜாதகர் சனிக்கிழமை விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை அடையலாம்.
சனிக்கிழமை அன்று அசைவம் தவிர்த்து அதிகாலை நேரத்தில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து (சுடு தண்ணீரில் குளியல் என்பது நல்லது) ஒருபொழுது மட்டும் அரிசி உணவு ஏற்கலாம். எள்ளு கலந்த இனிப்புப் பொருளைச் சேர்க்கலாம். மற்ற இரண்டு வேளைகளில் பால், பழம், சிறுதானியம் ஏற்கலாம்.
சனிக்கிழமை அன்று உணவுக்குமுன் துளசி தீர்த்தம் அருந்திவிட்டு உணவை உண்ணுவதால், குடும்பத்திலுள்ள கடன் தொல்லைகள் நீங்கும்; சுவாசத்தில் உள்ள பாதிப்புகள் குறையும்; இருதயம் பலம் பெறும். எதிலும் ஏமாற்றம் இல்லாத நிலை உருவாகும்.
ராகு - கேதுக்களுக்காக தனிப்பட்ட விரத முறைகள் சொல்லப் படவில்லை. இவர் களுக்கென தனிப்பட்ட நாள்கள் இல்லை. எனினும் ராகு மற்றும் கேது தசை நடக்கும் அன்பர்கள் உளுந்து மற்றும் கொள்ளு கலந்த உணவுகளை ஏற்பதால் அதிக நன்மைகள் உண்டாகும். விநாயகர், துர்கை போன்ற தெய்வங்களை வழிபட்டு வரம் பெறலாம்.
இங்ஙனம் உரிய நாட்களில் உரிய கிரகத்துக்கு ஏற்ப விரதம் கடைப்பிடிப்பதுடன், அந்த கிரக மூர்த்தியையும் அந்தக் கிரகத்துக்கான அதிதேவதைகள், தெய்வங்களையும் மனதார வழிபட்டு வணங்குவதால் சகல நன்மைகளும் உண்டாகும்.