ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டில் என்ன நடக்கும்?

தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்

சோபகிருது புத்தாண்டு - சித்தர் இடைக்காடரின் வெண்பா பாடலும் பொதுப் பலன்களும்!

மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயனப் புண்ணிய காலம் வசந்த ருதுவில், பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில், 14.4.23 அன்று பிறக்கிறது.

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டில் என்ன நடக்கும்?

கிருஷ்ண பட்சத்து நவமி திதி, மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில்; மகர ராசி- சிம்ம லக்னத்திலும்... நவாசம்சத்திலும் ஸ்திர ராசியான சிம்ம லக்னத்தில் என வர்க்கோத்தம அமைப்பிலும், கன்யா நவாம்ச ராசியிலும், சாத்தியம் நாமயோகம் - தைதுலம் நாமகரணத்தில், சுக்கிரன் ஓரையிலும், நேத்திரம் 1 ஜுவன் 1/2 நிறைந்த நாளிலும், பஞ்ச பட்சிகளில் மயில் வலுவிழந்த நேரத்திலும், மந்தயோகத்திலும், சந்திர மகா தசையில் - ராகு புத்தி ராகு அந்தரத்திலும்... சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது வருடம், மதியம் 1:57 மணிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மதியம் 2.59 மணிக்கு) பிறக்கிறது.

சோபகிருது வருஷத்திய பலன் வெண்பா

சோபகிருது தன்னிற் றெல்லுல கெலாஞ் செழிக்கும்
கோபமகன்று குணம் பெருகும் சோபனங்கள்
உண்டாகு மாரியொழியா மற்பெய்யுமெல்லாம்
உண்டாகு மென் றேயுரை.

இடைக்காடர் சித்தர்பிரானின் இந்தப் பாடலின் படி பாரம்பர்ய மான - பழைமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடு, நகரங்கள் எல்லாம் செழிப்படையும், மக்கள் மனதில் கோபம் விலகி நற்குணங் கள் அதிகமாகும். காலம் தவறாது மழை பொழியும். எல்லா நலன்களும் பெற்று மக்கள் மகிழ்வர்.

சோபகிருது என்றாலே மங்கலம்தான். அதனால் வீடுதோறும் மகிழ்ச்சிகரமான சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். இந்த வருடத்தின் ராஜாவாகபுதன் வருகிறார். வருடப் பிறப்பு ஜாதகத்தில் புதன் சூரியனுடனும், ராகுவுடனும் சேர்ந்திருக்கிறார்கள். ஆகவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் நவீனமயமாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். அவரவர் தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

அதேநேரம், மாணவர்களின் இடைநிற்றலும் அவர்களுக்கு இடையே தேர்வு பயமும் அதிகரிக்கும். இளைய சமூகம் தவறானவர் களின் கைகளில் சிக்கிச் சிதையும் போக்கும் கொஞ்சம் உண்டு. ஆனால் நவாம்ச சக்கரத்தில் புதன் தசமகேந்திரம் பெற்றதால், மாணவர்களிடம் அறிவியல் சிந்தனை பெருகும். புதிய அறிவியல் அறிஞர்கள் வெளிப் படுவார்கள். பலரும் தாய்நாடு திரும்புவர். ஆள்பவர்களின் ராஜதந்திரம் அதிகமாகும்.

சுக்கிரன் மந்திரியாக வருவதால் ஆள்பவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்களின் ஆதிக்கம் அதிகமாகும். மலைப்பகுதியில் அதிகம் மழை பொழியும். விளைச்சல் பெருகும். வாகனம் விற்பனை அதிகமாகும். குடும்பப் பெண்மணிகள் சாதிப்பார்கள். பழைய வீடுகளின் விலையும் வாடகையும் உயரும். புது நகரங்களும், பேருந்து நிலையங்களும், விற்பனைக் கூடங்களும் உருவாகும்.

அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும், சேனாதிபதியாகவும் குரு வருவதால் பறவைகள் உளவு வேலைக்காகப் பயன்படுத்தப்படும். ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நோக்கி புதிய பறவைகள் வந்துசேரும். பறவைகளின் இனவிருத்தி அதிகமாகும். காற்றுடன் கூடிய கருமேகத்தால் கனமழை உண்டு. நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு மற்றும் வெள்ளத்தில் மூழ்குதல் போன்ற பாதிப்புகளால் இழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

சிம்ம லக்னத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. ஆகவே, விவசாயிகள் நெல் உள்ளிட்ட வழக்கமான பயிர்களைவிடவும் மாற்றுப் பயிர் களைப் பயிரிடுவது நல்லது.

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டில் என்ன நடக்கும்?

தான்யாதிபதியாக சனி வருவதாலும் 7-ல் ஆட்சி பெற்று இருப்பதா லும் மதுபானங்களின் விலை உயரும். தானியங்களில் சிலவற்றின் விலை உயரும். ராசாதிபதியாக புதன் வருவதால் நிலக்கரி, பெட்ரோல், தங்கப் படுகைகள் கண்டறியப்படும்.

வருடப்பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் 11-ல் நிற்பதால் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். ஆனால் பெரிய கட்டடங்களில் மின்கசிவின் காரணமாக தீ விபத்துகளும், மின்னல் தாக்குதலும் அதிகரிக்கும்.

9-ல் சூரியன், புதன், ராகு இருப்பதால் பழைய கோயில்கள் புதுப்பிக்கப்படும். புதைந்துபோன பெருநகரங்கள், ஆலயங்கள் கண்டறியப்படும்.

நான்காமிடத்தைக் குருபகவானும், சுக்கிரனும் பார்ப்பதால் பட்டு, ஜவுளி, தங்க நகைகள், மணல், சிமெண்ட் ஆகியவற்றின் விலை உயரும். விவசாயிகளின் நலன் காக்க, மத்திய அரசாங்கத்தால் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். மருத்துவத்தின் உதவியால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

சந்திரனும், குருவும் 12-ம் இடத்தைப் பார்ப்பதால் விடுமுறை நாள்களில் சுற்றுலா இடங்கள் நிரம்பி வழியும். மக்களிடம் கேளிக்கை மோகம் - எதையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.

சந்திரன் 6-ல் மறைந்திருப்பதால் மக்களுக்கு நீர்க்கட்டி, கொழுப்புக் கட்டி, சளித்தொல்லை, தொண்டைவலி அதிகமாகும். தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை உயரும்.

வருடப் பிறப்பின்போது, ராஜ கிரகங்கள் அனைத்தும் ஆட்சி பெற்று இருப்பதால் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வார்கள்.

சந்திரனுக்கு 2-ல் சனி நிற்பதால் புகழ் பெற்ற அரசியல் தலைவர் களுக்கு எதிர்ப்புகளும், விபத்துகளும் ஏற்படும். இனக் கலவரங்கள் தலைதூக்கும். எல்லையில் பதற்றம் அதிகரிக்கும். ராணுவம் மற்றும் காவல் துறை நவீனமாகும். ஏப்ரல் 23 முதல் அக்டோபர் வரை குருவும் ராகுவும் இணைந்திருப்பதால் மீண்டும் வைரஸ் தொற்று நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.