Published:Updated:

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - சிம்மம்

சிம்மம்
பிரீமியம் ஸ்டோரி
சிம்மம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - சிம்மம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

Published:Updated:
சிம்மம்
பிரீமியம் ஸ்டோரி
சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள், மற்றவர் மனம் கோணாதபடி பழகுவீர்கள். சுயக் கட்டுப்பாடு உடைய நீங்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள். உங்களுக்கு இந்தப் பிலவ வருடம் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், சகலத்திலும் உயர்வு உண்டு. அரைகுறையாக நின்ற பல வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து முடியும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். கையில் தங்காமல் பணம் செலவாகிக் கொண்டிருந்ததே, அந்த நிலை மாறும். சேமிக்கவும் தொடங்குவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தன்னம்பிக்கை மேலோங்கும். பிள்ளைகளிடம் அன்பு செலத்துவீர்கள். அவர்களால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்.

பையனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் தேடி வரும். உங்கள் மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல மாப்பிள்ளை வந்து சேருவார். சித்திரை, வைகாசி ஆவணி மாதங்களில் நினைத்தபடி திருமணத்தை முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் மன நிம்மதி உண்டு.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். சகோதரர் - சகோதரி களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்களை முழுமையாகப் புரிந்து கொள்வர். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சொந்த வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

சொந்தபந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குலதெய்வக் கோயிலில் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.21 வரை மற்றும் 13.11.21 முதல் வருடம் முடியும் வரையிலும், குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். மறைவாக இருந்த நீங்கள், பல விசேஷங்களில் முன்வரிசையில் காணப்படுவீர்கள்.

இதுவரையிலும் மனச்சோர்வு அளிக்கும் வகையில் பணத் தட்டுப்பாடு இருந்து வந்தது அல்லவா? இந்த வருடம் அந்த நிலை மாறும்; பணத் தட்டுப்பாடு குறையும். அரசுப் பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டட வேலைகளையும் முடிப்பீர்கள். 14.9.21 முதல் 12.11.21 வரை குரு 6 - ல் நின்று டென்ஷன், பணப் பற்றாக்குறை, விபத்து, குடும்பத்தில் பிரிவு என அலைக்கழிப்பார்.

சனி பகவான் தரும் பலன்கள்

சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திராத சூழலில் எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்; உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் இனி நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உங்களின் சொந்த ஊரில் மதிப்பு - மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகள், விழாக்களில் முன்னிலை வகிப்பீர்கள். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறும்.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.22 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை போன்றவை வந்து சேரும். தாயாரின் உடல்நிலை பாதிப்படையலாம். 21.3.22 முதல் 9-ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு, அவருடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும்.

வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள்

வியாபாரத்தில் புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, போட்டி களை முறியடிப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உணவு, மருந்து, மின்னணு வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளரின் வருகையை அதிகப்படுத்தக் கடையை விரிவுபடுத்துவீர்கள். நழுவிப் போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கூட்டுத் தொழிலில் இருந்துவந்த கூச்சல் - குழப்பங்கள் நீங்கும். பங்குதாரர்கள் இனி அரவணைத்துச் செல்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் கனவுகள் மெய்ப்படும்

உத்தியோகத்தில் தொல்லை கொடுத்து வந்த மூத்த அதிகாரி, இனி உங்களின் அறிவுத் திறனைக் கண்டு ஆச்சர்யப்படுவார். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். கணினித் துறையில் இருப்பவர்களுக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப் படுவார்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசு, பாராட்டி கௌரவிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களின் திறமைகளை வெளிப் படுத்த உகந்த சூழலையும், வசதி, வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

சிவ வழிபாடு நன்மை சேர்க்கும்!

சோமவாரம், பிரதோஷ காலங்கள், மாத சிவராத்திரி தினங்களில் கோளறு பதிகம் படித்து வீட்டிலேயே சிவ வழிபாடு செய்யலாம். அருகிலுள்ள ஆலயங்களில் உழவாரப் பணி நடந்தால், நீங்களும் பங்கேற்கலாம். சிவபுராணம் படிப்பதும் நன்மை சேர்க்கும்.

குறிப்பாக, ஒரு பிரதோஷ நாளில் கோயம்புத்தூர் மாவட்டம், கடத்தூருக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்தவை தடையின்றி நிறைவேறும்.

இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு சிவதரிசனம் செய்து வரலாம். அதனால் புது முயற்சிகள் வெற்றி பெறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism