திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

மகரம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

மகரம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகரம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

கர ராசி நேயர்களே, மனசாட்சிக்கு மதிப்பு அளிப்பீர்கள். எப்போதும் எல்லோருக்கும் உதவுவீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்களின் ராசிக்கு 4 - ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நாலா விதத்திலும் நன்மை உண்டாகும். கட்டுக்கு அடங்காமல் இருந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். கணவன், மனைவிக் குள் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பல வழிகளில் பணம் வந்து உங்களை உற்சாகப்படுத்தும்; செலவுகளும் துரத்தும். திடீர்ப் பயணங்களால் வீண் செலவுகள் வந்து போகும். பையனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெண்ணுக்கு தடைப்பட்டிருந்த கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேறறம் தரும். சித்திரை, ஆனி, ஆவணி மாதங்களில் சிறப்பாகக் கல்யாணத்தை முடிப்பீர்கள்.

உடன்பிறந்தோரால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். ஆடி மாதம் எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள், விரயச் செலவுகள் வந்துபோகும். சிறு விபத்துகள் வரக் கூடும். வாகனத்தை கவனமாக இயக்கவும். புரட்டாசி மாதத்திலிருந்து மகிழ்ச்சி தங்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் நிதானம் தேவை. மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வாயுத் தொந்தரவு, தலை சுற்றல் வந்து போகும். கீரை, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து, நிலம், வீடு வாங்குவது - விற்பதில் கவனம் தேவை.

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு வாகனத்தை மாற்றுவீர்கள். மறைமுக எதிரிகளை வீழ்த்துவீர்கள். அக்கம், பக்கத்தாருடன் அளவாகப் பழுகுங்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

குரு பகவான் தரும் பலன்கள்:

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரையிலும், குரு பகவான் 2-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்குப் புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்து வீர்கள். பழைய வாகனத்தை மாற்று வீர்கள். 14.9.2021 முதல் 12.11.2021 வரை ஜன்ம குரு என்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி, வஸ்துகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி அவதூறு பரப்புவார்கள்.

ராகு - கேது தரும் பலன்கள்:

20.3.2022 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம் தடுமாற்றம் நீங்கும். ஆன்மிகச் சான்றோர்கள் அறிமுகமாவார்கள். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னை களுக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்கும். குடும்பத்தாருடனான சச்சரவுகள் நீங்கும்; பாசமும் அன்பும் அதிகரிக்கும். 5-ல் நிற்கும் ராகு சில சாதகமான பலன்களைத் தருவார்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகு நுழைவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ல் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், அதிருப்தி வந்து நீங்கும்.

சனி பகவான் தரும் பலன்கள்:

ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். எனினும் ஜன்மச் சனியாகத் தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயுப் பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்துக் கவலை அடைவீர்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும்:

வியாபாரத்தில் அனுபவபூர்வமாக நல்ல முடிவு எடுப்பீர்கள். போட்டிகள் அதிகரிகத்தாலும் லாபம் குறையாது. வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். புதிய வேலையாட்கள் வந்து சேருவார்கள். எலெக்ட்ரிக்கல், மருந்து, உணவு வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை விரிவுப் படுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்!

உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். எப்போதும் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, உங்களை டென்ஷன் படுத்திய உயர் அதிகாரிகளின் போக்கு மாறும்; பாராட்டு கிடைக்கும். சம்பள - பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களிடையே இருந்து வந்த கசப்பு உணர்வு மாறும். கலைத்துறையினரின் கற்பனைத் திறனுக்கு மதிப்பு -மரியாதை கூடும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் அன்பைப் பெறுவார்கள். உங்களின் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டப்படும். சம்பளம் உயரும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ புத்தாண்டு பிரச்னைகளை நீக்கு வதாகவும் இதுவரையிலும் இழுபறியாக இருந்த முயற்சிகளை வெற்றிகரமாக முடித்துத் தருவதாகவும் அமையும். பிரத்யங்கரா திருவருளால் சுபிட்சங்கள் உண்டாகும்!

பிரத்யங்கரா திருவருளால் சுபிட்சங்கள் உண்டாகும்!

பிரத்யங்கரா தேவி, சரப மூர்த்தியின் இறக்கைகளில் ஒன்றாகத் திகழ்பவள். இந்தத் தேவியின் அருளால் சத்ருக்களின் தொல்லைகள் நீங்கும். மகர ராசி அன்பர்கள் இந்தத் தேவியை வழிபட்டு பலன் பெறலாம்.

பூமி, ஜலம், அக்னி, காற்று, பிரபஞ்சம், அமிர்தம், சூரியன், மோட்சம், பாவ புண்ணியங்களை ஆளுமை செய்யும் வல்லமை ஆகிய நவ சக்திகளையும் கொண்ட இந்த அன்னையை ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டு அருள் பெறலாம். இயன்றால், சென்னை- சோழிங்கநல்லூரில் அருளும் பிரத்யங்கரா தேவியை, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டு வாருங்கள்; இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்!