Published:Updated:

சாயா கிரகங்கள்... அபூர்வ தகவல்கள்!

ராகு-கேது
பிரீமியம் ஸ்டோரி
ராகு-கேது

ராகு-கேது சிறப்புத் தகவல்கள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சாயா கிரகங்கள்... அபூர்வ தகவல்கள்!

ராகு-கேது சிறப்புத் தகவல்கள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
ராகு-கேது
பிரீமியம் ஸ்டோரி
ராகு-கேது

கிரகங்களின் இயல்பை வைத்து மூன்று வகையாகப் பிரிப்பார்கள். சூரியனும் சந்திரனும் பிரகாச கிரகங்கள்; ஒளியை உமிழும் தகுதி கொண்டவை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை தாரா கிரகங்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள்; நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிடம். நிழலின் ஆரம்பம் ராகு. அதன் எல்லை கேது!

சந்திரனின் சரம் அதாவது பாதம், இந்த நிழல் கிரகங்களை வரையறுக்கும். ஒருவன், இரண்டு கூறாகப் பிரிந்த பிறகு, இரண்டு பகுதிக்கும் தனித்தனிப் பெயர் வந்தது என்று ராகு-கேதுவை விவரிக்கிறது புராணம். நிகழும் பிலவ வருடம் பங்குனி 7-ம் தேதி (21.3.22) அன்று ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது. இதையொட்டி சாயா கிரகங்களான ராகு மற்றும் கேது குறித்த அபூர்வ தகவல்களை அறிந்துகொள்வோம்!

சாயா கிரகங்கள்... 
அபூர்வ தகவல்கள்!

ஒளி மயமான வாழ்வு தருவார் ராகு!

ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் உண்டு. வேத காலத்திலிருந்து, தினமும் 3 வேளை, ராகுவுக்கு நீரை அள்ளி வழங்கி வழிபடுவர், வேதம் ஓதுவோர். பிறகு வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில், ராகுவை சுவர்பானு எனக் குறிப்பிட்டனர். ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம் (ராஹுக்ரஸ்தேதிவாகரே).

சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).

மாயையின் தரம் மற்றும் அதன் இயல்பை விளக்க வந்த மகான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ராகுவைச் சுட்டிக்காட்டுகிறார்.

கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் அவருக்கு இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை. ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம்.

கேந்திர த்ரிகோணாதிபதிக்கு, யோககாரகன் எனும் பெருமை உண்டு. அவனுடன் இணைந்த ராகு, நல்ல பலனை அளிப்பார் என்கிறது ஜாதக சந்திரிகை (யோக காரக ஸம்பந்தாத்...).

தாம்பூலப் பிரஸ்னத்தில், லக்ன நிர்ணயம் செய்ய ராகு- கேதுவைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை மட்டும் ஏற்பார்கள். ராகுவும் கேதுவும் இணையாத ஏழு கிரகங்களை வைத்து, ‘ஸப்த க்ரஹ சித்தாந்தம்’ ஆரம்ப காலத்தில் இருந்தது. வராஹமிஹிரர் அந்த சிந்தாந்தத்தை ஆராதித்தவர் என்கிறது ‘ஜைமினீய பத்யாமிருதம்’.

முகூர்த்த சாஸ்திரம், லக்ன சுத்திக்கு, எட்டில் கிரகம் இருக்கக் கூடாது என்கிறது. அதேநேரம் அங்கு ராகு இருந்தால், கிரகம் இல்லாததாகக் கருதப்படும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். அடுத்து வந்த சிந்தனையாளர்கள் உச்சம், நீசம், ஸ்வ க்ஷேத்திரம் எனக் கொண்டு, மற்ற கிரகங்களின் அந்தஸ்தை ராகுவுக்கு ஏற்படுத்தினர். எல்லா கிரகங்களும் வலமாக வந்தால், ராகு இடமாக வருகிறார்.

ராகுவுக்கு ‘சர்ப்பி’ எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, பாம்பின் வடிவமென ராகு வைச் சொல்வார்கள் (உரகாகார:). சர்ப்பம் என்றும் பாம்பைச் சொல்வர்.

ராகு பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறார். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறார். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம். பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய-சந்திரர்களைத் துன்புறுத்துகிறார் ராகு என்கிறது புராணம்.

ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம் (சனிவத்ராஹு:).

கிரக வரிசையில் இடம்பிடித்த ராகு, நன்மையைவிட தீமையையே அதிகம் சுட்டிக்காட்டுவதாக சித்திரிப்பதால் ஏற்பட்ட பயம், மக்களின் சிந்தனையை முடக்கிவிடுகிறது. ராகுவின் தரம், ஜோதிடத்தில் அவர் பங்கு ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிய வேண்டிய கட்டாயம் உண்டு. ஜாதகத்தில் உள்ள ராகு, கெடுக்கிற ராகு அல்ல; கொடுக்கிற ராகு எனும் விளக்கமும் இருக்கிறது.

ராகுவுக்குத் தனி வீடு இல்லாததால், எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. ராகு நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவார்; எவரோடும் சேராமல், எவராலும் பார்க்கப்படாமல், தனியே ஒரு வீட்டில் தென்பட்டால், வீட்டுக்கு உரியவனின் இயல்புக்கு இணங்க, தனது இயல்பையும் கலந்து மாறுபட்ட பலனை அளிப்பார். ராகு கெட்டவனுடன் சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவார்.

அதேநேரம் யோக காரக கிரகங்களின் சேர்க்கையில், ராகு நல்லவனாக மாறுவதுடன், இணைந்த கிரகத்தின் நல்லபலன்களை இரட்டிப்பாக்கி, மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வார். அசுர வேகத்தில் முன்னேற்றம் நிகழும்.

தினமும் ராகுகாலத்தைச் சந்திக்கிறோம். ராகு வழிபாடு என்பது, வேத காலத்தில் இருந்தே தொடர்கிறது. உலகம் தோன்றும் வேளையில், வானசாஸ்திரத்தில், ராகு இடம் பிடித்துவிட்டார். வராஹமிஹிரர், பிருஹத்சம்ஹிதையில் ராகு சாரத்தை விளக்கியுள்ளார். ஆகவே, போற்றுதலுக்கு உரிய கிரகங்களில் ராகுவையும் சேர்க்கலாம்.

ராகுவை அழைக்க, ‘காயான: சித்ர:’ என்கிற மந்திரத்தை ஓதச் சொல்கிறது வேதம். `ராம் ராஹவே நம:’ எனும் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொல்லலாம்; 16 உபசாரங்களை இந்த மந்திரம் சொல்லி நிறைவேற்றலாம்.

‘சதுர் பாஹும் கட்க வரசூலசர்மகரம்ததா காலாதி தைவம் ஸுர்யாஸ்யம் ஸர்பப்ரத்யதி தைவதம்’ என்ற ஸ்லோகம் சொல்லி, ராகுவுக்கு மலர் சொரிந்து, வணங்கலாம். இன்றைய சூழலில், ராகுவின் அருள் அவசியம். ராகு பகவானை வணங்கினால், ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம்!

குலம் செழிக்க அருள் தருவார் கேது!

குலத்தின் உயர்வை அடைய வைப்பவர் கேது என்கிறது தர்ம சாஸ்திரம் 12-ல் இருக்கும் கேதுவை ஞானகாரகனாகச் சித்திரிக்கிறது ஜோதிடம். ஒட்டுமொத்த இழப்பையும் சுட்டிக்காட்டுவது 12-ஆம் வீடு! பொருளாதாரத்துடன் அறியாமையையும் இழக்கச் செய்வதால் அவர் ஞானகாரகனாக மாறுகிறார்.

கேது சூரியனுடன் இணைந்தால், சூரியனால் விளையும் நன்மைகளை முடுக்கி விடுவார். உச்ச சூரியனாக இருப்பின், அதில் மங்கிச் செயலிழந்து விடுவதால், உயர்ந்த மனிதனாக மாற்றி விடுவார்!

செவ்வாய், சனி ஆகிய பாப கிரகங்களுடன் இணையும் வேளையில், அவர்களின் கெடுதல்களுக்கு ஊக்கம் தருபவர் இவர்!

கேதுவின் 7-வது கேந்திரத்தில் எப்போதும் ராகு இருப்பதால், அவரது தாக்கம் இரண்டு மடங்காக இருப்பது உண்டு. கேதுவுடன் குரு இணைந்தால், கேது நல்லவராக மாறுவார். அப்போது, ஏழில் இருக்கும் ராகு, குருவின் பார்வை பட்டு, கெடுதல் விலகுவதால் குருவின் பலத்தையொட்டி தன்னை மாற்றிக்கொண்டு உயர்வுக்கு உதவுவார்.

கேதுவுடன் சேர்ந்த கிரகம், ராகுவைப் பார்ப்பதும் கேந்திரத்தில் இருப்பதும் தீர்மானம் ஆனதால், கேதுவுக்குப் பலன் சொல்லும்போது நம்மையும் அறியாமல் ராகுவின் பலனும் சேர்ந்துகொள்கிறது.

கேதுவுக்குப் பலன் சொல்லும்போது, ராகுவை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. கேதுவை நல்ல கிரகங்கள் பார்த்தாலும் சேர்ந்தாலும், அது ராகுவின் பலத்தில் மாறுபாட்டை நிகழச் செய்யும். ஆகவே, கேதுவை தனியே கவனிக்காமல், ராகுவுடன் சேர்த்து கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

கேது நிழல் கிரகம் என்பதால், அதன் தாக்கம் மானசீகமான பலத்தை மட்டுமே இழக்கச் செய்ய முற்படும். உலகவியல் பலன்களை முழுமையாகப் பாதிக்காது.

நிழல் நமக்குப் பிடிக்காது. நிஜம்தான் பிடிக்கும். நம் குழந்தையின் நிழல், நாம் பார்க்கிற புத்தகத்தை மறைத்தாலும் எழுத்துக்களைப் பார்க்க முடியாதுதானே?! ‘நம் குழந்தைதான்’ என்றாலும் அந்த இடையூறு இருக்கத்தானே செய்யும்! ஆக, கேது எங்கு இருந்தாலும், நிழல் பட்ட இடம் போல் மங்கிவிட வாய்ப்பு உண்டு. 6, 8, 12 போன்ற இடங்களில் நிழல் படிந்தால், அது இடையூறை மறைக்கும் என்பதால்... நிழலும் பலனையே அளிக்கும். கடும் வெயிலில் நடப்பவனுக்கு, தென்னை மர நிழல்கூட ஆறுதல் தரும்!

கேது, நம்மை நோக்கி வரும் துயரத்தை மறைத்து, வலுவிழக்கச் செய்வதால் அவரது ஆராதனை மிகவும் தேவை! `கேதும் க்ருண்வன்...’ என்கிற வேதப்பகுதியை ஓதினால், அவர் நம் மனதில் தோன்றுவார் என்கிறது வேதம். வேதகாலத்திலிருந்து அவர் வழிபாடு தொடர்கிறது.

குலம் செழிக்க, கேதுவின் அருள் அவசியம். குலத்தின் செழிப்பைக் காப்பாற்றும் திறன் கேதுவிடம் உண்டு என்கிறது சாஸ்திரம்.

கேம் கேதவேநம: என்று சொல்லி 16 பணிவிடைகளை கேது பகவானுக்குச் செய்யலாம்.

‘சூர்யாஸ்யம் தூம்ரவஸனம் வரதம் கதினம் ததா. சித்ரகுப் தாதி தைவத்யம் பிரம்மப்ரத் யதிதைவதம்’ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, மலர்கள் தூவி வழிபடலாம்.

எண்ணிக்கையில் ஒன்பது என்பது எல்லை. அந்த எல்லையை வரையறுக்கும் விதமாக, கடைசியில் கேதுவை குறிப்பிடுவது உண்டு. குறையை நிறைவு செய்யும் வகையில் ஒன்பதாவதாகக் குறிப்பிடும் கிரகம் என்பதால் கேது வழிபாடு நவக்கிரக வழிபாட்டின் நிறைவை அளிக்கிறது.

`நம: சூர்யாய சோமாய மங்களாய புதாயச. குரு சுக்கிரசனிப்ய:ச ராகவே கேதவே நம:’ என்ற ஸ்லோகம்... பிரகாச கிரகத்தை முதலிரண்டில் குறிப்பிட்டு, பிறகு தாரா கிரகத்தை விளக்கி, நிழல் கிரகங்களில் முற்றுப் பெற்று விளங்குகிறது.

அதன் நிறைவைக் கேது நடைமுறைப்படுத்துகிறார். ஆகவே நிறைவான வாழ்வுக்கு கேதுவை வணங்கி, வளம் பெறுவோம்!(23.8.11; 6.9.11 இதழ்களிலிருந்து)

சாயா கிரகங்கள்... 
அபூர்வ தகவல்கள்!

தோஷம் தீர்க்கும் தலங்கள்!

திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, ஆகிய தலங்கள் ராகு-கேது பரிகாரத் தலங்களாகத் திகழ்வன என்பதை நாமறிவோம். இதேபோல், சர்ப்ப தோஷங்களைத் தீர்க்கும் இன்னும் பல தலங்கள் உண்டு.

காட்டாங்குளத்தூர்: தட்ச யாகத்தை அழித்தபின்னர், பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட ஈசன், தாம் யோகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைப் பூமியில் தேர்வு செய்வதற்காக, தம் கழுத்தில் இருந்த நாகத்தை அனுப்பினார். நாகம் அடையாளம் காட்டிய ஐந்து இடங்களில் முதலாவது தலம் காளஹஸ்தி. இரண்டாவது தலம் காட்டாங் குளத்தூர். மற்றவை திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்கள் என்கின்றன ஞானநூல்கள். திருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிபட்டுத் திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் ராகுவும் கேதுவும் ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இவர்களை தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கிடைக்கும்!

திருவிடந்தை: கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த ஊர் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. வராகப் பெருமாளின் இடப்பாகத் தில் அகிலவல்லித் தாயார் (பூமாதேவி) அமர்ந்திருக்கும் திருத்தலம் திருவிடந்தை. ராகு, கேது அம்சமான ஆதிசேஷன் தன் மனைவி வாசுகியுடன் வராக பெருமாளின் இடது காலை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால், இந்தத் தலம் ராகு, கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

திருக்களாச்சேரி: நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. மகாவிஷ்ணு வழிபட்ட தலம் என தலபுராணம் கூறுகிறது. ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு- கேது தோஷம் விலகும்.

காஞ்சி மாகாளீஸ்வரர் கோயில்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது மாகாளீஸ்வரர் கோயில். ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு மாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன் அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்!

தேவர்குளம் சக்தி விநாயகர்: திருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேதுவுடன் அருள் பாலிக்கிறார் சக்தி விநாயகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.