ஜாதகத்தில் 12 இடங்களுக்கும் ஒவ்வொருவிதமான முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் 6-ம் இடம், ஜாதகரின் மன அமைதிக்கு ஆதார ஸ்தானமாக விளங்குகிறது. ஜனன ஜாதகத்தில் இந்த இடம் நல்லபடியாக அமைந்தால்தான் வாழ்க்கை அமைதியும் ஆனந்தமுமாக அமையும். ஒரு மனிதனுக்கு உண்டாகும் நோய்கள், கடன் தொல்லைகள், பகைவரால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றுக்கு இந்த 6-ம் இடமே காரகத்துவமாகிறது.

மனிதப் பிறப்பை அரிதானது என்று முன்னோர்கள் கூறுவார்கள். அப்படியான மனிதப் பிறப்பு அர்த்தமுள்ளதாகவும், ஆனந்தமயமாகவும் திகழவேண்டுமானால் 6-ம் இடம் மிகச் சிறப்புற்று அமையவேண்டும். ஆம்! நோய்நொடி இல்லாத தேக ஆரோக்கியம், கடன் பிரச்னைகள் இல்லாதபடி செல்வ வளம், எவ்வகையிலும் பகைவர்கள் இல்லாத நிலை இந்த மூன்று அம்சங்களும் மனிதருக்கு மிகவும் அவசியம். 6-ம் இடத்தில் கிரகங்கள் நல்லபடியாக அமையப்பெற்றோருக்கு, இப்படியான பேறுகள் வாய்க்கும்.
6-ம் இடத்தை ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். இந்த இடத்தைக் கொண்டு, இதில் அமைந்திருக்கும் கிரகங்களின் தன்மையைக் கொண்டு ஜாதகரின் நோய், கடன், விரோதிகள், கோர்ட் விவகாரங்கள், பங்காளிகள் பிரச்னை, மனக் கவலை, சித்தபிரமை, ஆயுதத் தாக்குதல், அறுவை சிகிச்சை, விஷக்கடி பாதிப்பு, எதிர்பாராத விபத்துகள், அரசாங்க வழியில் அபராதம் முதலான விவரங்களை அறிய முடியும்.
ஜோதிட விதிப்படி இந்த 6-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருப்பது நல்லது. சுப கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் ஆகியவையும் சந்திரனும் இருக்கக்கூடாது. உங்கள் ஜாதகத்தில் இந்த இடத்தில் என்னென்ன கிரகக்கள் உள்ளன; அதனால் என்ன பலன்கள் உண்டாகும் எனத் தெரிந்துகொள்வோமா?

சூரியன்: 6-ம் இடத்தில் சூரியன் இருந்தால் பகையை வெல்லும் ஆற்றல் உண்டாகும். இந்த ஜாதகர் நிறைந்த அறிவும், செல்வச் சேர்க்கையும் பெற்றிருப்பார்கள். தனக்கு அடுத்தபடியாகப் பணி புரியும் பணியாட்களால் அதிகம் மதிக்கப்படுவார்கள். இவரைச் சேர்ந்து பெரிய குடும்பம் இருக்கும். எதிரிகளாலும் ஆதாயம் அடையும் நிலை இவருக்கு உண்டு. தீர்க்காயுள் உண்டு. நண்பர்கள் மற்றும் சகோதரர்களால் உதவிகள் வாய்க்கும். வெம்மை நோய் களால் பாதிப்பு உண்டாகலாம். பார்வைக் குறைபாடு உள்ளிட்ட கண் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திரன்: 6-ம் இடத்தில் சந்திரன் இருக்கக் கூடாது. அப்படி சந்திரன் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் அதிகம் பகையைச் சம்பாதிப்பார். கடன் தொல்லை மற்றும் சோம்பல் தனத்தால் தீராத மனக் கவலை உண்டாகும். அதேபோல் வம்பு-வழக்குகள் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. உடல் பாதிப்பை விடவும் மன பாதிப்புக்கு அதிகம் ஆளாவர்கள். நரம்புத் தளர்ச்சி, சர்க்கரை வியாதி ஏற்பட வாய்ப்பு உண்டு. சகோதர-சகோதரியால் அனுகூலம் இருக்காது. பெண்கள் விஷயத்தில் இவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

செவ்வாய்: ஜாதகத்தில் 6-ம் இடத்தில் செவ்வாய் அமையப் பெற்றிருப்பது நல்லது. செல்வ சுகபோகமான வாழ்க்கை அமையும். எதிரிகள் இவரை அணுகவும் அஞ்சுவார்கள். அரசியலில் வெற்றி, செயல்பாடுகளால் புகழும் உண்டாகும். சிறந்த ஞானவான்களாகத் திகழ்வார்கள். இல்லறத்தில் நாட்டம் அதிகம் இருக்கும். ராணுவம், காவல் துறைப் பணிகளில் இருக்க வாய்ப்பு உண்டு. மறைமுகமான பகைவர்கள் உண்டு. நெருப்புக் காயம், அறுவை சிகிச்சை, தொண்டைப் புண், சிறுநீரகம் தொடர்பான சிறு பிரச்னைகள் ஆகியவற்றுக்கு ஆளாக நேரிடும்.

