Published:Updated:

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - மிதுனம்

மிதுனம்
பிரீமியம் ஸ்டோரி
மிதுனம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - மிதுனம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

Published:Updated:
மிதுனம்
பிரீமியம் ஸ்டோரி
மிதுனம்

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மென்மையும் விட்டுக்கொடுக்கும் மனமும் உடைய நீங்கள், எல்லோருக்கும் உதவுவீர்கள். யார் மனதையும் புண்படுத்த மாட்டீர்கள். ஆன்மிகம், தத்துவம், அறிவியல் என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பீர்கள். உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

உங்களின் லாப ராசியில் இந்த வருடம் பிறப்பதால் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. சொல்ல முடியாத அளவுக்கு இழப்பு மற்றும் எதிர்ப்புகளைச் சந்தித்தீர்களே, இந்தப் பிலவ வருடத்தில் துயரங்கள் யாவும் தொலையும். புரட்டாசி மாதம் முதல் புரட்சிகரமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். இனி வீட்டில் அமைதி தங்கும். வாழ்க்கைத் துணைவருடனான சண்டை - சச்சரவுகள் நீங்கும். அவர் வழி உறவினர்களுடன் இருந்த சங்கடங்கள் நீங்கி, உறவு பலப்படும். பிள்ளைகள் இனி உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்.

இதுவரை, தொழில் தொடங்கலாம் என முயன்றபோது தடைகளும், தாழ்வு மனப்பான்மையும்தானே வந்தன... இனி நீங்கள் எதையும் தகுந்த முன்யோசனையுடன் செய்வீர்கள். கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும். ஆனி மாதத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். அழகு கூடும். முகம் மலர்ச்சி அடையும். உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும்.

கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்துகொள்வீர்கள். அஷ்டமத்துச்சனியால் ஏற்படும் தீமைகள் விலகி, மனம் தெளிவு பெறும். உங்களின் கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் ஆனி, ஆவணி மாதங்களில் சிறப்பாக முடியும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.21 வரை மற்றும் 13.11.21 முதல் வருடம் முடியும் வரை, குரு 9 - ல் அமர்வதால் எதிர்பாராத பணவரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. வெளிவட்டாரத்தில் உங்களை உதாசினப்படுத்தியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அசுர வளர்ச்சியடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தின் வருமானமும் உயரும்.

14.9.21 முதல் 12.11.21 வரை குரு 8 - ல் மறைந்திருக்கும் நேரத்தில், யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.22 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால் பயம், கோபம், தூக்கமின்மை, விரயச் செலவு, திடீர்ப் பயணம் என வரக்கூடும். கேது 6-ல் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 21.3.22 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீடான 11 - ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் தகுதி உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து விஷயங்களிலிருந்து வந்த வில்லங்கம் நீங்கும்.

வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5 - ல் நிற்பதால் வீண் குழப்பம், பிள்ளைகளால் மன வருத்தம், குடும்பத்தில் அதிருப்தி, நெருங்கிய உறவினர்களுக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும்.

சனி பகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச்சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண்பழி வந்து போகும். பணப்பற்றாக்குறை, கணவன் - மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்

வியாபாரத்தில் இதுவரையிலும் கடுமையான போட்டி, மறைமுகத் தொந்தரவு, வேலையாட்களின் ஏட்டிக்குப்போட்டியான நடவடிக்கை, வியாபார ரகசியங்கள் கசிந்ததால் முக்கிய ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போனது ஆகிய பிரச்னைகள் வாட்டின. இந்த வருடத்தில் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்; நடப்பன எல்லாம் நலமாகும்.

ஆனி மாதம் முக்கியமான பெரிய தொகைகளை வசூலிப்பீர்கள். ரியல் எஸ்டேட், கட்டடத் தொழிலில் இருப்பவர்கள் இழந்ததை மீட்பீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி செய்வோர், கலைத்துறையினர், மின்னணுத் துறையினர் அதிக லாபம் ஈட்டுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் விரக்தி நீங்கும்

உத்தியோகத்தில் இருந்த வேலைச் சுமையும், விரக்தியும் நீங்கும். கடுமையாக உழைத்தும், நல்ல பெயர் வாங்க முடியாமல் அதிருப்தியாக இருந்தீர்களே... இந்த வருடத்தில் நிலைமை மாறும். பிரச்னைகள் தீரும்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது வேலை கிடைக்கும். சம்பளமும் அதிகரிக்கும். பழைய சம்பள பாக்கி வந்து சேரும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, பிற்பகுதியில் சகல சௌபாக்கியங்களையும் உங்களுக்கு அள்ளித் தருவ தாக அமையும்.

பைரவர் வழிபாடுநற்பலன்கள் அளிக்கும்!

மிதுன ராசி அன்பர்களுக்கு, ஶ்ரீசொர்ணகால பைரவர் வழிபாடு நன்மை வழங்கும். சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை வழிபடுவது, விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம், அழிவிடை தாங்கியில் அருளும் ஶ்ரீசொர்ணகால பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சகலமும் நலமாகும். இயலாதவர்கள், வீட்டிலேயே தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கேற்றி வைத்து, பைரவரைத் தியானித்து, `ஒளிமயமாக விளங்குபவரும் உலகைக் காப்பவரும், பாவிகளுக்குப் பயங்கரரும் க்ஷேத்திர பாலகருமான பைரவரை வணங்குகிறேன்' என்று வழிபட்டால் சகல சுபிட்சங்களும் கூடிவரும்; இன்னல்கள் நீங்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism