Published:Updated:

குபேர சம்பத்து தரும் குசேலர் கதை!

குசேலர்
பிரீமியம் ஸ்டோரி
குசேலர்

கண்ணனும் மூன்று பிடி அவலும்! ஓவியம்: பாரதிராஜா

குபேர சம்பத்து தரும் குசேலர் கதை!

கண்ணனும் மூன்று பிடி அவலும்! ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
குசேலர்
பிரீமியம் ஸ்டோரி
குசேலர்

குசேலர் தரிசனமும் குசேலரின் திருக்கதை பாராயணமும் செல்வ சம்பத்து அளிக்கும் எனும் நம்பிக்கை உண்டு. நமக்கு நீண்ட நாள்களாக வராத தொகை வரவேண்டும் என விரும்பும் அன்பர்கள், குஜராத் - போர்பந்தரில் உள்ள குசேலர் ஆலயத்தை தரிசித்து வரலாம்.

குருவாயூர், பாலக்காடு அருகிலுள்ள பட்டாம்பி குருவாயூர் ஆகிய தலங்களுக்கு (டிசம்பர் மாதம் அனுஷ்டிக்கப்படும்) குசேலர் தினத்தன்று சென்று, அவல் சமர்ப்பித்து கிருஷ்ணபகவானை வழிபட்டு வந்தால், குபேர சம்பத்து உண்டாகும்; கடன்கள் அடைபடும். இயலாதவர்கள், கண்ணனின் திருவருளால் குசேலர் குபேர சம்பத்து பெற்ற திருக்கதையைப் படிப்பதும், கேட்பதும் மிகவும் சிறப்பு.

நம்மில் பெரும்பாலானோருக்குக் குசேலரின் கதை தெரியும். நண்பர் குசேலர் தனக்காகக் கொண்டு வந்த அவல் மூட்டையைப் பிரித்து, ஒரு பிடி எடுத்து கண்ணன் உண்டதுமே குசேலரின் ஏழ்மை விலகியது; 2-வது பிடியை உண்டதும் புகழும், கீர்த்தியும் குசேலரின் குடும்பத்துக்கு உண்டாகிவிட்டனவாம். 3-வது பிடியை எடுத்து உண்ணுமுன் கண்ணனின் கரத்தைப் பிடித்துத் தடுத்து விட்டாள் ருக்மிணி.

பரந்தாமன் மூன்றாவது பிடி அவலையும் எடுத்து உண்டால், தன்னையும் தன் பரிவாரங்களையும் கூட சுதாமனாகிய குசேலருக்கு அளித்துவிடுவார் என்று பயந்தே, ருக்மிணி மூன்றாவது பிடி அவலைத் தடுத்ததாகப் பலரும் கூறுவர். இங்கே நமக்குள் சில கேள்விகள் எழும்.

‘தர்மத்தைத் தடுப்பது தர்மமா, அதிலும் கணவன் செய்யும் தர்மத்தை, தர்மபத்தினியே தடுக்கலாமா, அதுவும் மகாலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் அள்ளிக்கொடுத்தால் அழியக் கூடியவையா... இத்தகைய கேள்விகள் எழுகின்றன. நம்மைப் போன்றே ருக்மிணிக்கும் ஒரு கேள்வி இருந்தது கண்ணனிடம் கேட்க!

அவள் கேட்ட கேள்வி என்ன, அதற்குக் கண்ணன் சொன்ன பதில் என்ன?

தொடர்ந்து கதையைப் படியுங்களேன்!

குபேர சம்பத்து தரும் 
குசேலர் கதை!

ண்ணனின் மாளிகையில் சுதாமனாகிய குசேலருக்கான உபசாரங்கள் நடந்துமுடிந்தன. கண்ணன் அருளால் தனது ஏழ்மை விலகிய விஷயம் எல்லாம் குசேலருக்குத் தெரியாது. கண்ணனின் அன்பால் பேரானந்தம் அடைந் திருந்த குசேலரின் மனம் நிர்மலமாக இருந்தது. பரமார்த்த நிலையில் குசேலர் `வருகிறேன் கண்ணா' என்று விடைபெற்றுக்கொண்டார்.

