திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

துலாம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

துலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
துலாம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தும் அளவுக்குப் பட்டறிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் உடையவர் நீங்கள். உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

துலாம்
துலாம்

உங்கள் ராசிக்கு சமசப்தமமான 7-ம் வீட்டில் புது வருடம் பிறப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். கெட்ட நட்புகளிடமிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பணத் தட்டுப்பாடு தீரும். வீண் செலவுகள் கட்டுப்படும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீண் கவலைகள் நீங்கும். கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் விருப்பப்படி அவர்களை அயல்நாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். பையனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

கார்த்திகை மாதத்திலிருந்து மன மகிழ்ச்சி உண்டு. பணவரவு சரளமாக இருக்கும். உடன் பிறந்தவர்களிடையே விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆவணி, புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர்கள் உதவி நாடி வருவார்கள்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

பிரபலங்களின் நட்புறவு கிடைக்கும். புது முயற்சிகளில் தீவிரமாவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மார்கழி, தை மாதங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். வீடு, வாகன வசதிகள் பெருகும்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு 5 - ல் நிற்பதால் அரைகுறையாக நின்று போன வேலைகளை வருடத்தின் மத்தியப் பகுதியில் இருந்து விரைவாக முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தக்க நேரத்தில் உதவுவர். வீட்டில் ஒருவித போராட்டம் இருந்தாலும், வெளியில் வரவேற்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சாட்சிக் கையெழுத்து இடுவதைத் தவிர்க்கவும்.

14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.

ராகு - கேது தரும் பலன்கள்

ஆண்டு தொடக்கம் முதல் 20.3.2022 வரை ராகு 8 - ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கனவுத்தொல்லை, கழுத்துவலி வந்து நீங்கும்.

21.3.2022 முதல் கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணைவருக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பைக் கோளாறு, அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்; ஆகவே அவரின் உடல் நிலையில் கவனம் தேவை.

சனி பகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டு முழுக்க சனி 4 - ம் வீட்டிலேயே நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்கச் சான்றிதழ், தாய்ப்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும்போதும் சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேசவேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தைச் சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அவர்களிடம் வீண் விவாதம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள்

வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழைய சரக்கு கள் விற்றுத் தீரும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களில் சிலர், சொந்த இடத்துக்கு வியாபாரத்தை மாற்றுவீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். இரும்பு, துணி, மர வகைகளால் லாபம் வந்து சேரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் புது யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். மறைமுகப் போட்டிகளைச் சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சம்பள உயர்வுடன், பதவி உயர்வும் தேடி வரும். வேலைச்சுமை குறையும். அரசாங்க ஊழியர்கள் வீண் பிரச்னை - வதந்தியிலிருந்து விடுபடுவார்கள். கலைஞர்கள், தங்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வார்கள்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, உங்களுக்குத் தொலைநோக்குச் சிந்தையையும், வளைந்துகொடுத்துப் போகும் தன்மையை அளிக்கும். அதன் மூலம் உங்களின் எதிர்கால வெற்றிக்கு வித்திடுவதாக அமையும்.

வீரராகவ பெருமாள்
வீரராகவ பெருமாள்

ஶ்ரீவீரராகவர் அருளால் வெற்றி கிடைக்கும்!

துலாம் ராசி அன்பர்களுக்குப் பெருமாள் வழிபாடு நன்மைகளை உண்டாக்கும்.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். பெரியோர்களுடன் அமர்ந்து பாகவதம் பாராயணம் செய்யலாம். ஏகாதசி தினங்களில் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்குச் சென்று துளசி சமர்ப்பித்து பெருமாளை வழிபடுவது விசேஷம்.

இயன்றால் ஒருமுறை சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும். வீரராகவப் பெருமாளை, சனிக் கிழமைகளில் குடும்பத்துடன் சென்று தரிசித்து வழிபட்டு வாருங்கள்; நடப்பவை யாவும் நன்மையாகும்!