Published:Updated:

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - கன்னி

கன்னி
பிரீமியம் ஸ்டோரி
கன்னி

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - கன்னி

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

Published:Updated:
கன்னி
பிரீமியம் ஸ்டோரி
கன்னி

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கலகலப்பாகப் பேசுவீர்கள். மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுப்பீர்கள். இசை, வாசனை, தூய்மை ஆகியவற்றை விரும்புவீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை அளிப்பீர்கள். உங்களுக்கு இந்தப் பிலவ வருடம் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. 8-வது ராசி நஷ்டம், விரயம், அலைச்சல் ஆகியவற்றைத் தருமே என அஞ்சவேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வெள்ளை மனசு கொண்ட நீங்கள் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. அடுத்தவர்களின் குறைகளைத் தனியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டுங்கள். மற்றவர்களின் நல்ல குணங்களையும், திறமைகளையும் பாராட்டுங்கள்.

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சின்னச் சின்னதாக உடல்நலக் குறைவுகள் வந்து போகும். மனைவிக்குச் சில வருடங்களுக்கு முன்பே செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சையை உடனே செய்ய வேண்டி வரும். ஆனால் பெரிதாக ஆபத்து வராது. கவலைப்படாதீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்துங்கள்.

கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை, அடிமனதில் பயம் ஆகியன வந்து நீங்கும். அவ்வப்போது யோகா, தியானம் செய்யுங்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். அவர்களுக்கு உயர்கல்வி அல்லது உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். உங்கள் மகளைப் பெண் பார்த்துவிட்டு, நீண்ட நாள்களாகப் பதில் தராமல் தயங்கியவர்கள், இப்போது வலியவந்து பெண் கேட்பார்கள். திருமணம் உடனே முடியும். மகனுக்கு நல்ல மணப் பெண் அமைவாள். சகோதரிகளிடம் நிதானமாகவும், அளவாகவும் பழகுவது நல்லது. உடன் பிறந்தவர்களால் அலைச்சலும், செலவும் வந்து போகும்.

வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். ஆனி மாதம் திடீர் பணவரவும், வாகன வசதியும், சொத்துச் சேர்க்கையும், சுப காரியங்களும் நிகழும். புரட்டாசி மாதத்தில் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.21 வரை மற்றும் 13.11.21 முதல் வருடம் முடியும் வரை, குரு பகவான் 6 - ம் வீட்டில் நுழைவதால் செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். பணக் கையிருப்புகள் கரையும். அக்கம்பக்கத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். எதிலும் அகலக் கால் வைக்க வேண்டாம். விரலுக்கேற்ற வீக்கம் இருந்தால் போதும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. 14.9.21 முதல் 12.11.21 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவி வழியில் உதவியுண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.22 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். வருடம் பிறக்கும்போது கேது 3-ல் நிற்பதால் சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். 21.3.22 முதல் வருடம் முடியும் வரை ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கவேண்டாம்.

சிலருக்கு அலர்ஜி பாதிப்புகள் வந்து நீங்கும். சொந்தபந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுப் பேசாதீர்கள். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன் - மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப் போய் சிலநேரங்களில் மனக்கசப்பில் போய் முடியும்.

சனி பகவான் தரும் பலன்கள்

சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காகச் சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள்.

வியாபாரத்தில் அனுகூலம் உண்டு

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் உண்டு. மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புது முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. ஏற்றுமதி - இறக்குமதி, ரியல் எஸ்டேட், இரும்பு, உணவு வகைகளால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களை மதியுங்கள். போட்டிகள் அதிகரிக்கும். வரிபாக்கிகளை உடனுக்குடன் செலுத்துங்கள். தவறான வழிகளைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் சம்பளம் உயரும்

உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் மனத்தில் இடம்பிடிப்பீர்கள். வைகாசி, ஆனி மாதத்தில் புது நிறுவனங் களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் ஈகோ பிரச்னை வந்து போகும். அலுவலகம் மற்றும் உயர் அதிகாரிகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

கலைஞர்களுக்கு, வேற்று நாட்டினர் அல்லது வேற்று மாநிலத்த வரால் உதவிகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகளைத் தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தப் பிலவ ஆண்டு சவால்கள் மற்றும் செலவுகள் நிறைந்ததாக இருந்தாலும், உங்களுக்கு வெற்றியையும் பணவரவை யும் அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.

அம்பாள் அருளால் நல்லது நடக்கும்!

இந்தப் புத்தாண்டில் கன்னி ராசி அன்பர்களுக்கு, அம்பாள் வழிபாடு அளவற்ற நன்மைகளை அளிப்பதாக அமையும்.

பெளர்ணமி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் படிப்பதும் வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து காமாக்ஷி அம்மனைத் தியானித்து வழிபடுவதும் சிறப்பு. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு வந்தால், இன்னல்கள் நீங்கும்; புது முயற்சிகள் வெற்றி பெறும். இயலாதவர்கள், அருகிலுள்ள சிவாலயங்களுக்குக் குங்குமம் வாங்கி அளிக்கலாம். விளக்கு பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டு வரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism