திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

மீனம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

மீனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், எவர் மனதும் புண்படாமல் நடப்பீர்கள். உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

மீனம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

உங்களது ராசிக்குத் தன ஸ்தானத்தில் புத்தாண்டு பிறப்பதால், பண வரவு அதிகரிக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். அரைகுறையாக நின்று போன வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடன்பிறப்புகளால் செலவுகள் கூடினாலும், நிம்மதி பெருகும். வைகாசி மாதத்திலிருந்து செலவுகளைக் குறைப்பீர்கள். வயிற்று வலி, மூட்டு வலி வந்து நீங்கும். வெளியூர்ப் பயணங்கள் மன நிறைவு தரும். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

உங்கள் பையனுக்கு நல்ல பெண் அமைந்து, ஆனி -ஆவணி மாதங்களில் கல்யாணம் முடியும். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளை இல்லாத தம்பதிக்கு அழகான வாரிசு உண்டாகும். சகோதர -சகோதரிகளால் மன நிம்மதி உண்டு. அவர்களது தேவைக்கு உதவுவீர்கள். ஆடை- ஆபரணங்கள் சேரும்.

வருடத்தின் மத்தியப் பகுதியில் உடல்நலனில் கவனம் செலுத்துங் கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் மதிப்பு கூடும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் தேக்க நிலை மாறும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் நட்பும் அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும்.

ஐப்பசி, பங்குனி மாதங்களில் வீடு-மனை வாங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், பக்க பலமாக இருப்பர். முன்கோபத் தைக் குறையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை வந்து போகும். அக்கம்பக்கத்தாரின் அன்புத் தொல்லைகள் விலகும். பழைய வாகனத்தை விற்று விட்டு, புதிய நவீன ரக வாகனத்தில் உலா வருவீர்கள்.

ராகு-கேது தரும் பலன்கள்

20.3.2022 வரை ராகு 3-ல் நிற்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு மருத்து வச் செலவுகள் வந்த வண்ணம் இருக்கும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை, ராகு 2-ல் நுழைவதால் வீண் டென்ஷன், பேச்சில் கடுகடுப்பு, பதற்றம் அதிகரிக்கும்.

கேது 8-ல் நுழைவதால் விபத்து, திடீர்ப் பயணங்கள் வரக்கூடும். ஆவணி மாதத்தில் கல்யாணம், சீமந்தம், புதுமனை புகுவிழா, காதணி விழா என வீட்டில் விசேஷங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக் கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள், மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது. தந்தையுடன் மனத்தாங்கல் வரும்.

14.9.2021 முதல் 12.11.2021 வரை குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர்கள் வியக்கும் வகையில் வளர்ச்சி பெறுவீர்கள்.

சனி பகவான் தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனி பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். உங்கள் நிலை உயரும்; செயலில் வேகம் கூடும்; வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்துப் புது வீட்டில் குடிப்புகுவீர்கள். அனுபவ அறிவாலும் யதார்த்தமான பேச்சாலும் எல்லோரையும் கவர்வீர்கள். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் பிரச்னைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். மறைமுகப் போட்டிகளில் எதிரிகளை வெல்வீர்கள். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். உணவு, மருந்து, புரோக்கரேஜ் வகைகளில் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் விலகும். வெளிநாட்டுத் தொடர்புடன் அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். அரசின் கெடுபிடி தளரும்.

உத்தியோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும்

உத்தியோகத்தில் உங்களை வீழ்த்த முயன்றவர்கள் விரக்தி அடைவர்; அவர்களின் எதிர்ப்புகள் வலுவிழக்கும். உங்களது உழைப்பை மேலதிகாரி புரிந்துகொள்வார். சக ஊழியர்களிடையே உங்கள் மீதான அதிருப்தி நீங்கும்.

கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களது படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவியும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளப் பாக்கிக் கைக்கு வந்து சேரும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ புத்தாண்டு உங்களின் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், சகிப்புத்தன்மையையும் பண வரவையும் தருவதாக அமையும்.முருகன் அருளால் முன்னேற்றம் உண்டாகும்!

முருகன்
முருகன்

முருகன் அருளால் முன்னேற்றம் உண்டாகும்!

மீன ராசி அன்பர்களுக்கு முருக வழிபாடு உறுதுணையாகும்.
செவ்வாய்க் கிழமைகளில் திருப்புகழ் பாராயணம் செய்து முருகக் கடவுளை வழிபடவேண்டும்.

சஷ்டி திதி நாள்களில் விரதம் இருந்து, பஞ்சாமிர்தம் சமர்ப்பித்துக் கந்தக் கடவுளை வழிபடலாம். அதேபோல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சஷ்டிக் கவசம் படித்து வரவும்.

இயன்றால் சஷ்டி திருநாள்களில் திருச்செந்தூர் சென்று, கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி சரவணபவனை தரிசித்து வாருங்கள்; இயலாதவர்கள் அருகிலுள்ள முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். முருகன் அருளால் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்!