Published:Updated:

அதிர்ஷ்ட தேவி வழிபாடு

அதிர்ஷ்ட தேவி வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
அதிர்ஷ்ட தேவி வழிபாடு

கே.குமாரசிவாச்சார்யார்

அதிர்ஷ்ட தேவி வழிபாடு

கே.குமாரசிவாச்சார்யார்

Published:Updated:
அதிர்ஷ்ட தேவி வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
அதிர்ஷ்ட தேவி வழிபாடு

யோகம், ராசி, ஐஸ்வர்யம், சௌபாக்கியம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே, நம் மனத்தில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி உருவாகிறது. சில தருணங்களில் இப்படியான மகிழ்ச்சி தடைபடவும் வாய்ப்பு உண்டு. அப்போது சிலர், ‘அது இஷ்டத்துக்கு வர்றதுதான்யா அதிர்ஷ்டம்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்!

ஆன்மிகப் பெரியவர்களோ, `தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும் அன்பர்களின் வாழ்வில் அதிர்ஷ்ட தேவி நீக்கமற நிறைந்திருப்பாள்’ என்பார்கள். தெய்வ வழிபாடுகள், நம் இல்லங்களில் தெய்வ அனுக்கிரகம் எப்போதும் நிறைந்திருக்க வழிசெய்யும். அவ்வகை வழிபாடுகளில் ஒன்று அதிர்ஷ்ட தேவி ஆராதனை.

அதிர்ஷ்ட தேவி வழிபாடு

திருமந்திரம் தந்த திருமூலர், ‘நம் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திட, அன்னை நவாக்கரி தேவி எங்கும் நீக்கமற நிறைந்து, பரவெளியில் யோக சக்தியாக வலம் வருகிறாள்’ என்கிறார்.

சீனர்களும், மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் சில பிரிவினரும் அதிர்ஷ்ட தேவதையை பக்தியோடு வழிபடுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீடுகளில் பஞ்ச பூதங்களையும் ஒவ்வோர் இடத்தில் நிறுத்தி, பென்சுயி அல்லது வாஸ்து முறையில் அதிர்ஷ்ட சக்தியை நிலைநிறுத்த முடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

இந்தியாவில் சில பிரிவினர், அக்னி பூஜை செய்வதால் அதிர்ஷ்டதேவியின் அருளைப் பெறலாம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். வட மாநிலங்களில் ‘லக்கி மா’ என்ற பெயரில் அதிர்ஷ்ட தேவியை வழிபடுகிறார்கள்.

நாமும் அதிர்ஷ்டதேவி வழிபாட்டை அறிந்துக் கொள்வோம். முன்னதாக... நம் வீடு எப்போதும் மங்கலகரமாக விளங்கவும், வீட்டில் லட்சுமிதேவி நிரந்தரமாக வசிக்கவும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன என்பதை அறிவோம்.

அனுதினமும் அதிகாலையில் எழுந்திருக்கப் பழக வேண்டும். மனிதர்களின் மனம் சஞ்சலமின்றி இருக்கும் நேரம் அது. காலைக் கடன் முடித்து, குளிர்ந்த நீரில் நீராடி, வாசலில் வீட்டில் தீபமேற்றிவைத்து இறைவனைத் தொழ வேண்டும். அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும்.

அதேபோல், நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்படி நம் வீடு மங்கலகரமாகத் திகழும் போது... பிரம்ம முகூர்த்தவேளையில் வீதி வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டுக்குள் பிரவேசிப்பாள்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத் துடன் வரவேற்று, இயன்ற அளவு அவர்களை உபசரித்து, உணவிட்டு, வழியனுப்ப வேண்டும்.

வீட்டில் வீண் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். அசுப வார்த்தைகளால் எவரையும் திட்டாமல் இருக்கப் பழக வேண்டும்.

அமைதியுடன் மிகச் சாந்தமாக வழிபாட்டைத் தொடர்ந்தால், அதிர்ஷ்ட தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேவி வழிபாடு
அதிர்ஷ்ட தேவி வழிபாடு

இனி, நம்முடைய ஞானநூல்கள் விவரிக்கும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு குறித்து அறிவோம்.

எந்த நாள்களில் வழிபடலாம்?

பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாள்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

முன்னேற்பாடுகள் என்னென்ன?

பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங் கரித்து, ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தனம் குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்த வேண்டும். நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

எப்படி வழிபடுவது?

முதலில், விநாயகர் துதி. அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூற வேண்டும். அன்றைய திதி, நாள் நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, அதிர்ஷ்ட தேவியின் (`பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்...’ எனத் தொடங்கும்) தியான ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட வேண்டும்.

தியான ஸ்லோகத்தின் கருத்து

`தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்தவள், செந்தாமரையின்மீது அமர்ந்தவள், வலக்கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியபடி தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.

தாமரைக்குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக் கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருள்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.’

அதிர்ஷ்ட தேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.

அடுத்து, காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து, அதிர்ஷ்ட தேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனைசெய்ய வேண்டும்.

26 திருநாமங்கள்

தாராயை, வித்யாயை, முநின்யை, சரத்தாயை, ஜராயை, மேதாயை, ஸ்வதாயை, ஸ்வஸ்தியை, வர்மின்யை, பாலின்யை, ஜ்வாலின்யை, க்ருஷ்ணாயை, ஸ்மிருத்யை, காமாயை, உன்மத்யை, ப்ரஜாயை, சிந்தாயை, க்ரியாயை, க்ஷந்த்யை, சாந்த்யை, தாந்த்யை, தயாயை, ஸ்வஸ்திதாயை, தூத்யை, கத்யாயை, அதிர்ஷ்ட கலாயை...

ஒவ்வொரு திருநாமத்தின் முன்பு `ஓம் ஸ்ரீம்’ என்றும், திருநாமத்தின் முடிவில் `நம:’ என்றும் சேர்த்துச் சொல்லி வழிபட வேண்டும் (உதாரணத்துக்கு... ‘ஓம் ஸ்ரீம் தாராயை நம:’).

நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து, ‘ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே கமல ஹஸ்தாய தீமஹி தந்தோ அதிர்ஷ்ட தேவி ப்ரசோதயாத்:’ என்ற அதிர்ஷ்ட தேவி காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி, ஆரத்தி செய்ய வேண்டும். பின்னர், அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து, ‘ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’ என்று 108 முறை ஜபம் செய்வது விசேஷம்!

அதிர்ஷ்ட தேவியை வழிபடுவதுடன் நம்முடைய அன்றாட பணிகளையும் தலையாய கடமைகளையும் செவ்வனே செய்துவர வேண்டும்.

நம்முடைய முயற்சிகளும் உழைப்பும் தங்கு தடையின்றி தொடர்ந்தல், தேவியின் திருவருளும் துணைசேர்ந்து நமக்கு வெற்றியை அள்ளித் தரும்.

(12.11.13 இதழிலிருந்து...)

யாருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம்?

ந்தி வாக்கியம் என்ற ஞான நூலின் செய்யுள், `சுக்கிரன் விருச்சிகத்தில் நின்று சுபர்களின் பார்வை பெற்றால், அரச போகமும் அதிர்ஷ்ட வாழ்வும் உறுதி’ என்கிறது (படை சத்துரு ஜெயிப்பான் சுக்கிரன் பற்றியே நிற்பாராகில் குடை யோகங் களத்திரத்தால் கூடிய செல்வ முண்டாம்).

அதிர்ஷ்டத்தைத் தரும் ஸ்தானங்கள் என ஜாதகத்தில் 1, 5, 9 ஆகிய இடங்களைக் குறுப்பிடுவர். ஒரு மனிதனின் சொத்தையும், அதிர்ஷ்ட வாழ்வு நிலையையும் கூறும் பாவங்களாக இவை உள்ளன.

உப ஜய ஸ்தானங்களாகிய 3, 6, 11 ஆகிய இடங்களுக்குக்கு உடையவர்கள் பாவர்களாக இருந்தால், உழைப்பின் மூலம் யோகம் கிடைக்கும். உபஜய ஸ்தானாதிபதிகள், தங்களின் இடத்திலேயே இருந்தால் வசுமதி யோகத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

சூரியன், சந்திரனுக்குக் கேந்திரங்களில் சுப கிரகங்கள் வாய்த்தால், அரசாளும் அளவுக்கு அதிர்ஷ்டம் உண்டாகக்கூடும்.

சந்திரன், குரு, சுக்கிரன், புதன் ஆகியோரில் ஒருவர் திரிகோணத்தில் அமைந்து ஆட்சி அல்லது உச்சம் பெறுவ தாலும், 10-ம் அதிபதி உச்சம் பெறுவதாலும் அதிர்ஷ்ட யோகம் உருவாகும்.

லக்னாதிபதி இருந்த வீட்டுக்கு உடையவர்கள் உச்சம் பெறுவதும், லக்னாதிபதி 9-ல் நல்ல அமைப்பில் இருப்பதும், 2, 9, 11-க்கு உரியவர்கள் ஒன்றுகூடுவதும் அதிர்ஷ்ட வாழ்க்கைக்கான அடிப்படையாக அமையும்.

ராஜயோகம் தரும் கிரகங்களாகிய குரு, சூரியன், செவ்வாய், சனி இவர்களில் யாரேனும் இருவர் பலம் பெற்றால், இவர்களின் தசை காலங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

சுபர்கள் திரிகோணத்திலும், பாவர்கள் கேந்திரத்திலும் அமர்வது யோகமாகும். யோகம் தரும் ராஜ கிரகங்கள் ஆட்சி, உச்சம், ஷட்பலம், அஷ்டவர்க்கம் இவற்றில் எந்த வகையிலாவது பலம் பெற்றால், ஜாதகர் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.

லக்னாதிபதி, பூர்வபுண்ணிய அதிபதி, பாக்ய ஸ்தானாதிபதி ஆகியோர் சுபமாக அமர்ந்தாலும், சூரியன் சந்திரன் கேந்திர கோணங்களில் நன்றாக அமர்ந்தாலும், அந்த ஜாதகருக்கு அதிர்ஷ்ட தேவியின் அருள் வாய்க்கும்.

ஜாகதகத்தில் அதிர்ஷ்ட யோகம் தரும் கிரகநிலை அமையாத நிலையில் அல்லது உரிய கிரக அமைப்புகள் பலம் குறைந்து திகழும் நிலையில் இஷ்ட தெய்வத்தையும் அதிர்ஷ்ட தேவியையும் வழிபட்டு வரம் பெறலாம்.