Published:Updated:

சிம்ம ராசிக் காரர்களே... நீங்கள் இப்படித்தான்!

சிம்ம ராசியும் சூரியனும்
பிரீமியம் ஸ்டோரி
சிம்ம ராசியும் சூரியனும்

மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சிம்ம ராசிக் காரர்களே... நீங்கள் இப்படித்தான்!

மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
சிம்ம ராசியும் சூரியனும்
பிரீமியம் ஸ்டோரி
சிம்ம ராசியும் சூரியனும்

சிம்மராசியின் அதிபதி சூரியன். அவர் கிரக நாயகன்; ஆத்ம காரகன்; ஒளிப்பிழம்பு; உலகத்தின் ஒளிவிளக்கு. சந்திரன் உட்பட அத்தனை கிரகங்களுக்கும் ஒளியின் வழியாக உயிரூட்டுபவர். வறட்சிக்கும், மழைக்கும் அவரே காரணம். உலகின் இயக்கம் அவர் வசம். அவரது தோற்றத்தால், உயிரினங்கள் உணர்வு பெற்று எழுகின்றன; செயல்படுகின்றன. அவர் மறையும்போது அவை அத்தனையும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன.

சிம்ம ராசிக் காரர்களே... 
நீங்கள் இப்படித்தான்!

‘முத்தொழிலிலும் சூரியன் தென்படுவதால், பரம்பொருளின் மறுவடிவமாகத் திகழ்கிறார்’ என்று புராணம் கூறும் (விரிஞ்சி நாராயண சங்கராத்மனே).

சிம்மம் ஸ்திர ராசி. செடி-கொடிகளும், மரங்களும் நிறைந்த ஆரண்யக ராசி. இதன் வடிவம் சிங்கம். இது, விலங்கினத்தின் அரசன்; சூரியன் கிரகங்களின் அரசன். பிடரி மயிர் சூழ்ந்த பரந்த முகம், கம்பீர நடை சிங்கத்துக்கு உரியது. அது, குகையில் இளைப்பாறும். எழுந்ததும் குகைக்கு வெளியே வந்து சோம்பல் முறித்துப் பசியாற்ற, அதன் கண்கள் இரையைத் தேடும். தொலைவில் தென்படும் மான் கண்ணில் படும். சிங்கத்தின் கண்களைச் சந்தித்த மான் நகர முடியாமல் துவண்டுவிடும். எளிதாக உணவு எட்டிவிடும். உண்ட மிச்சத்தை விட்டுவிட்டுக் குகைக்கு திரும்பிவிடும். இது சிங்கத்தின் இயல்பு. அளவுக்கு அதிகமான ஆசை இல்லை. சேமிக்கும் எண்ணம் இல்லை. தேவைக்கு அதிகமானதைப் பிறருக்கு அளிப்பதிலும் தயக்கம் இல்லை. இவை அத்தனையும் சிம்ம ராசியில் பிறந்தவர்களிடம் தென்படலாம் என்கிறது ஜோதிடம்.

சுயமரியாதைக்கு முதலிடம். குள்ளநரி வேஷம் இருக்காது. பிறர் பாணியைப் பின்பற்றும் எண்ணம் உதயம் ஆகாது. சிறந்த உணவில் திருப்தி இருக்கும். தேவையில்லாமல் பிறரைச் சீண்டித் துன்புறுத்தும் எண்ணம் இருக்காது. திறந்த புத்தகமான சிறந்த வாழ்க்கை உண்டு. பதவி இவர்களைத் தேடி வர வேண்டும். சேவையில் தேவையைப் பூர்த்தி செய்யப் பிடிக்காது. பசியைத் தாங்கிக்கொள்ள இயலும். துயரம் துவளச் செய்யாது. பொறுமையும் வீரமும் கம்பீரமும் விலகாது.

சமுதாயத்தில் அந்தஸ்தும் அங்கீகாரமும் தேடிவரும். பதவி மெதப்பு பற்றாது. சூழலைப் புரிந்துகொண்டு நாகரிகமாகச் செயல்படும் பாங்கு உண்டு. ஆசையை நிறைவேற்ற தரம் தாழ்ந்த செயலில் இறங்கமாட்டார்கள். உயிர் பிரிய நேர்ந்தாலும் மானத்தைக் காப்பார். விலங்கினங்களில் முதல்வனான சிங்கம் போன்று, இந்த ராசிக்காரர்கள், மனிதரில் முதல்வனாகத் திகழ்வர் என்று விளக்கும் ஜோதிடம், சிம்மத்தின் இயல்புகள் அந்த ராசியில் பிறந்தவரிடமும் தென்பட வாய்ப்பு உண்டு எனச் சுட்டிக்காட்டும்.

சிம்ம ராசிக் காரர்களே... 
நீங்கள் இப்படித்தான்!
VSanandhakrishna

இவர்கள் எங்கும் எதிலும் தன்னை முன்னவராகவும் சிறந்தவராகவும் காட்டிக்கொள்ள முற்படுவர். அதேநேரம், இவர்கள் வலுவிழக்கும் வேளையில், சமுதாயம் தனிமைப்படுத்தும்; செல்வாக்கு செல்லாக் காசாகும். அன்றாட வாழ்க்கையே போராட்டத்தில் தத்தளிக்கும். தெரியாத விஷயங்களில் தெளிவு பெற்றவராகக் காட்டிக்கொண்டு வயிற்றுப்பிழைப்பை நிலைக்க வைப்பதில் பகீரத பிரயத்தனம் செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவர்.

அதிலிருந்து விடுபட ஈடுபடும் முயற்சிகள் வலுவாக இருந்தாலும், பலனளிக்காதவாறு மாறிவிடும். சமுதாய அங்கீகாரமும் ஏட்டுச் சுரைக்காயாக மாறிவிடும். இப்படியும் இந்த ராசிக்காரர்களில் அனுபவம் இருக்கும். குருவும் செவ்வாயும் வலுவிழந்தால், இதுபோன்ற விபரீத விளைவுகளைச் சந்திக்கவைக்கும் என்கிறது ஜோதிடம்.

ராசிபுருஷனின் 5-வது இடம் சிம்மம். அதன் ஐந்து தனுசு (அதாவது, ராசி புருஷனின் 9-வது இடம் தனுசு); குருவின் ஆதிக்கம். குருவும் சிஷ்யனும் த்ரிகோண ராசியில் இணைந்திருப்பதால், சூரியனுக்குப் பெருமை சேர்ந்துவிட்டது.

ராசிநாதனுக்கு மேஷத்தில் உச்சம் பெறும் தகுதி உண்டு. அது ஐந்தின் ஐந்து. அது பூர்வபுண்ய பாக்கியத்தின் அளவை சுட்டிக்காட்டும். உச்சம் பெற்ற மேஷ ராசி, குருவின் த்ரிகோண ராசியாக இருப்பது. ஆக, குருவின் அருள் குறையாமல் கிட்டிவிடும். பொருளாதாரம், ஆரோக்கியம் வாழ்வில் தன்னிறைவை எட்ட இயலும்.

4-வது கேந்திரத்துக்கும், 9-வது த்ரிகோணத்துக்கும் அதிபதியான செவ்வாய் யோககாரகனாக மாறி, தருணம் வரும் வேளையில் நன்மைகளை உணரவைத்து மகிழ்விப்பார். எந்த கிரகத்துக்கும் இங்கு உச்சமோ நீசமோ இருக்காது.

கிரக நாயகன் சுதந்திரமாக இருப்பதும் சிறப்பு. ஆத்மகாரகன் பாக்கியத்தில் உச்சம் பெறுவதால், தன்னம்பிக்கையை வலுப்படுத்தி செயல்பாட்டில் சுணக்கம் இல்லாமல் வீறுநடை போட்டு வெற்றிபெறச் செய்வார். யோககாரகனான செவ்வாயும் (ரஜோ குணம்) சுறுசுறுப்பு, உற்சாகம் ஆகியவற்றை இணைத்துப் பரிமளிக்கச் செய்யும்.

சிம்ம ராசிக் காரர்களே... 
நீங்கள் இப்படித்தான்!
nilanewsom

பூர்வபுண்ய ஸ்தானாதிபதி குருவருளும் முழுமையாக இருக்கும் போது, வாழ்விலும் சமுதாயத்திலும் பெயர்பெற்று விளங்கவைக்கும். போதுமான அளவு வாழ்வைச் சுவைக்க இயலாமல் போனாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து சிரஞ்ஜீவியாகத் திகழ வாய்ப்பு உண்டு.

இந்த ராசி மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் 9 நவாம்சகங்களில் பரவியிருக்கும். முதல் நான்கு நவாம்சகங்களில் கேதுவும், அடுத்த நான்கு நவாம்சகங்களில் சுக்கிரனும், கடைசி நவாம்சகத்தில் சூரியனும் தனது தசாகாலங்களை நடைமுறைப்படுத்துவர். இந்த மூவரும் இளமையின் மையப் பகுதி வரையிலும் ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்கு ஒத்துழைப்பவர்கள்.

3-க்கும், 10-க்கும் உடைய சுக்கிரன் பாராமுகமாக மாறுவதால், சிறுவயதில் பாலாரிஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். சுக்ர தசை- சுக்ர புக்தி முடிந்தவுடன் செழிப்பான, வளமான வளர்ச்சியை அளிப்பார். சூரியன் இளமையில் பெருமையையும், பலத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து சொந்தக்காலில் நிற்கும் தகுதியையும் அளிப்பார். அதன் செழிப்பு முதுமையைப் பயனுள்ளதாக்கிவிடும். பலம் குன்றிய சுக்கிரனும் சூரியனும் இன்னல்களில் சிக்கித் தவித்து வெளிவரச் செய்து, உயர்வை எட்டவைப்பார்கள்.

‘ஸும் ஸுர்யாய நம:’ என்று சூரியனை வணங்க வேண்டும். 5-க்கு உடைய குருவும், பூர்வ புண்யத்தை வரையறுப்பதால் வணக்கத்துக்கு உரியவர். அதுபோன்று யோக காரகனான செவ்வாயும் வாழ்க்கை வளத்தை பெருக்குவதால் வழிபட வேண்டியவர் ஆகிறார். ‘கும் குரவே நம; கும் குஜாய நம:’ என்று பணிவிடையில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

செயல்பட உற்சாகம் வேண்டும்; செயலில் ஈடுபாடு இருக்க வேண்டும்; தன்னம்பிக்கையும் வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம். இவற்றை இந்த மூவரும் முழுமையாக அளிப்பவர்கள்.

இகலோக சுகத்தையும், ஆன்மிக ஆனந்தத்தையும் ஈட்டித் தருவதில் இந்த மூவரின் பங்கு வேண்டும். உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கிரகங்களின் வழிபாடு, இன்ப மயமான வாழ்க்கையை உறுதி செய்யும்!

சாதகக் கரணங்கள்!

ஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகளில் முதல் இரண்டு: நாளும், திதியும். அடுத்ததாக வருவது கரணம். ஒரு திதியை இரண்டாகப் பிரித்து வரும் நாழிகைகளை, அந்தத் திதிக்கு உரிய இரண்டு கரணங்களாகக் குறிப்பிடுவர். மொத்தமுள்ள 30 திதிகளும் 60 கரணங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

இந்த 60 கரணங்களுக்கும்... சுழற்சி முறையில் ஏழு; சிறப்பான முறையில் நான்கு என்றவாறு 11 பெயர்கள் சூட்டப் பட்டிருகின்றன. அவை: பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை, வனசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம்.

திதி-கரணம் ஆகியவை அறிவியல்ரீதியாக வான சாஸ்திர முறைப்படி கணக்கிடப்படுவது. சூரியனை (365 1/4 நாட்களில்) சுற்றிவரும் பூமியானது, ஒவ்வொரு நாளும் எத்தனை டிகிரி கடந்துள்ளது என்பதையும், சந்திரன் பூமிக்கு எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்பதையும் வைத்துக் கணக்கிடப்படும்.

திதிகளின் பகுதியாக அமைவது கரணம். அந்தந்த திதிக்கு உரிய சாதகமான மற்றும் பாதகமான நேரங்களைப் பகுத்தறிய கரணம் பயன்படுகிறது. பவம் முதல் பத்திரை வரையிலான கரணங்கள் சாதகமான நேரத்தையும், சகுனி முதல் கிமிஸ்துக்கினம் வரையிலான நான்கு கரணங்கள் பாதகமான நேரத்தையும் குறிக்கும். பஞ்சாங்கத்தில் கரணம் என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளுக்குரிய கரணங்கள், நாழிகை- விநாடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.


- எஸ்.நாராயணன், சென்னை-17