Published:Updated:

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

14.4.2022 முதல் 13.4.2023 வரை

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

14.4.2022 முதல் 13.4.2023 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

மேஷம்: 55% - கூடி வாழும் குணம் கொண்டவர்களே... உங்களின் தனாதிபதியான சுக்கிரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த சுபகிருது ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். இந்த வருடம் பிறக்கும்போது குரு பகவான் 12-ம் வீட்டில் மறைவதால் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வருடம் முழுக்க ராசிக்கு 10-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். ராசிக்குள் ராகு, 7-ல் கேதுவும் நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வந்து போகும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் இருக்கும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். பங்குதாரர்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை, இட மாற்றம், சிறு சிறு அவமானம் வந்து செல்லும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கடந்த கால அனுபவ அறிவாலும், அனுசரித்துப்போகும் குணத்தாலும் ஓரளவு முன்னேறும் வருடமிது.

ரிஷபம்: 90% - எதிலும் நடுநிலை தவறாதவர்களே... ராசிநாதனான சுக்கிரன் 10-ம் வீட்டில் பலமாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் நிர்வாகத்திறன் கூடும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். கணவரின் கோபம் குறையும். குரு பகவான் 11-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். வீண் பழி விலகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சாதகமாக முடியும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 9-ம் வீட்டில் சனி தொடர்வதால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். ராகு 12-ல் நுழைவதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இதுவரையில் இருந்து வந்த போட்டிகள் விலகும். லாபம் திருப்திகரமாக இருக்கும். பங்குதாரர்களால் இருந்துவந்த பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அதிகாரிகளால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். இந்தப் புத்தாண்டு உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

மிதுனம்: 70% - இதயத்திலிருந்து பேசுபவர்களே... உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் எதிர்ப்புகளைக் கடந்து சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கணவர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் இனம்தெரியாத கவலைகள், உறவினர் பகை, வீண்பழி, வேலைச்சுமை வந்து நீங்கும். சனி பகவான் 8-வது வீட்டில் மறைந்து அஷ்டமத்துச் சனியாக இந்த வருடம் முழுக்க நீடிப்பதால் எதிலும் ஒரு தயக்கம், தடுமாற்றம், விரக்தி, தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். இந்த சுபகிருது ஆண்டு செலவுகளில் உங்களைச் சிக்க வைத்தாலும் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அமைத்துத் தரும்.

கடகம்: 73% - சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே... உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இந்த சுபகிருது ஆண்டு பிறப்பதால் புத்துணர்ச்சி பெருகும். கணவரின் பாராமுகம் மாறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் தொட்ட காரியம் துலங்கும். செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். ராசிக்கு 10-ம் வீட்டில் ராகு நீடிப்பதால் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். கேது 4-ம் வீட்டுக்கு வருவதால் தாய்வழியில் கருத்து மோதல்கள் வந்து போகும். சூரியனும் புதனும் 10-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். யாரிடமும் தொழில் ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இந்த சுபகிருது வருடம் அலைச்சலுடன் ஆதாயம் தருவதாகவும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியதாகவும் அமையும்.

சிம்மம்: 55% - முகத்துக்கு நேராகப் பேசுபவர்களே... உங்கள் ராசியிலேயே இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தோழிகளால் திடீர் திருப்பம் உண்டாகும். குரு பகவான் 8-ம் வீட்டில் மறைவதால் திடீர்ப் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். 6-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் வழக்கில் வெற்றி உண்டு. மாமனார், மாமியார் மதிப்பார்கள். உங்களின் கனவு இல்லம் இந்த வருடத்தில் நனவாகும். கேது 3-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ராகு 9-ல் தொடர்வதால் வரவுக்கு மீறிய செலவுகள், தந்தையுடன் மோதல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இந்தாண்டு எதிர்பாராத செலவுகளாலும், திடீர்ப் பயணங்களாலும் உங்களைத் திணறவைத்தாலும் மற்றொருபக்கம் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

கன்னி: 65% - சுமைகளை சுகமாகச் சுமப்பவர்களே... குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சுபகிருது ஆண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் வரும். தவிர்க்க முடியாத தர்மசங்கடமான செலவுகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்குவீர்கள். கேது 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் வீண் வாக்குவாதம், ஏமாற்றம், குடும்பத்தில் சச்சரவு, மன இறுக்கம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் கணவருடன் வாக்குவாதம், மாமியார், நாத்தனாருடன் விரிசல் வரும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்றுத்தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட அவமானங்கள் நீங்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. இந்த சுபகிருது வருடம் நீண்ட நாள் கனவை நனவாக்குவதுடன் அதிரடி வெற்றியையும் அந்தஸ்தையும் தரும்.

துலாம்: 60% - பரந்த மனதுக்குச் சொந்தக்காரர்களே... உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். எப்போதும் சிடுசிடுக்கும் கணவர் இனி அன்பாகப் பழகுவார். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். முடங்கிக் கிடந்த வீடுகட்டும் பணி முழுமையடையும். வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். குரு பகவான் 6-வது வீட்டில் மறைவதால் வீண்பழி, திடீர்ப் பயணங்கள் வரும். மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்வது நல்லது. கொழுப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவைத் தவிர்ப்பது அவசியம். 4-ம் வீட்டில் சனி தொடர்வதால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் துரத்தும். உங்கள் ராசிக்குள் கேதுவும், ராகு 7-ம் வீட்டிலும் அமர்வதால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள், ஏமாற்றங்கள், இழப்புகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருக்க வேண்டாம். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம். பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு. இந்த சுபகிருது வருடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும், சகிப்புத்தன்மையாலும் வெற்றி பெற வைக்கும்.

விருச்சிகம்: 96% - எதிலும் புதுமையை விரும்புபவர்களே... குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் இனி நிம்மதியடைவீர்கள். இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த பயம், முன்கோபம் விலகும். விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 3-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் முடியும். செல்வாக்கு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் நிற்பதால் வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் செழிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இந்தப் புத்தாண்டின் முற்பகுதி முணுமுணுக்க வைத்தாலும், மையப்பகுதியும், பிற்பகுதியும் மகிழ்ச்சி தருவதாக அமையும்.

தனுசு: 56% - புன்சிரிப்பால் அனைவரையும் வசீகரிப்பவர்களே... உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். அடிப்படை வசதிகள் அதிகமாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குரு 4-ம் வீட்டில் நுழைவதால் சுபச் செலவுகள், எதிர்பாராத பயணங்கள் உண்டு. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள், எதிர்காலம் பற்றிய கவலைகள், வீண் விமர்சனங்கள் வந்து விலகும். பாதச்சனி தொடர்வதால் மற்றவர்களின் குடும்ப விஷயங்களில் அநாவசியமாக நுழையாதீர்கள். கேது லாப வீட்டில் நுழைவதால் வேற்று மதத்தினர்களின் உதவி கிடைக்கும். ராகு, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் யார் குறை கூறினாலும் அனுசரித்துப்போவது நல்லது. சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். விரும்பமற்ற இட மாற்றம் வரக்கூடும். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள். இந்தப் புத்தாண்டு விட்டுக்கொடுத்துப் போவதாலும், விடாமுயற்சியாலும் வெற்றி பெற வைக்கும்.

மகரம்: 54% - மனசாட்சிக்கு விரோதமில்லாதவர்களே... யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆனால், ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். 3-ல் குரு அமர்வதால் மன உளைச்சல், மறைமுக அவமானம், மூத்த சகோதரருடன் மனத்தாங்கல் வந்து விலகும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். ஜன்மச்சனி தொடர்வதால் சில நேரங்களில் முன்னுக்குப்பின் முரணாக முடிவெடுப்பீர்கள். மாமனார், மாமியாருடன் பனிப்போர் வந்து நீங்கும். கேது, உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குச் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். 4-ம் வீட்டுக்கு ராகு வருவதால் முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் நிலவிய வீண் பழி விலகும். உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். இந்தப் புத்தாண்டு துவண்டுபோயிருந்த உங்களைத் துளிர்க்க வைப்பதுடன் எதையும் சாதிக்கத் துணைபுரியும்.

கும்பம்: 64% - மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரிக்கும் பண்பாளர்களே... உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் தடைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். புது தெம்பு பிறக்கும். பணவரவு திருப்தி தரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குரு பகவான் உங்கள் ராசியைவிட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை குறையும். உடல்நிலை சீராகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஏழரைச்சனி தொடர்வதால் உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். ராகு ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வருவதால் மாமனார், மாமியாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஓரளவு லாபம் பெறுவீர்கள். புதுச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். இந்த சுபகிருது வருடம் கடனையும் சிக்கலையும் தந்தாலும் அதிலிருந்து விடுபடும் ஆற்றலையும் தரும்.

மீனம்: 63% - செயற்கரிய செயல்களைச் செய்தாலும் மிகச் சாதாரணமாக இருப்பவர்களே... சனி பகவான் லாப வீட்டில் நிற்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நிலவும். குரு பகவான் ஜன்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்து அமர்வதால் ஒருவித தாழ்வுமனப்பான்மையும், எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும். ராகு ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். 8-ம் வீட்டுக்கு கேது வருவதால் சேமிப்புகள் கரையும். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம் உண்டாகும். தைரியம் பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி நிலைக்கும். அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வெற்றி தேவதைக்கு உங்கள் விலாசம் தெரியும் வருடம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism