திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

தனுசு - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

தனுசு
பிரீமியம் ஸ்டோரி
News
தனுசு

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

னுசு ராசி நேயர்களே, தாராள மனசுடன் எல்லோருக்கும் உதவுவீர்கள். இயல்பாகவும், உண்மையாகவும் இருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு 5 - ம் ராசியில் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை ஏற்பட்ட மன உளைச்சல், காரியத் தடைகள், வாக்குவாதங்கள் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் வந்து போகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். முன்கோபம், வறட்டுப் பிடிவாதம் விலகும்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீர்கள். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடி மாதத்தில் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள் வந்து போகும். வாகனத்தை இயக்கும்போது கவனத்தைச் சிதறவிடாதீர்கள். சிறுசிறு விபத்துகள் நிகழலாம்.

ஆவணி மாதத்திலிருந்து பொருளாதார முன்னேற்றம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வசதி - வாய்ப்புகள் பெருகும். சகோதர வகையில் வீண் வாக்குவாதங்கள், மன உளைச்சல் வந்து போகும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் நிதானம் தேவை. தாய் வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். சண்டைக்கு வந்தவர்கள் சமாதானமாகச் செல்வார்கள். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு மாறுவீர்கள்.

குரு பகவான் தரும் பலன்கள்:

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு 2-ல் தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.

14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்துக்கொள்வீர்கள்.

ராகு - கேது தரும் பலன்கள்:

வருடப் பிறப்பு முதல் 20.3.2022 வரை கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.

21.3.2022 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டிற்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தை மூலம் சரியாகும். ராகு 5-ம் வீட்டிற்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். சொந்த பந்தங் களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

சனி பகவான் தரும் பலன்கள்:

இந்த ஆண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாக இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிகள் கவனமாகச் செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும்:

வியாபாரத்தில் புது முதலீடுகள், ஒப்பந்தங்கள் செய்வீர்கள். போட்டிகள் குறையும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புது நபர்களின் சந்திப்பு நிகழும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை முறையாகச் செலுத்துவீர்கள். வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புரோக்கரேஜ், கமிஷன், உணவு வகைகள் லாபம் தரும்.

உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்:

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனை களை ஏற்பர். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சம்பளப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கிசுகிசுத் தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். புது நட்பு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ வருடம், அரைகுறையாக இருந்த வேலைகளை முடிக்கவைக்கும்; பொருளாதார வளர்ச்சியையும், குடும்பத்தில் மலர்ச்சியையும் தருவதாக அமையும்.

துன்பங்கள் தீர்ப்பாள் துர்கை அம்மன்!

தனுசு ராசி அன்பர்களுக்கு அம்மன் வழிபாடு நன்மைகளைச் சேர்க்கும். ராகு 5-ல் நிற்கும்போது ஏற்படும் சங்கடங்களை விலக்க, துர்கையைச் சரணடைய வேண்டும்.

வெள்ளி, ஞாயிறு, பெளர்ணமி தினங்களில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, துர்காதேவியை தியானித்து வழிபட வேண்டும். அப்போது, மகிஷாசுர மர்த்தினி பாடல், அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடி வழிபடலாம். அபிராமி அந்தாதி

சிவாலயங்களில் கோஷ்ட துர்கைக்கு நெய்விளக்கு ஏற்றி வைத்து வணங்கலாம். இயன்றால், ஒரு செவ்வாய்க் கிழமை அன்று பட்டீஸ்வரம் துர்கையை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; அன்னையின் அருளால் அல்லல் நீங்கும்!