திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

விருச்சிகம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

விருச்சிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
விருச்சிகம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்..

விருச்சிக ராசி நேயர்களே, விருப்பு - வெறுப்பு இல்லாமல் எல்லோருக்கும் உதவுவீர்கள். எதன்பொருட்டும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள் உண்டாகும்.

குடும்ப வருமானம் உயரும்; புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கொஞ்சம் முன்கோபம் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வெளியூர்ப் பயணம் ஆதாயம் தரும். ஆனி மாதம் சிறு சிறு விபத்துகள் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. செலவினங்களும் அதிகரிக்கும்.

பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வதைக் கண்டு மன நிம்மதி அடைவீர்கள். பெண்ணுக்குச் சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் கூடி வரும். சகோதர - சகோதரிகள் உதவுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை நிதானமாகக் கையாளுவீர்கள். வழக்குகளில் வெற்றி உண்டு. இசை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வயிற்று வலி, நெஞ்சு வலி நீங்கும். முகப் பொலிவு கூடும். குழந்தையில்லாத தம்பதிக்கு ஆவணி மாதத்தில் குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

கார்த்திகை, மாசி மாதங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் மதிப்பு - மரியாதை கூடும். புது வீடு, வாகன வசதி ஆகியவை உண்டாகும். மனத்திலிருக்கும் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுகுச் சென்று வருவீர்கள். பழைய கோயில்களைப் புதுப்பிக்க முற்படுவீர்கள். பிரபலங்களது நட்பு கிடைக்கும். தக்க நேரத்தில் உதவுவார்கள். பழைய வீட்டை விற்றுவிட்டு, புது வீடு வாங்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். புதிய ஆடை - ஆபரணங்கள் சேரும். உங்களால் வளர்ந்த சிலர் உங்களை வந்து சந்திப்பதால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சில வேலைகளை உடனுக்குடன் முடிக்க புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

குரு பகவான் தரும் பலன்கள்:

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் ராசிக்கு 4 - ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்து போகும். தாய்வழி உறவினர்களின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழிச் சொத்துப் பிரச்னைகளைச் சுமூகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு பகவான் 3 - ம் வீட்டிற்குச் செல்வதால், காரியத் தடைகள் அதிகரிக்கும். சில காரியங்களை பலமுறை முயன்று முடிக்கவேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து போகும்.

ராகு - கேது தரும் பலன்கள்:

ஆண்டு தொடக்கம் முதல் 20.3.2022 வரை ராசிக்குள் கேது நிற்பதால் டென்ஷன், ரத்த அழுத்ததால் மயக்கம், மனோ பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும். கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வு ஏற்படும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை கேது ராசியை விட்டு விலகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் அடிமனத்தில் இருக்கும் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். ஊரே வியக்குபடி கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

சனி பகவான் தரும் பலன்கள் :

உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டில் சனிபகவான் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள்மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். புறநகர்ப் பகுதியில் நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள்.

வியாபாரம் சூடு பிடிக்கும்:

வியாபாரத்தில் தொழில் ஸ்தானங்களை நவீனப்படுத்துவீர்கள். சிலர், சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். புரோக்கரேஜ், ஏஜென்சி, உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுக மான நிலை காணப்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வாடிக்கையாளர்களை அதிகரிக்கப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்:

உத்தியோகத்தில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய பொறுப்புகள் வரும். மூத்த அதிகாரி, உங்களின் அசாத்திய திறமையைக் கண்டு அதிசயிப்பார். சக ஊழியர்களுடன் நட்பு உருவாகும். பதவி - சம்பள உயர்வை வருடத்தின் மத்தியப் பகுதியில் எதிர்பார்க்கலாம். கலைஞர்களின் புதிய சிந்தனைகள் பாராட்டப்படும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ ஆண்டு ஏமாற்றங்களிலிருந்து உங்களை விடுவித்து, காலத்துக்கு ஏற்பச் சில மாற்றங்களையும் ஏற்றங்களையும் தருவதாக அமையும்.

கணபதியைக் கைதொழுதால் காரியங்கள் கைகூடும்!

விருச்சிக ராசி அன்பர்கள், விக்னங்கள் நீங்கிட விநாயகரை வழிபட வேண்டும். அதன் மூலம் ராகு-கேது கிரகங்களால் நற்பலன்களைப் பெறலாம்.

அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு அனுதினமும் சென்று அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். சங்கடஹர சதுர்த்தி தினங்களில் மோதகம் சமர்ப்பித்து, குழந்தைகளுக்குப் பிரசாதமாய் விநியோகம் செய்யுங்கள். அதேபோல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள்.

இயன்றால் ஒரு சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையார் பட்டி பிள்ளையாரை தரிசித்து வழிபட்டு வாருங்கள். அந்த வேழமுகத்தானின் திருவருளால், இன்னல்கள் நீங்கும்; நவகிரகங்களும் நன்மை செய்யும்.