மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?

 தீபங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபங்கள்

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டிய பலன்கள் அனைத்தையும் அளிப்பார்.

? மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. ஆனால், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்துக்கு மட்டும் என்ன தனிச் சிறப்பு? அன்று அனைத்து ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

- கே.கலையரசன், பெங்களூரு

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டிய பலன்கள் அனைத்தையும் அளிப்பார். ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அக்னியை வழிபடுவது மிகவும் முக்கியமானது. ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய முப்பது நாள்களைக் `கார்த்திக' மாதம் என்று சாந்திரமான முறையில் கூறுவர். இந்த மாதம் முழுவதுமே தீபங்களை ஏற்றி வழிபடுவதையே தீபாவளி என்று கூறுவர். ஐப்பசி மாதம் சதுர்த்தசியன்று தீபாவளிப் பண்டிகையை தீபங்கள் ஏற்றிக்கொண்டாடுகிறோம். அன்று மட்டுமல்லாமல் அந்த மாதம் முழுவதும் அதாவது அடுத்த அமாவாசை வரை வீட்டில் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இதுவே நம் மரபு.

கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?

சௌரமான அடிப்படையில், சூரியன் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசியை அடையும் அந்த ஒரு மாதத்தின் நட்சத்திர மாக விளங்கக்கூடியது கிருத்திகை. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. சித்திரை மாதத்துக்கு சித்திரை; வைகாசிக்கு விசாகம் என்று சொல்வதைப் போல் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தைச் சிறப்பாகக் கொண்டாடச் சொல்கின்றன ஆகமங்கள்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் சூரியனின் சாரம் பெற்றவை. சூரியனாரின் அதிதேவதை யான அக்னியைக் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவது நல்லது. நம் அக இருளை நீக்கி, உள்ளொளி பெருக்கி, நம் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மைகள் கிடைக்க இந்தத் தீப வழிபாடு உதவும்.

ஆறு நட்சத்திரங்களின் கூட்டு அமைப்பே கார்த்திகை. ஆறு என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களையும் அன்னையின் ஒரு முகத்தையும் குறிக்கும். சிவன், சக்தி என்பது நம் அறிவும் ஆற்றலு மாகும்.

மொத்தத்தில், இறைவன் ஜோதி ஸ்வரூபமே என்று நாம் உணர்ந்து கொள்வதற்கும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை கிடைத்திடவும் கிருத்திகை நட்சத்திரத்தன்று திருவண்ணா மலை முதலான தலங்களில் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நாமும் நம் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபட்டு, ஒளிமயமான வாழ்க்கைக்குப் பிரார்த்திப்போம்.

? அவதாரம் என்பதன் பொருள் என்ன? புராணங் களில் மகாவிஷ்ணு மட்டுமே பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மற்ற கடவுளர்கள் ஏன் அவதாரம் செய்யவில்லை?

- எஸ்.சங்கரலிங்கம், மும்பை.

‘அவதாரம்’ என்றால் கீழே இறங்கி வருதல் என்று பொருள். இங்கு எல்லாம்வல்ல இறைவன், உயிர்களைப் பாதுகாப்பதற்காக உருவம் எடுத்துக்கொள்கிறார். இறைசக்தி என்பது ஒன்றே. ஒரே சக்தியே பல வடிவங்கள் எடுத்து அருள்செய்கின்றன. அவற்றுள் பகவான் தசாவதாரங்களில் அருள் செய்விப்பதைப் புராணங்கள் போற்றுகின்றன. இந்தப் பத்து அவதாரங்கள்தாம் பிரசித்தமானவை.

கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?

இன்னும் பல அவதாரங்களை பகவான் எடுத்திருக்கிறார். என்று எப்போதெல்லாம் தர்மத்துக்குத் தீங்கு விளைவிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தோன்றி நல்லவர்களைக் காப்பாற்றுவதாக பகவான் வாக்களித்துள்ளார் (யதா யதா ஹி தர்மஸ்ய...).

எல்லாம்வல்ல பராசக்தி யானவள், எப்போதெல்லாம் தீமைகள் அதிகமாகின்றனவோ, அப்போதெல்லாம் அவற்றைப் போக்குவதற்கு வருவேன் என்று மார்க்கண்டேய புராணத்தில் கூறியிருக்கிறாள் (இத்தம் யதா யதா பாதா...). இதுபோன்று பல புராணங்களை நாம் உற்றுநோக்கினால், அந்தந்தப் புராணத்துக்கு உரிய தெய்வ சக்திகள், உயிர்களுக்குத் தீங்கு ஏற்படும்போதெல்லாம் அவற்றைக் காப்பாற் றுவதாக உறுதியளித்திருப்பதைக் காணலாம்.

கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?

எனவே, அவதாரங்களில் நமக்கு மிகவும் பிரசித்தமாகத் தெரிந்தவை தசாவதாரங்கள் என்று கூறலாமே தவிர, பத்து அவதாரங்கள்தாம் இதுவரை ஏற்பட்டுள்ளன என்று சொல்ல இயலாது. அனைத்து தெய்வ சக்திகளும் தேவையான நேரங்களில் நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து அருளியிருப்பதைப் புராணங்களும் இதிகாசங்களும் விளக்குகின்றன.

? அனுமனின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து பூஜித்தால், நியமங்கள் சிறிது பிசகினாலும் தீய விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது சரிதானா? பிரம்மசார்யான அனுமனை பெண்கள் பூஜிக்கலாமா?

- எஸ்.ரமேஷ், சென்னை - 91

கடவுளை வழிபடுவதற்கு பயபக்தி என்பது பொதுவானது. இங்கு பயம் என்பது, சாஸ்திரங்களைக் கடைப்பிடிக்காமல் விடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் குறித்தது. பக்தி என்பது, பரிபூரண நம்பிக்கையுடன் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடைப்பிடிப்பது.

எனவே, ஆஞ்சநேயர் என்ற தெய்வம் மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களையுமே எப்படி நம் தாய் தந்தையரைப் போற்றுகிறோமோ அப்படி வழிபட்டு வருவது நல்லது.

வீண் பயம் வேண்டாம். கடவுள் நமக்குப் பெற்றோராகவும், குருவாகவும், நண்பராகவும் பல நிலைகளில் நம்மை வழிநடத்துபவர். எனவே, வீண் அச்சம் தேவையில்லை.

பிரம்மசாரி தெய்வத்தைப் பெண்கள் வழிபடலாமா என்று கேட்டால், பெண் தெய்வங்களை ஆண்கள் வழிபடலாமா என்ற கேள்வி எழும். இப்படிக் கேட்டுக் கொண்டே இருந்தால், முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கும்.

எனவே, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள வற்றையே செய்யவேண்டும். இதுவே இறைவனின் அருளை எளிதில் பெறக்கூடிய வழியாகும். எல்லாம்வல்ல ஆஞ்சநேயரை எல்லோரும் வழிபடலாம். அஞ்சனைமைந்தனின் அருளால் அவர்கள் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002