Published:Updated:

சூரிய கிரகணம் குறித்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன? - பயனுள்ள 10 தகவல்கள்!

சூரிய கிரகணம் ஏற்படும் காலத்தில் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றைப் பற்றி கிரகலாகவா, நிர்ணய சிந்து மற்றும் அதர்வ வேதம் உள்ளிட்ட பல நூல்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

இயற்கையின் அதிசயங்களில் ஒன்று கிரகணம். கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்கு முன்பு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்னும் இருவகை கிரகணங்கள் குறித்து நம் இதிகாச புராணங்களில் காணப்படும் தகவல்களைக் காணலாம்.

வேதத்தில் சுவர்பானு எனும் அசுரன் சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரியனின் கதிர்கள் வெளிவராத நிலையில் உலகத்தின் இயக்கமும், உயிரினங்களின் ஜீவிதமும் பாதிக்கக்கூடுமே என்று அஞ்சிய தேவர்கள், அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க வேண்டி அத்ரி முனிவரிடம் சென்று பிரார்த்தித்தனர். அத்ரி மகரிஷியும், ரிக்வேதத்தில் அமைந்திருக்கும் நான்கு மந்திரங்களைக் கூறி சூரியனை மறைத்திருந்த இருளை விலக்கினார். சூரிய கிரகணத்தின்போது சூரியனில் உண்டாகும் மாற்றங்களை விளக்குவதுபோல இந்த மந்திரங்கள் அமைந்துள்ளன.

`மற்ற மாவட்டங்களைவிட கரூரில் தெளிவாகத் தெரியும்!’-நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை எப்போது பார்க்கலாம்?
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

அத்ரி மகரிஷி நான்கு ரிக் மந்திரங்களை நான்கு நிலைகளில் கூறினார். முதல் மந்திரத்தைக் கூறியதும் சூரியனை மறைத்திருந்த இருள் விலகியது. சிவப்பு நிறத்தில் காட்சி அளித்த சூரியன் இரண்டாவது மந்திரத்தைக் கூறியதும் வெள்ளி நிறத்தில் பிரகாசித்தது. மூன்றாவது முறை மறுபடியும் சிவப்பு நிறத்துக்கு மாறிய சூரியன், நான்காவது மந்திரத்தைக் கூறியதும் இயல்பு நிறமான வெண்மை நிறத்துக்குத் திரும்பியதாக பஞ்சவிம்ச பிரமாணம் என்ற சாஸ்திர நூல் கூறுகிறது.

சூரிய கிரகணத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டம் இருபத்தி எட்டாவது சர்க்கத்தில், ராமபிரானுக்கும் கரனுக்கும் இடையே நடந்த யுத்தத்தைப் பற்றி விவரிக்கும்போது, ராமபிரானும் கரனும் தொடுத்த கணைகள் எல்லாம் ஆகாயத்தில் பரவி சூரியனை மறைத்து, சூரிய கிரகணம் ஏற்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

`டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம்'- திருப்பதி, சபரிமலை கோயில்களில் நடைசாத்தப்படும் நேர விவரம்!

பாகவத புராணத்தின் முப்பத்தி ஐந்தாவது அத்தியாயத்தில் சூரிய கிரகணத்துக்கும் சந்திர கிரகணத்துக்கும் ராகு எப்படி பொறுப்பாகிறார் என்பது பற்றி விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

திருப்பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமிர்தத்தை மோகினி வடிவில் இருந்த திருமால் தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படியாகப் பரிமாறினார். திருமாலின் சூழ்ச்சியை அறிந்த ராகு என்ற அசுரன், யாரும் அறியாதபடி தேவர்களின் வரிசையில் சென்று அமர்ந்துகொண்டான். அவனுக்கும் அமிர்தம் கிடைத்தது. ஆனால், அவன் அதை முழுவதுமாக அருந்துவதற்கு முன்பே அவனைப் பற்றித் தெரிந்துகொண்ட சூரியனும் சந்திரனும் மோகினி வடிவத்தில் இருந்த திருமாலிடம் காட்டிக் கொடுத்துவிட்டனர். திருமால் தம் சுதர்சனத்தால் ராகுவை தலை வேறாகவும் உடல் வேறாகவும் வெட்டி வீழ்த்தினார்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்
டிசம்பர் 26-ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்! - எங்கே, எப்போது பார்க்கலாம்...?

ஆனால், சிறிது அமிர்தத்தை அருந்திய காரணத்தால் ராகு உயிர் பிழைத்துக்கொண்டான். மனிதத் தலையுடன் காணப்பட்டான். தனக்கு இந்த நிலை ஏற்பட சூரியனும் சந்திரனும்தான் காரணம் என்பதால், அவர்களை விழுங்கினான். ஆனால், உடல் பகுதி இல்லாத காரணத்தினால் சூரியனும் சந்திரனும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ராகுவின் பிடியிலிருந்து விடுபட்டனர். பின்னர் ராகு கிரகபதவி பெற்று, ஜோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றார்.