கண்ணன், அந்த நண்பருக்குச் சகலவித சௌபாக்கியங்களையும் நிச்சயமாகத் தந்திருப் பார் என்று ருக்மிணி யூகித்தாள். இருந்தாலும், அவள் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. கண்ணனிடமே அதுபற்றி கேட்டாள்.

``ஸ்வாமி! வறுமையால் வாடி வந்த உங்கள் அருமை நண்பனுக்கு எத்தனையோ ஐஸ்வர்யங் களை நீங்கள் அளித்திருப்பீர்கள். அதைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரிவிக்காமல், அவர் திரும்பிப் போக எந்தவித சௌகர்யங்களும் செய்து தராமல், வந்தது போலவே மீண்டும் நடந்தே ஊர் திரும்பச் சொல்லிவிட்டீர்களே, ஏன்?’’ என்று கேட்டாள்

கண்ணன் பதில் கூறினான். ``ருக்மிணி! சுதாமன் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும், திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. வீட்டுக்குச் சென்று, குபேர செல்வத்தை தான் பெற்றதை அறிந்ததும், பிரச்னைகள் ஆரம்பித்துவிடும். செல்வத்தால் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்கிற பேரவா, அவற்றால் ஏற்படும் புதிய பிரச்னைகள் ஆகியவற்றில் சுதாமனது வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்து விடும். அப்போது அவன் பரமானந்த நிலை மறைய ஆரம்பித்துவிடும்.

ஆக, வாழ்வில் அவன் அனுபவிக்கப் போகும் கடைசி நேர ஆனந்தத்தையும் சச்சிதானந்த நிலையையும் நான் அழிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவனை வந்தது போலவே திரும்பி வழி அனுப்பியிருக்கிறேன்’’ என்றான்!

ருக்மிணி திகைத்தாள். கண்ணன் செய்யும் காரியங் களுக்கெல்லாம் ஒரு காரணம் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதானே. இப்போது கண்ணன் தன் பங்குக்கு, ஒரு கேள்வியை ருக்மிணியிடம் கேட்டான். அந்தக் கேள்வி நமக்குள்ளும் எழுந்த கேள்விதான்!

``சுதாமன் கொண்டு வந்த அவல் முடிப்பிலிருந்து நான் மூன்றாவது பிடி அவலை எடுத்தபோது, நீ ஏன் என் கையைப் பிடித்துத் தடுத்தாய்?’’

ருக்மிணி பதில் சொன்னாள்:

``ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக் கப்படும் எந்தப் பொருளும் பிரசாத மாகிறது. சுதாமனாகிய குசேலர் அன்புடன் தந்த அவல், அனைத்தை யும் தாங்களே சாப்பிட்டுவிட்டால், அந்தப் பிரசாதத்துக்காகக் காத்திருக் கும் எனக்கும், தங்களின் பரிவாரத் துக்கும் பிரசாதம் இல்லாமல் போய் விடுமே! அதற்காகத்தான், ‘எங்களுக் கும் கொஞ்சம் மீதி இருக்கட்டும்’ என்ற பாவனையில் தங்கள் கைகளைப் பிடித்தேன்’’ என்றாள்.

ஆகவே, ருக்மிணி தடுத்தது தர்மத்தை அல்ல; தர்ம பலனை அனைவரும் பெறவே அவள் அப்படிச் செய்தாள் என்கிறது திருக்கதை!

பஞ்சமி தினத்தில்...

டகு வைத்த நகைகள் வீடு வந்ததும் நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீரில் போட்டு பூஜை அறையில் ஒருநாள் வைத்த பிறகே உபயோகியுங்கள். அப்போது அந்த நகையை மீண்டும் அடகுவைத்து கடன் வாங்கும் நிலை ஏற்படாது.

வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வாங்கி வசதியில்லாத சிவாலயத்துக்கு தானம் கொடுக்கலாம்.

பிரதோஷ தினங்களில் சிவ வழிபாடு செய்வதும் பஞ்சமி தினத்தில் அம்பிகையை விளக்கேற்றி வழிபடுவதாலும் கடன் பிரச்னைகள் தீரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism