Published:Updated:

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - ரிஷபம்

ரிஷபம்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷபம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - ரிஷபம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

Published:Updated:
ரிஷபம்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

வெள்ளை மனசுக்காரரான நீங்கள் உண்மையை விரும்புவீர்கள். கலை நயம் உள்ளவர்கள்; கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். உங்களுக்கு இந்தப் பிலவ புத்தாண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு 12-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், சுப விரயங்கள் அதிகமாகும். வைகாசி மாதம் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். மதிப்பு - மரியாதை கூடும். வெளியூர்ப் பயணங்கள் திருப்தி தரும்.

கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகள் ஆதரவாக நடப்பார்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பதுடன், சேமிக்கவும் தொடங்குவீர்கள். முன்கோபம், அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆவணி மாதம் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

உடன் பிறந்தவர்களுக்குத் தக்க நேரத்தில் உதவுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தாய் வழி உறவினர்களிடையே நிலவி வந்த மனக் கசப்புகள் நீங்கும். அவர்கள், உங்களது வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து பேசுவார்கள். அரை குறையான கட்டட வேலைகளைப் புரட்டாசி, கார்த்திகை மாதங்களில் முடிப்பீர்கள். பழைய சொத்தை விற்றுப் புதுச் சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மார்கழி, தை மாதங்களில் குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

மனப் போராட்டம் ஓயும். அரசுக் காரியங்களில் தேக்க நிலை மாறும். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் மன நிறைவு தரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர் கால ஆசைகளில் ஒன்று நிறைவேறும். தாழ்வு மனப்பான்மை விலகும்.

வி.ஐ.பிகளது நட்பு கிடைக்கும். உங்கள் மனத்தை வாட்டிய பிரச்னைகள் முடிவுகள் வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் - நண்பர்களால் திடீர் திருப்பங்கள் நிகழும். அக்கம்பக்கத்தாருடன் இருந்த மோதல்கள் மாறும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகள் வெற்றி அடையும்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.21 வரை மற்றும் 13.11.21 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 10- ல் பயணிக்கிறார். ஆகவே, எடுத்த வேலையைக் கடுமையான முயற்சிக்குப் பின்னரே முடிக்க வேண்டியது வரும். வீண்பழி, ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளப் போராட வேண்டி வரும். யாரையும் நம்பி எந்தப் பணியையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. திடீர் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். ஆனால் 14.9.21 முதல் 12.11.21 வரை குரு 9 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டு. பழைய கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும்.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.22 வரை ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, நெஞ்சுவலி, முன்கோபம் அதிகரிக்கும். கேது 7 - ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். டென்ஷன், கனவுத் தொல்லை வரக்கூடும். 21.3.22 முதல் வருடம் முடியும் வரை 12-ல் ராகு நுழைவதால் உடல்நலம் சீராகும். ஆனால் தூக்கம் கெடும். கேது 6 - ல் நுழைவதால் திடீர் பணவரவு, யோகம் உண்டு. கடன் பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். அவ்வப்போது வரும் முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். எதிர்காலத்தை நினைத்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

சனி பகவான் தரும் பலன்கள்

9 - ம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். லேசாகத் தலைவலி, உடல் சோர்வு வந்து நீங்கும்.

வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள்

வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். நெளிவு சுளிவு தெரிந்து, லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் இருந்த மனக் கசப்புகள் விலகும். கூட்டுத் தொழிலில் ஆதரவு பெருகும். விலகிப் போன வாடிக்கையாளர்கள் விரும்பி வருவர். அயல்நாடு சென்று வந்தவர்களால் உதவி கிடைக்கும். வருடத்தின் மத்திய பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏஜென்சி, புரோக்கரேஜ், ஷேர் வகைகளில் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் எதிர்ப்புகள் விலகும்

உத்தியோகத்தில் முழு சுதந்திரம் பெறுவீர்கள். பணியில் நிரந்தரம் ஆக்கப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். உயர் அதிகாரியின் அடக்கு முறை விலகும். தடைப்பட்டிருந்த பதவி - சம்பள உயர்வு தேடி வரும். வேலைப்பளு குறையும். கணினித் துறையில் பணிபுரிபவர்களுக்கு அயல்நாட்டில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கலைஞர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சம்பளம் உயரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடு வீர்கள். திறமை வாய்ந்த புதிய கலைஞர்கள் அறிமுகமாவார்கள்.

மொத்தத்தில் இந்தப் பிலவ ஆண்டு, உங்களுக்கு அனைத்து வசதி, வாய்ப்புகளை அள்ளித் தருவதுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

ஶ்ரீசரபரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்!

ரிஷப ராசி அன்பர்கள், இந்தப் புத்தாண்டில் நற்பலன்கள் பெற வேண்டி, ஶ்ரீசரபமூர்த்தியை வழிபடலாம்.

லிங்க புராணம், ஶ்ரீஆகாச பைரவ கல்பம் முதலான ஞானநூல்களிலும், பல தந்த்ர நூல்களிலும் ஶ்ரீசரபேஸ்வரர் ஆராதனை குறித்து விளக்கப்பட்டுள்ளன.

நீங்கள் கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்.

இயலாதவர்கள் மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில், வீட்டிலேயே `ஓம் சரபேச்வராய நம:' என்று கூறி ஶ்ரீசரபேஸ்வரரை வணங்கி வழிபடலாம்; நற்பலன்கள் கிடைக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism