ஈசன் சிவலோக தியாகேசராக எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் அன்று கூட்டம் கூடியது. காரணம் அங்கு திருஅடியார் கூட்டம் எழுந்தருளியிருந்ததும் அன்று திருஞான சம்பந்தப் பெருமானுக்குத் திருக்கல்யாணம் நடைபெறுவதாய் நிச்சயித்திருந்ததும்தான். சீர்காழிக்கரையில் சின்னஞ்சிறு பாலகனாய் உமையம்மை வாரியணைத்துப் பாலூட்டிய நாளிலிருந்து அன்றுவரை ஞானசம்பந்தர் இறைச் சம்பந்தம் தவிர வேறு ஒன்றை நினைக்கவேயில்லை. நாடெல்லாம் நடந்து தரிசனம் செய்தார். தலங்கள் தோறும் பதிகங்கள் பாடினார். அவர் பாடிய பதிகங்களால் நோய்கள் தீர்ந்தன.. எலும்பும் சாம்பலுமான பெண் உயிர்பெற்றாள். திருமறைக்காட்டின் திருக்கோயில் கதவுகள் மூடவும் மீண்டும் திறக்கவும் செய்தன. நாள்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லன ஆகின. அப்படிப்பட்ட அருளாளருக்கு அவரின் தந்தை மணம் முடித்திட விரும்பினார். நமச்சிவாய நாமத்தை நாள்தோறும் சொல்லிவந்த பூரணாம்பிகை என்னும் பெண்ணைப் பேசி முடித்தனர். திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.

திருமண வேள்வி செய்ய வேதியர் வேண்டுமே... திருநீலநக்கர் என்னும் அடியவர் முன்வந்தார். சிவனடியார் சேவையும் சிவ பூஜையையுமே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர் நீலநக்கர். ஒருநாள் ஆலயம் ஒன்றில் சிவபூஜை செய்யும்போது சிவ லிங்கத்தின் மீது சிலந்தி ஒன்று விழுந்துவிட இதைக் கண்டு பதறி அவரின் மனைவி உடனடியாக அந்தச் சிலந்தியை ஊதித் தள்ளினார். அப்போது சிறிது எச்சில் லிங்கத்தின் மீது பட அதை சிவ அபராதம் என்று நினைத்தார் நீலநக்கர். மனைவியைக் கடிந்துகொண்டு அங்கேயே விட்டுப் பிரிந்து வீடுவந்து சேர்ந்தார். இரவு கனவில் சிவனார் தோன்றினர். நீலநக்கரிடம் தன் திருமேனியைக் காட்டினார். நீல நக்கர் பதறிப்போனார். சிவனின் உடலெங்கும் சிலந்தி தீண்டியதால் உண்டான கொப்புளங்கள். ஓரிடத்தில் மட்டும் அவ்வாறு இல்லாமல் பொன்னிற மேனி பிரதிபலித்தது. சிவனார், ‘அதுதான் உம் இல்லாள் அன்போடு ஊதித் தள்ளியபோது எச்சில் பட்ட இடம்’ என்று சொன்னார். நீல நக்கருக்குத் தன் பிழை புரியவும் கனவு கலையவும் சரியாக இருந்தது. ஓடிச் சென்று மனைவியிடம் மன்னிப்புக்கோரினார். சிவ பூஜையில் அன்புதான் பிரதானம் என்பதை உணர்ந்துகொண்டதாகச் சொன்னார்.
திருஞான சம்பந்தர், நீலகண்ட யாழ்ப்பாணரோடு திருநல்லூர் வந்தார். நீல கண்ட யாழ்ப்பாணரோ வீணை இசைப்பதில் வல்லவர். ஆலயங்கள் தோறும் சென்று வாசலில் நின்று சிவனைப் போற்றிப்பாடுபவர். உள்ளே செல்ல அவருக்கு விருப்பம்தான் சிவனுக்கும் விருப்பம்தான். ஆனால் அவர் பிறந்த பாணர் குலம் பிரச்னையாக இருந்தது. ஆனால் தன் சந்நிதியில் எல்லோரும் சமம் என்பதை உணர்த்த விரும்பினார் சிவன். மன்னரின் கனவிலும் சிவாச்சார்யர்கள் கனவிலும் தோன்றி யாழ்ப்பாணரை ஆலயத்தின் உள்ளே அழைத்துவந்து மனைப்பலகையிட்டு அமரவைத்துப் பாடச் சொல்லுமாறு கட்டளையிட்டார். மறுநாள் யாழ்ப்பாணர் மதுரையம்பதி சொக்கநாதர் ஆலய வாசலுக்குச் சென்றபோது அனைவரும் சிவனின் கட்டளையைச் சொல்லி அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னாளில் திருஞான சம்பந்தரை தரிசனம் செய்தபின்னால் நீலகண்ட யாழ்ப்பாணரும் அவரோடு பிரயாணம் செய்தார். திருநல்லூர் வந்தபோது நீலநக்கர் தம் இல்லத்தில் தங்குமாறு ஞானசம்பந்தரை வேண்டிக்கொண்டார்.

ஞானசம்பந்தர் தன்னுடன் வந்திருந்த நீலகண்ட யாழ்ப்பாணரும் தம்மோடு தங்க வேண்டும் என்று கேட்டார். இது ஒருவகையில் நீலநக்கருக்கு வைக்கப்பட்ட சோதனை. அன்பே சிவம் என்று அறிந்துகொண்டாரா அல்லது இன்னும் அவருள் சாதிய அழுக்குகள் மறைந்துகிடக்கிறதா என்பதை அறிய விரும்பிய சோதனை. நீலநக்கரோ ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. நீலகண்டரை வரவேற்றுத் தன் வீட்டில் வேள்விக்குண்டம் பக்கத்திலேயே தங்கும்படி வேண்டினார். கனிந்த அவர் மனம் கண்டு சம்பந்தர் மட்டும் மனம் குளிரவில்லை, ஈசனும் வேள்விகுண்டத்தில் நெருப்பாகத் தோன்றி வலமாகச் சுழன்று தன் ஆசிகளைக் கூறினார்.
திருமணம் என்றால் மாலைகள் வேண்டாமா... சிவனுக்கு வேதங்களால் பாமாலைகள் சூட்டுபவர்கள் நடுவே பூமாலை சூட்ட விரும்பித் தன்னை அதற்காக அர்ப்பணித்துக்கொண்டவர் முருக நாயனார். அதிகாலையில் எழுந்து நீராடி வண்டுகளின் எச்சில் படாத கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய மலர்களை சிவநாமம் சொன்னபடியே கொய்து சிவனுக்குரிய ஆறுகால பூஜைகளுக்கும் கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் என்னும் ஆறுவிதமான மலர் அலங்காரங்கள் செய்து தருபவர். ஒவ்வொரு நாளும் அவரின் மலர் அலங்காரத்தை அந்த மலையரசனே ரசித்தான். அந்த முருக நாயனார் திருஞான சம்பந்தரை தரிசித்து அவருக்குத் திருமணம் என்றதும் தன் திருக்கரத்தால் மாலைகள் கட்டுவதாகச் சொல்லி கண்கவர் மாலைகளைக் கட்டுவார்.

இப்படி அடியவர்கள் ஒருங்கே கூட அவர்களை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கூடினர். திருக்கல்யாணம் நடந்தது. பெற்றவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார் சம்பந்தர். திருமணச் சடங்குகளில் மனைவியின் திருவடி பற்றும் சடங்கு வந்தது. அந்த ஈசனின் திருவடியைப் பற்றிவிட்டேன் இனி எப்படி மனைவியின் கால்களைப் பற்றுவேன் என்று சொல்லி ஞான சம்பந்தர் பூரணாம்பிகையைப் பார்த்தார். அவளோ இறைவனின் திருநாமத்தை உச்சரித்தபடியிருந்தார். அவள் பூரணமாக இறைச்சிந்தையில் மூழ்கிய ஆன்மா என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவளுக்குத் திருமணப் பரிசாக ஈசனின் திருவடி நிழலையே பரிசாகத் தரவிரும்பினார். இனி நாள்களைக் கடத்துவது வீண் என்று தீர்மானித்து, திருப்பதிகம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
தொடர்ந்து 10 பாடல்கள் பாட அங்கு கூடியிருந்த அனைவரும் சிவானந்தத்தில் திளைத்தனர். பாலகனாய் இருக்கும்போதே அவரின் குரல்கேட்டு ஓடிவந்தவள் உமையம்மை. பால் கொடுத்துப் பாட வைத்த அன்னை இப்போது பால் வெண்ணீறு தந்து அதை முடித்துவைக்க சித்தம்கொண்டாள். அன்னை அங்கு பிரசன்னமாகி அனைவருக்கும் திருநீறு வழங்கினார். திருநீற்றைப் பூசிக்கொண்டாலே தீவினைகள் அழியும். அதுவும் அன்னையே வழங்கினாள் என்றால் அதன் பாக்கியம் எப்பேர்ப்பட்டது... சிவன் அங்கு ஜோதிரூபமாகத் தோன்றினார். அதைக் கண்டதும் அடியவர்கள் சிலிர்த்தனர்.

ஞானசம்பந்தர் அதை வணங்கி பூரணாம்பிகையின் கரம்பிடித்து முதலாவதாக ஜோதிக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து நீலநக்கர், நீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் மற்றும் அடியார்கள் பலரும் அந்த ஜோதியுள் புகுந்தனர். பக்குவப்பட்ட ஆன்மாக்கள் உட்புகுந்துகொண்டதும் ஜோதி மறைந்தது. மக்கள் அதைக் கண்டு சிவநாமம் சொல்லித் துதித்தனர்.
அப்படிப்பட்ட மகிமை நிறைந்த பெருமணம் நிகழ்ந்த தினம் வைகாசி மூலம். இந்த நாளில் ஆச்சாள்புரத்தில் ஞானசம்பந்தர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் நாமும் நமச்சிவாய திருப்பதிகம் பாடி சிவபெருமானை வணங்க நம் தீவினைகளும் துன்பங்களும் நீங்கி இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் கிடைக்கும்.