ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

மிதுனம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஆண்டுத் தொடக்கம் முதல் 7.10.23 வரை கேது உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மனச் சஞ்சலம் உண்டு. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபன் வெடிக்கும்.

தொலைநோக்குப் பார்வை கொண்டவர் நீங்கள். சோபகிருது புத்தாண்டு உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் பிறக்கிறது. வீட்டில் சுப நிகழ்வுகள் கூடி வரும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.

மிதுனம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

மகளுக்கு நல்ல வரன் அமையும்; கல்யாணம் கோலாகலமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத் தில் வேலை கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க வழி பிறக்கும். 14.4.23 முதல் 21.4.23 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை பதற்றம் இருக்கவே செய்யும். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பும் அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். மகனின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். வீண் பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டிற்குச் சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். சொத்து விஷயங்களில் நிதானம் தேவை. 26.8.23 முதல் 19.12.23 வரை சனி பகவான் அஷ்டமத்துச் சனியாக வருவதால் பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். உரிமைக்காக நீதிமன்றங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வெளியூர்ப் பயணங்களின்போது, ஆபரணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்டுத் தொடக்கம் முதல் 7.10.23 வரை கேது உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மனச் சஞ்சலம் உண்டு. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபன் வெடிக்கும். பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிரவேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு 11-ல் அமர்வதால், பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். செல்வாக்குக் கூடும்.

8.10.2023 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 4-ல் கேதுவும், 10-ல் ராகுவும் நுழைவதால், தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். காரிய தாமதம், வாகன விபத்துகள் வந்து போகும்.

25.12.23 முதல் 19.1.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. வாகன விபத்துகள் வரக்கூடும். 4.2.24 முதல் 14.3.24 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வதால், வாழ்க்கைத் துணைவருக்கு சிறியளவில் சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பல சலுகைகளை அறிவிப்பீர்கள்.ஆனி, ஆடி மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மருந்து, இரும்பு, கட்டட உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினித் துறையினரே! வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.

மொத்தத்தில் இந்தச் சோபகிருது வருடம், ஒருபுறம் அலைச்சலைத் தந்தாலும் மறுபுறம் பண வரவையும் புகழையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை-கோயம்பேட்டிலிருந்து போரூர் செல்லும் வழியில் உள்ளது சிவகாமசுந்தரி உடனுறை ராமநாதீஸ்வரர் ஆலயம். பிரதோஷ காலத்தில் இங்கு சென்று வழிபட, சகல நன்மை களும் உண்டாகும்.