Published:Updated:

ஃப்ளாட்டுகளில் வாஸ்து குறைபாடு இருந்தால் என்ன செய்யலாம்?

வாஸ்து சாஸ்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரத்தின் அவசியம் என்ன? அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், அந்த இல்லத்தில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் என்ன செய்வது? நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

? ஜாதகப்படி எனக்கு பித்ரு தோஷம் இருக்கிறதா... இருக்கிறது எனில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- எஸ்.சங்கரசுப்பிரமணியம், பூனே

! ஒருவருக்கு பித்ரு தோஷம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதாலும் மறைந்த முன்னோர்களுக்கு உரிய முறையில் தர்ப்பணம் செய்யாமல் விடுவதாலும் பித்ரு தோஷம் ஏற்படும். பித்ரு தோஷத்தால் வாழ்க்கையில் பலவிதமான சிரமங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும் திருமணத் தடை, குழந்தைப்பேறு இல்லாமை, மனவளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் வரக்கூடும்.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜாதகத்தில் சுப கிரகங்கள் மறைவு ஸ்தானங் களான 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெற்றிருப்பது, சூரியன் மறைவு பெற்றிருப்பது, மாந்தி பாதக ஸ்தானத்தில் இருப்பது போன்ற அமைப்புகள் காணப்பட்டால் அந்த ஜாதகருக்குப் பித்ரு தோஷம் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் குரு மறைவு ஸ்தானம் பெற்றிருப்பதும் பாதக ஸ்தானத்தில் மாந்தி இருப்பதும் பித்ரு தோஷ நிலையைக் காட்டுகின்றன.

நீங்கள் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கவேண்டியதும் அவசியம். தினமும் காலையில் எழுந்ததும் காகத்துக்கு சாதமும் தண்ணீரும் கொடுப்பது நல்லது. இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால், விரைவில் தோஷம் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

? வாஸ்து சாஸ்திரத்தின் அவசியம் என்ன? அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், அந்த இல்லத்தில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் என்ன செய்வது? நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

- எம்.முருகானந்தம், கோவை-2

! வேதங்களின் ஆழ்ந்த ஞானமும் கண்ணோட்ட மும் பலராலும் பாராட்டப்பட்டவை. மேலை நாட்டினர் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயத் தொடங்குவதற்கு முன்பே நம் முன்னோர் அதுபற்றிய உயர்வான ஞானத்தைப் பெற்றிருந்தனர். அவற்றில் ஒன்றே வாஸ்து சாஸ்திரம். அனைத்து மக்களும் தங்கள் இருப்பிடங்கள் மூலமாக வாழ்க்கையில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கமாகும். இகலோக சுகத்தையும் பரலோக சுகத்தையும் இந்த சாஸ்திரங்களின் மூலம் எளிதில் பெறலாம் என (வராஹமிஹிரர் வாஸ்துவில்) மகரிஷி நாரதர் கூறுகிறார்.

அனேன விதின சமயாக

வாஸ்து பூஜாம்கரோதி; யா

ஆரோக்யம் புத்ரலாபாம்

சாதனம் தான்யம் லபேன்நர:

எவரொருவர் வாஸ்துவை முறையாக மதிக்கிறாரோ, அவர் திரண்ட செல்வத்தையும் குடும்ப வாரிசுகளையும் சொத்துகளையும் இகபர இன்பங்களையும் தவறாமல் அடைவார். வசிக்கும் இடங்களில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அடுக்கடுக்கான பிரச்னைகள் ஏற்படும் என்று நாரத மகரிஷி விளக்குவதாக வராஹமிஹிரரின் வாஸ்து சாஸ்திரம் விவரிக்கிறது.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வாஸ்துபடி கட்டுமான அமைப்புகளை மாற்றி அமைக்க முடியாதுதான். எனினும் தாங்கள் வசிக்கும் இல்லத்தில் `ஏதேனும் வாஸ்து குறைபாடு இருக்குமோ... இருந்தால் என்ன செய்வது’ என்ற நெருடல் எழுந்தால், அதை அகற்றவும் வழி சொல்லியிருக்கிறார்கள், முன்னோர்கள்.

‘பஞ்ச சிர ஸ்தாபனம்’ எனும் யந்திரத்தை வெள்ளியிலோ, தங்கத்திலோ, தாமிரத் தகட்டிலோ தயார் செய்து வீட்டின் தலைவாசலில் ஸ்தாபித்து, வாஸ்து பூஜை செய்தால் போதும். சிங்கம், ஆமை, பன்றி, யானை, ஆண் எருது ஆகிய ஐந்து விலங்குகளின் தலைகள் பொறிக்கப்பட்ட இந்த யந்திரம், சகல வாஸ்து குறைபாடுகளையும் நீக்க வல்லது என்பது சாஸ்திரம் அறிந்த பெரியோர்களின் வழிகாட்டல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? சொந்த நலனுக்காக தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்யலாமா... சுதர்சன ஹோமம் குறித்த விவரங்கள் தேவை.

- கே.ராமநாதன், சென்னை-44

! ஹோமங்களை இரண்டு வகையாகச் சொல்வார்கள். ஒன்று காம்ய யோகம்; மற்றொன்று நைமித்திக ஹோமம். செல்வம், உடல்நலம் போன்ற வளங்களைப் பெறும் பொருட்டு தனிப்பட்ட முறையில் அவரவர் வீட்டில் செய்யும் ஹோமங்கள் `காம்ய’ வகை. உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் மழை வேண்டியும் நாட்டில் சுபிட்சம் நிலவவும் பொதுவான ஓரிடத்தில் செய்யப்படுவது நைமித்திக ஹோமம்.

வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு சுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இந்த ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. இந்த ஹோமத்தில் சுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரீ மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

தீர்க்க ஆயுள் பெறுவதற்கும் நினைத்தது நிறைவேறவும் அறுகம்புல்லைப் பசும்பாலில் நனைத்தெடுத்து அக்னியில் சேர்த்து, சுதர்சன ஹோமம் வளர்ப்பார்கள். அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய தாமரைப்பூவைப் பயன்படுத்துவார்கள். அதேபோல் எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கவும், ஆபத்துகள் நேராமல் தற்காத்துக்கொள்ளவும், சத்ரு உபத்திரவங்கள் நீங்கவும், தீவினைகளால் ஏற்படும் பாதிப்புகள் விலகவும் சுதர்சன மூர்த்தியை வணங்கி வழிபட்டு, அவருக்கான ஹோமத்தை முறைப்படி செய்து பலன் பெறலாம்.

? என் பெண்ணுக்குப் பல காரணங்களால் திருமணம் தடைப் பட்டு வருகிறது. ஜாதகப்படி அவளுக்கு ஏதேனும் தோஷம் இருக்கிறதா, என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- எஸ்.மோகனா, சென்னை - 32

! பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் அமையப் பெற்றிருந்தாலும், கிரகங்கள் அனைத்தும் ராகு மற்றும் கேதுவுக்கு இடையே அமைந்திருக்கின்றன. இந்த நிலையை காளசர்ப்ப தோஷம் என்பார்கள். இதன் காரணமாகவே உங்கள் பெண்ணின் திருமணம் தடைப்பட்டு வருகிறது. எனினும் களத்திரக்காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தான அதிபதி குரு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். எனவே, கவலை வேண்டாம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று காளஹஸ்திக்குச் சென்று காளசர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜையைச் செய்து வரவும். விரைவில் திருமணம் நடைபெறும். வேறு பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

- பதில்கள் தொடரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-2

Email: sakthi@vikatan.com