கிரகணங்களைக் கணித்துள்ளதற்கான பல சான்றுகள் நம் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன. மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் கிரகணங்களைப் பற்றிய தமது ஞானத்தைத் திறமையாகப் பயன்படுத்தி, அர்ஜுனனைக் காப்பாற்றினார். தன் மகன் அபிமன்யுவின் இறப்புக்குக் காரணமான ஜயத்ரதனை மறுநாள் மாலைக்குள் கொல்வதாகவும், அப்படித் தன்னால் முடியவில்லை என்றால் அக்னி வளர்த்து பிராணத் தியாகம் செய்துவிடுவதாகவும் சபதம் செய்தான் அர்ஜுனன். ஆனால், மாலை நெருங்கியும் அர்ஜுனனால் ஜயத்ரதனைக் கண்டுபிடித்துக் கொல்ல முடியவில்லை. அப்போது கிருஷ்ணர், தம் சக்கராயுதத்தால் சூரியனை மறைத்து சூரிய கிரகணம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். அர்ஜுனன் அக்னி வளர்த்து அதில் பிரவேசிக்கத் தயாராக இருந்தபோது, ஜயத்ரதன் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தான். பின்னர் கிருஷ்ணரின் யோசனையின்படி செயல்பட்டு ஜயத்ரதனை வீழ்த்தினான்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

கிரகண காலத்தில் இந்துக்கள் கடைப்பிடிக்கவேண்டியவற்றைப் பற்றி கிரகலாகவா, நிர்ணய சிந்து மற்றும் அதர்வ வேதம் உள்ளிட்ட பல நூல்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

சாஸ்திரப்படி கிரகண காலத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

1. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு நான்கு யாமத்துக்கு, அதாவது 12 மணி நேரத்துக்கு முன்பும், சந்திர கிரகணத்துக்கு முன்பு மூன்று யாமத்துக்கு, அதாவது 9 மணி நேரத்துக்கு முன்பும் உணவு உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு அந்த விதியில்லை. முடியாதவர்கள் திரவ உணவுகளை உட்கொள்ளலாம். கிரகண காலத்துக்கு முன் சமைத்த உணவுகளை கிரகணத்துக்குப் பின் உண்ண வேண்டாம் என்கின்றன சாஸ்திரங்கள்.

2. நீர், வேகவைக்காத உணவுப் பொருள்களில் ஓரிரு தர்ப்பை புல்லைப் போட்டுவைக்க வேண்டும். இவை கிரகண தோஷம் ஏற்படாதவாறு தடுக்கும்.

3. கிரகண நேரத்தில் உறங்கக் கூடாது.

4. கிரகணத்தை நேரடியாகக் கண்ணால் காணக் கூடாது. இன்று அறிவியலாளர்களும் இதே கருத்தைச் சொல்கிறார்கள்.

5. கர்ப்ப ஸ்திரிகள் சூரியக் கிரணங்கள் மேனியில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6. கிரகணம் தொடங்கும்போதும் முடிந்த பின்னும் கட்டாயம் குளிக்க வேண்டும்.

7. கிரகண காலத்தில் தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுவர். பிறப்பு, இறப்புத் தீட்டு இருப்பவர்களும் கிரகணத்தின்போது தர்ப்பணங்கள் செய்யலாம்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

8. கிரகண நேரத்தில் இறைவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் காலத்தில் ஒரு முறை செய்யும் மந்திர ஜபம் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். எனவே, அமைதியாக அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தனிமையில் அமர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும்.

9. கிரகண நேரத்தில் தானம் அளிப்பது மிகவும் நன்மை பயக்கும். சூரிய கிரகணத்தின்போது கேதுவுக்குப் பிரியமான தானங்களை அளிப்பது விசேஷம். கோதுமை, கொள் அல்லது உளுந்து, தேங்காய், பழம் ஆகியவற்றைத் தானம் செய்வது நல்லது.

10. கிரகணம் எந்த நட்சத்திரக்காரர்களைப் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்வது அவசியம். நாளை நிகழும் சூரிய கிரகணம் யாருக்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜோதிடர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணனைக் கேட்டோம்.

``சூரிய கிரகணத்துக்கு மூலம், பூராடம், அசுவினி, மகம், கேட்டை ஆகிய ஐந்து நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். ராசிப்படி பார்த்தால், தனுசு, மேஷம், சிம்மம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ளலாம். இவர்களில் மூல நட்சத்திரத்துக்கு முன் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் இருப்பவர்கள் விருச்சிக ராசி என்பதால் அவர்களும் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

பரிகாரம் என்று பெரிதாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. சூரிய கிரகணத்தின் காலை வேளையில் வழக்கம்போல் குளித்துவிட்டு தங்களது இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு, இஷ்ட தெய்வத்தை உபாசனையைச் செய்துகொண்டிருந்தாலே போதுமானது. சூரிய கிரகணம் விட்டதும் மீண்டும் ஒருமுறை நீராடிவிட்டு உணவை எடுத்துக்கொள்ளலாம். அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, குருக்களுக்கு உரிக்காத மட்டைத் தேங்காய் ஒன்றைக் கொடுத்து உங்களின் நட்சத்திரம் மற்றும் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்துவிட்டு வந்தால் போதும். எளிய பரிகாரம், ஆனால் இது இவர்களுக்கு மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும். கிரகணத்தை எண்ணி பயப்படவும் தேவையில்லை” என்றார்.