ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

மகரம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும்

கனிவான பேச்சால் எல்லோரையும் வழிநடத்தும் முன்னோடி நீங்கள். சோபகிருது புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வட்டிக் கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் உயரும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

மகரம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டுப் புதுச் சொத்து வாங்கு வீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிறு சிறு விபத்து கள் வந்து நீங்கும். மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். யாரை நம்பியும் பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பரபரப் புடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாரிசு விரும்பும் தம்பதிக்கு வாரிசு உருவாகும். மார்கழி மாதத்தில் காய்ச்சல் முதலான சிறு உடல் உபாதைகள் உண்டு. வீண் விவாதங்களும், அலைச்சலும் வரக் கூடும்.

14.4.23 முதல் 21.4.23 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சில காரியங்களைப் பல முறை முயன்று முடிக்கவேண்டி வரும். இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாருக்கு ரத்த அழுத்தம், செரிமானம் சார்ந்த பிரச்னைகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்து விடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழிச் சொத்தைப் போராடி பெற வேண்டி வரும். சொத்து வாங்குவதில் கவனம் தேவை.

14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை பாதச்சனி தொடர்வதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பொங்குச்சனி நடை பெறும் அன்பர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 26.8.23 முதல் 19.12.23 வரை ஜன்மச்சனி இருப்பதால் சலிப்பு, சோர்வு வந்து நீங்கும். உடல்நலனில் கவனம்.

ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும். கேது 10-ல் நிற்பதால் உத்தியோகத்தில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை ராகு 3-ல் நுழைவதால் எதிலும் வெற்றி உண்டாகும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கேது 9-ல் நுழைவதால் இதுவரை உத்தியோகத்தில் பிரச்னைகள் குறையும்.

3.5.23 முதல் 30.5.23 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். 2.7.23 முதல் 19.8.23 வரை செவ்வாய் 8-ல் மறைவதனால் மனஇறுக்கம், வீண் பயம், காரிய தாமதம் உண்டாகும்.

வியாபாரிகளே! எதிலும் கவனமாக தடம் பதிப்பீர்கள். சுய யோசனைப் படி செயல்படுவீர்கள். ஐப்பசியில் இரட்டிப்பு லாபம் உண்டு. மக்கள் கூடும் இடத்தில் புதிய கடை அமையும். உணவு, ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மாசி, பங்குனி மாதங் களில், புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதத்தில் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். பதவி உயர்வும், சம்பள உயர்வும் நிறைவேறும். இருந்தாலும் உங்கள் வளர்சியை விரும்பாத சிலர் குறை கூறிக்கொண்டிப்பார்கள். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினருக்கு வேலைச் சுமை அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செலவு மற்றும் அதீத பணிச்சுமையைத் தந்தாலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உரிய பலனாகப் பெற்றுத் தரும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள திருநாரையூர் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஐயனார். ஞாயிற்றுக் கிழமைகளில் அவரை வழிபட்டு வாருங்கள்; வீண் பழிகள் விலகி, நல்ல முன்னேற்றம் உண்டாகும்.