புதன்: ஜாதகத்தில் 6-ம் இடத்தில் புதன் அமைந்திருந்தால், மறைமுக விரோதத்துக்கு ஆளாக வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்ப வருவதில் சிக்கல் எழும். அதேபோல் குத்தகைப் பணம் வாடகைப் பணம் வசூலிப்பதிலும் சிரமத்தைச் சந்திப்பார்கள். இந்த ஜாதகர் முன்கோபியாக இருப்பார். வியாபரத்தில் அடிக்கடி நஷ்டங்கள் ஏற்படலாம். கல்வியில் தடை உண்டாகும். இந்த ஜாதகரின் சிறு வயதிலேயே அவரின் தாயாருக்குக் கஷ்டங்கள் தோன்றும். இந்த ஜாதகருக்குத் தலைவலி, பித்தத்தால் பாதிப்பு உண்டாக வாய்ப்பு உண்டு.

குரு: 6-ம் இடத்தில் உரு இருந்தால் சமூக அந்தஸ்து உயரும். வேடிக்கை மற்றும் நகைச்சுவை பேச்சு இந்த ஜாதகருக்குக் கைவந்த கலையாக இருக்கும். கோர்ட் வழக்குகளில் பெரும்பாலும் வெற்றியே உண்டாகும். பங்காளிகளும் பகையாளிகளும் அதிகம் இருக்கவே செய்வார்கள். ஆனாலும் சமாளிக்கும் வல்லமை உண்டாகும் ரத்த அழுத்தம் வாயு தொடர்பான நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் உடல்பருமன் இவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும். நீரழிவு நோய் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

சுக்கிரன்: ஜாதகத்தில் 6-ம் இடத்தில் சுக்கிரன் அமைந்தால், பெண்களால் விரோதம், வீண்பழி, பிரச்னைகள் வரக்கூடும். இந்த ஜாதகர் உல்லாசப் பிரியராக இருப்பார்கள். தொழில் துறையில் மறைமுக விரோதிகளால் பாதிப்பு உண்டாகும். அதேநேரம் விசுவாசம் மிக்க பணியாள்களைப் பெற்றிருப்பார்கள். கற்பனையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களில் சிலர் எழுத்தாளராகவும் படைப்பாளியாகவும் திகழ்வார்கள். சர்க்கரை நோயால் பாதிப்பு, நீர்க் கொப்புளங்கள், கண் கோளாறுகள் ஆகிய பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு.

சனி: ஒருவருடைய ஜாதகத்தில் 6-ம் இடத்தில் சனி அமைவது நல்லதே. இப்படியான ஜாதகர்களுக்கு பகையை வெல்லும் ஆற்றல் உண்டு. எதிரிகள் இவர்களிடம் மோத அஞ்சுவார்கள். தம்முடைய கொள்கையில் பிடிப்புள்ளவராகவும் அதன்பொருட்டுப் பிடிவாதம் மிகுந்தவராகவும் இருப்பார்கள். அதேநேரம் எளியவர்களுக்கு உதவும் இரக்க குணமும் இவர்களிடம் அதிகம் உண்டு. பங்காளிகள் மற்றும் உறவுகளால் பலன் எதுவும் கிட்டாது. 6-ல் சனி அமைந்துள்ள ஜாதகரை எளிதில் பிணிகள் அண்டாது; ஒருவேளை பிணிகள் ஏற்பட்டால் எளிதில் தீராது. வாயுப் பிரச்னைகள், நரம்புத் தளர்ச்சி, மண்ணீரல் - கல்லீரலில் பாதிப்பு தோன்றக்கூடும். அவ்வப்போது நிலம் சொத்துப் பிரச்னைகள் ஏற்படலாம்.

ராகு: 6-ல் ராகு இருப்பின் ஜாதகர் பெரும் புகழினைப் பெறுபவராக இருப்பார். வலிமையான தேகம் உண்டு. பகை பயம் இல்லை. விஷக்கடிகளால் சிறு சிறு பாதிப்புகள் உண்டு. பங்காளிகள் அதிகம் உண்டு என்றாலும் எவராலும் இவரைக் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் நட்பு வட்டாரத்தில் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் வீண் விரோதம் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்

கேது: ஜாதகத்தில் 6-ம் இடத்தில் கேது அமைந்திருப்பின் அந்த ஜாதகரை யோகக்காரர் என்றே சொல்லலாம். கடன், நோய், பகைவர் பிரச்னை எதுவும் இருக்காது. இவரைப் புண்படுத்தும்படி எவரேனும் நடந்துகொண்டால், அவர் அதீத கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும். இவரை வெல்ல எவராலும் முடியாது. விரும்பும் போகங்களை எல்லாம் எளிதில் அனுபவிப்பார்கள். சிற்சிலருக்கு மனச் சலனம், விஷக்கடி, மிருகங்களால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உங்கள் விரல்கள் அதிர்ஷ்டம் தருமா?
விரல்களின் மொத்த தோற்றத்தை வைத்து, அவற்றைக் கூர்மையான விரல்கள் என்றும், தட்டையான விரல்கள் என்றும் பிரிக்கலாம்.
1. விரலின் அடிப்பாகத்தில் இருந்து மேல்பாகம் கூர்மையாக அமைந்தால், அவர்கள் உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த செயல்கள், கலைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த அன்பர்களிடம் மனிதநேயம் மிகுந்திருக்கும். தத்துவ மேதைகள், ஆன்மிக ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரின் விரல்கள், இந்த அமைப்பைப் பெற்றிருக்கும்.
2. விரல் நுனிகள் தட்டையாக இருந்தால், அவர்கள் திறமையாக வேலை செய்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும், பிறரோடு சேர்ந்து வேலை செய்வதில், திறமை மிக்கவர்களாகவும், எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பவர்களாகவும் இருப்பார்கள். தொழில் அதிபர்கள், அரசாங்கத்தில் உயர்பதவி வகிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைமிக்க தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் விரல்கள், இந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.
- டி.எஸ்.என்