Published:Updated:

‘அம்பாளை ஒன்பது நாள் வழிபடுவதன் மகத்துவம் என்ன?’

அம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
அம்பாள்

ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் வியாச மஹரிஷி தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார்.

‘அம்பாளை ஒன்பது நாள் வழிபடுவதன் மகத்துவம் என்ன?’

ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் வியாச மஹரிஷி தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார்.

Published:Updated:
அம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
அம்பாள்

? சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. அம்பாளுக்கு நவராத்திரி கொண்டாடுகிறோம். பராசக்திக்குத் தொடர்ந்து ஒன்பது நாள் விழா கொண்டாடுவதன் தாத்பர்யம் என்ன. தெய்வ அவதாரங்களான ராமனும் கண்ணனும்கூட நவராத்திரி விரதம் கடைப்பிடித்ததாக அறிந்தேன். அதுபற்றிய விளக்கங்களையும் தாருங்களேன்.

- கீதா லட்சுமணன், வீரபாண்டியபட்டினம்

`கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நம்முடைய இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மை களைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் உடனடியாக உதவி செய்யும் என்பது முன்னோர் வாக்கு. அவ்வகையில் அம்பிகையைப் போற்றி வழிபட உதவும் வைபவம் நவராத்திரி

`நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாள்கள். ‘நவ’ எனில் ‘புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாள்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமா? நவக்கிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க, இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும். அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு (‘விச்வஸ்ய பீஜம்’).

‘அம்பாளை ஒன்பது நாள் வழிபடுவதன் மகத்துவம் என்ன?’

அவதாரங்கள் அம்பிகையை வழிபட்டது குறித்துக் கேட்டிருந்தீர்கள். ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் (நவராத்ரோவாஸஞ்ச பகவத்யா ப்ரபூஜனம் ஸர்வசித்திகரம் ராம ஜபஹோமவிதானத:) வியாச மஹரிஷி தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார். ஸ்ரீகிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயனி தேவியைக் குறித்து விரதம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்ற வாக்கின்படி, ஒரு மனிதனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால்தான் அது அர்த்தமுள்ளதாகிறது. அர்த்த முள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர்களே மோட்சம் எனும் வீடுபேறு பெறுவார்கள். அப்படியானால், இந்த வாழ்க்கைக்குத் தேவையான பொருள் என்பது யாது?!

எப்படி ஒரு மருந்தில் பலவித ரசாயனங்களின் கலவை உள்ளதோ அதுபோன்று கல்வி, செல்வம், வீரம் ஆகிய முப்பொருள்களும் சரியான கலவையில் அமைந்தால்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்பமயமாக அமையும். அவற்றை நமக்கு அருள்பவர்கள், எல்லாம் வல்ல பரமசிவனின் பிரிக்கமுடியாத சக்தியாக விளங்கி வரும் ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களான ஸ்ரீதுர்கா, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய தேவியர். இந்தச் சக்திதேவியரைப் போற்றும் வைபவம் நவராத்திரி.

ஆக, வரும் நவராத்திரி புண்ணிய காலத்தில் ஆதிசக்தியை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கும் என்பது நிச்சயம்.

? மகன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்கிறார்கள். இந்த தோஷம் ஆயுள் முழுவதும் நீடிக்குமா. அதற்கு என்ன பரிகாரம். வழிகாட்ட வேண்டுகிறேன்.

- கே.மீனாட்சிசுந்தரம், பாபநாசம்

ஒருவர் பிறக்கும்போது இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தே அவருக்குச் செவ்வாய்தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறமுடியும். அதேநேரம், செவ்வாய் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்தாலோ அல்லது சில கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லையென்று ஜோதிட நூல்கள் வலியுறுத்துகின்றன.

செவ்வாய் தோஷம் என்பது கால அளவுடன் தொடர்புடையது அல்ல. ஒருவருக்குச் செவ்வாய் தோஷம் இருந்தால், செவ்வாய்க் கிரகம் எனப்படும் அங்காரகனை வழிபடவேண்டும். அப்போது, தோஷத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து நற்பலன்கள் கிடைக்கும் . இதுவும்கூட பொதுவான கருத்துதான். ஒருவரின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து, மற்ற கிரகங்களின் சுப - அசுப பார்வைகளைக் கணித்து, அதற்கேற்ப உரிய பரிகாரங்களைக் கூற வேண்டும்.

? சூரியனை வழிபாடு பிணி இல்லாத வாழ்வைத் தரும் என்று பெரியவர் ஒருவர் கூறினார். நான் சூரியதேவனை வழிபட விரும்புகிறேன். அவரை வழிபட உகந்த நாள் எது, எப்படி வழிபடுவது?

- கே.புவனேஷ், புதுச்சேரி

இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிப்பவர் சூரியபகவான். ஞாயிற்றுக் கிழமைகள் சூரியனுக்கு உரியது என்கின்றன ஞானநூல்கள். எனினும், அனுதினமும் அவரை வழிபடுவது சிறப்பு.

ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:

ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:

ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:

ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம

என்று சொல்லி அவரை வணங்கி வழிபடலாம்.

‘அம்பாளை ஒன்பது நாள் வழிபடுவதன் மகத்துவம் என்ன?’

‘ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி திநே திநே: ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தாரித்ர்யம் நைவ ஜாயதே:’ என்கிற வசனப்படி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்

களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்

கின்றன.

? `குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை’ என்பார்கள். குருவுக்கு அப்படியென்ன மகிமை?

-கோ.லட்சுமணன், செட்டிக்குளம்

‘கு’ எனில் இருட்டு; ‘ரு’ எனில் இருளைப் போக்குபவர் என்று சொல்வர். `குரு என்பவர், நமது அக இருளைப் போக்கி ஞானத்தை அளிப்பவர்’ என்கின்றன சாஸ்திரங்கள். முழு நம்பிக்கையுடன் தன்னைச் சரணடையும் சீடனுக்கு, தமது தவ வலிமையாலும் அன்பாலும் ஞானத்தை அருள்வார் குரு என்பதே சாஸ்திரங்கள் தரும் விளக்கம்.

`குரு இல்லா வித்தை குப்பையிலே’ என்று நம் முன்னோர்கள் கூறுவர். மருத்துவர் நம் உடலைப் பரிசோதித்து, பிறகு மருந்துகளைப் பரிந்துரைப்பது போன்று, சிஷ்யனின் மனபரிபாகத்தை அறிந்து, அதற்கேற்ப மந்திரங்களினால் தீட்சை அளித்து, பரம்பொருளை அடையும் வழியைக் காட்டுபவர் குருநாதர்.

‘அம்பாளை ஒன்பது நாள் வழிபடுவதன் மகத்துவம் என்ன?’

எந்தச் சத்தமானது, நாம் உச்சரிக்க உச்சரிக்க நம்மைக் காப்பாற்றுகிறதோ, அந்தச் சத்தமே ‘மந்த்ரம்’ என்று கூறப்படுகிறது. அதை, தகுதியான குரு ஒருவரிடம் முறைப்படி உபதேசம் பெற்று, தொடர்ந்து சில மாதங்கள் ஜபம் செய்து வந்தால், பலன் உண்டு என்கின்றன ஞானநூல்கள். ஆகவே, அனைத்துக்கும் நல்வழி காட்டும் குருவின் துணை இருந்தால் இறையின் அருளை எளிதில் அடையலாம்.

? சிராத்த தினங்களில் வீட்டில் கோலம் போடலாமா? சில தினங்களுக்கு முன் இறைச் சந்நிதியிலிருந்த வில்வக் கனி ஒன்றைப் பிரசாதமாகப் பெற்று வந்தேன். அந்தக் கனியை எப்படிப் பயன்படுத்துவது?

- கே.ராதா, தேனி-2

முன்னோருக்கான வழிபாடுகளைச் செய்யும் `சிராத்தம்’ போன்ற தினங்களில் நமது வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. அதேபோல், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

முன்னோரை வழிபட்டபிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே, முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம், குறிப்பிட்ட தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்ப்பது மரபு.

வில்வக் கனி குறித்து கேட்டிருந்தீர்கள்.

எல்லாம்வல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்தும் தூய்மை நிலையைப் பெற்று விடுகின்றன. இதனாலேயே பிரசாதங் களை நிர்மால்யம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. நாம் இந்த உடலைப் பெற்றிருப்பது, முற்பிறவியில் செய்த கர்மவினைகளினால் என்பதை உணர்ந்து ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழித்து இறைவனடி சேருவதே நமது பிறப்பின் குறிக்கோள். இந்த நிலையை அடைவதற்குப் பல வழிகள் கூறப் பட்டிருக்கின்றன.

எனினும் எளிமையான வழி, ஆலயங்களில் நமக்கு பூஜித்து அளிக்கப்படும் திவ்ய பிரசாதங்களை வீணாக்காமல் பயன்படுத்து வதே. அவை நம் உடலிலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத் தக்கூடிய ஆற்றல் மிகுந்தவை. இறைவனின் திவ்ய அருள் பார்வை பெற்ற வில்வக் கனியை வீட்டில் மரியாதையான இடத்தில் வைக்கலாம். பூஜை அறை அல்லது பொக்கிஷங்கள் வைக்கும் இடத்திலோ அல்லது பொதுவான இடத்திலோ வைப்பதால், அந்த இடத்தில் உள்ள ஆற்றல் அதிகரிப்பது மட்டுமல்லாமல் தீய சக்திகளின் தாக்கமும் குறைந்து விடுவதாக ஐதிகம்.

- பதில்கள் தொடரும்...