பிரமாண்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் பிண்டாண்டத்திலும் (உடலிலும்) பிரதிபலிக்கும். அவற்றை எடுத்துக்காட்டி விளக்குவதற்காக ராசிச் சக்கரத்தை அமைத்திருக்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.


ஒலிக்கும் ஒளிக்கும் ஆதாரமாக இருப்பது ஆகாசம். விண்வெளி தென்படும் அத்தனை பொருட்களிலும் ஆகாசம் இணைந்திருக்கும். ஒளியும் காற்றும் லேசான பூதங்கள்; பூமியின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்படாது. கிரகங்களோ, விண்வெளியில் ‘ப்ரவஹம்’ என்ற காற்றினால் சுழன்றுகொண்டே இருக்கின்றன என்கிறது ஜோதிடம். மூன்று ஆரங்கள் இணைந்த சக்கர வடிவில் சுழன்று கொண்டிருக்கின்றன என்கிறது வேதம்.
அந்தச் சக்கரமானது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவையே காலத்தின் அளவான - வருடத்தின் 12 பகுதிகளான மாதங்கள் என்று சொல்லலாம். அந்தப் பகுதிகள் ஒவ்வொன்றும் 30-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையே 30 நாள்கள். ஆக, இந்தச் சக்கரத்தைக் காலச் சக்கரம் எனச் சொல்லலாம் என்கிறது வேதம். (த்ரீணிச சதானி ஷஷ்டிச அஷராணி தாவதீ; ஸம்வதஸரஸ்யராத்ரய:...).
அண்டவெளியில் காலச் சக்கரத்துடன் இணைந்து இருப்பவை நட்சத்திரங்களும் கிரகங்களும். இந்தக் கிரகங்கள் சுழலும் ஒரு பாதையாக, நட்சத்திரங்கள் ராசியுடன் இணைந்திருக்கும். இந்தச் சுழற்சியால் உலகில் நிகழும் அதிசயங்கள், நமது சிந்தனைக்கு எட்டாதவை. சக்கரங்களின் சுழற்சி, உலகவியல் மாறுதல்களுடன் நில்லாமல், தனி மனிதனின் சிந்தனையையும் பாதிக்கிறது என்று கணித்தனர் தவசீலர்களான முனிவர்கள் பலர். அவர்களின் இந்தக் கணிப்பே படிப்படியாக விரிவடைந்து, பலன் சொல்லும் ஜோதிடமாக உருப்பெற்றது. பிற்காலத்தில் வந்த ஜோதிட வல்லுநர்கள் மேலும் விரிவுப்படுத்தி விளக்கினார்கள்.

ராசிச் சக்கரம்!
ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருப்பெற்றது உலகம். நம் உடம்பும் ஐம்பூதங்களால் உருப்பெற்றது என்கிறது ஆயுர்வேதம். ஆக, நம் உடலிலும் ஆகாயத்தின் பங்குண்டு என்கிறது உபநிடதம். ஆக, பிரமாண்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் பிண்டாண்டத்திலும் (உடலிலும்) பிரதிபலிக்கும். அவற்றை எடுத்துக்காட்டி விளக்குவதற்காக ராசிச் சக்கரத்தை அமைத்திருக்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். ஆம்! உருவமற்ற காலத்தை அளக்க - கிரகங்களின் தன்மையை வரையறுக்க ராசிச் சக்கரம் உதவுகிறது.
ஆன்மாவின் இணைப்பில் உடலும் அதன் உறுப்புகளும் செயல்படுவதுபோல், கிரகங்களின் செயல்பாட்டில் உயிர்ப்பெற்று விளங்குகிறது ராசிச் சக்கரம். விண்வெளியில் தென்படும் அபரிமிதமான ஆற்றலைக் காலத்துடன் இணைத்து, உலகத்தை உணர வைக்கிறது ராசிச் சக்கரம். மனித சிந்தனையில் தோன்றும் மாற்றங்களை ராசிச் சக்கரம் வாயிலாக வரையறுக்கிறோம்.
மனிதனானவன், உலகில் தான் தோன்றிய நேரத்தில் இணைந்த நட்சத்திரத்தின்... அதாவது ஜன்ம நட்சத்திரத்தின் மூலம் ராசிச் சக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறான். ஆக, ராசி மண்டத்தில் நிகழும் விளைவுகள் அவனையும் பாதிக்கும். அந்தப் பாதிப்பை விவரிப்பதே பலன் சொல்லும் ஜோதிடப் பகுதி.

படைத்தல், காத்தல் அழித்தல் அத்தனையும் காலத்தின் பங்கு. கடவுள் காலத்தின் வடிவில் அதை நிகழ்த்துகிறார் என்கிறது ஜோதிடம். `காலவிதான சாஸ்திரம்’ என்பது ஜோதிடத்தின் பண்டைய பெயர். காலத்துக்கு ஆதி-அந்தம் இல்லை. ஆக, நாம் பிறக்கும் வேளையைக் காலத்தின் ஆரம்பமாக வைத்து, ஜாதகம் வாயிலாக காலம் நிகழ்த்தும் விளையாட்டை - இன்ப துன்ப பாதிப்புகளை வரையறுக்கும் கருவியாக ஜோதிடம் செயல்படும். வாழப் பிறந்த நாம் எதிரிடை யான இடையூறுகளைத் தகர்த்தெறிந்து வெற்றிபெற, ஜோதிடம் உதவும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள், ராசி புருஷனின் அவயவமாகக் கருதப்படுகின்றன. சிரம், முகம், கைகள், இதயம், வயிறு, அரை (இடுப்பு), வஸ்தி, லிங்கம், துடைகள், முட்டு, கணுக்கால், பாதம் - இப்படி 12 ராசிகளும் உடலுறுப்புகளுக்குப் பிரதிநிதியாக இருக்கின்றன.
ராசி நவாம்சகம் என்பது மனிதன் அனுபவிக்கும் தசைகளை வரையறுக்கும். உதாரணத்துக்கு... மேஷம், சிம்மம், தனுசு இந்த மூன்றின் நவாம்சகங்கள்... நட்சத்திரங்கள் மாறினாலும் தசைகளில் ஒன்றாக இருக்கும். ராசிக்கு உடையவனின் தரத்தை ஒட்டி ராசி பலம் பெற்று விளங்கும்.
பல தகவல்களின் தொகுப்பு ராசி. ஒன்று முதல் 60 வரை ராசியைப் பிரித்துத் தனித்தனி பலனை... அதில் வீற்றிருக்கும் கிரகங்களை வைத்து விளக்கும் ஜோதிடம். அதன் கூட்டு பலனே ராசி பலன் ஆகும்.
சரம், ஸ்திரம், உபயம், பகல் ராசி, இரவு ராசி, ஒற்றைப்படை, இரட்டைப்படை ராசி, ஜல ராசி, மனுஷ்ய ராசி, விலங்கின ராசி, ஊர்வன ராசி... இப்படி அதன் பிரிவுகள் விரிவடைந்து இருக்கும். பலன் சொல்லும் போது இவற்றையும் கவனிக்க வேண்டும். அதேபோல் ராசியின் திசைகள், ராசிகளின் மாறுபட்ட இடங்கள், லக்ன ராசி, சந்திரன் இருக்கும் ராசி, அவர்களது அதிபதிகள் இருக்கும் ராசி, சந்திர லக்ன அம்சக ராசி - லக்னாம்சக ராசி... இவற்றையும் பலன் சொல்லும் வேளையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது ஜோதிடம். மேலும் கேந்திரம், த்ரிகோணம், உபசயம், அபசயம் போன்ற நிலைகள், அதில் இருக்கும் கிரகங்கள் ஆகியவற்றையும் பலனில் இணைக்கச் சொல்லும். உச்சம், நீசம், மித்ர ராசி, சத்ரு ராசி போன்ற பாகுபாடுகளும் ராசியை வைத்து எழுந்தன. ஸ்வக்ஷேத்ரம், ஸுஹ்ருத் க்ஷேத்ரம். இப்படியும் பாகுபாடு உண்டு. ராசியின் விரிவாக்கம் துல்லியமான பலனைத் தேடிப் பிடிப்பதில் உதவுகிறது.
ராசிகளின் அடையாளங்கள்!
மேஷத்துக்கு- ஆடு, ரிஷபத்துக்கு- மாடு, மிதுனத்துக்கு- மனிதன், கர்க்கடகத்துக்கு- நண்டு, சிம்மத்துக்கு- சிங்கம், கன்னிக்கு- ஓடத்தில் வீற்றிருக்கும் கன்னிகை, துலாத்துக்கு- தராசு, விருச்சிகத்துக்கு- தேள், தனுசுக்கு- வில், மகரத்துக்கு- மகர மத்ஸம், கும்பத்துக்கு- குடம், மீனத்துக்கு- இரண்டு மீன்கள். இந்த அடையாளங்கள் ராசியின் பல தகுதிகளை வெளியிடும். இவற்றை ட்ரேடு மார்க்குக்குப் போடும் அடையாளம் போன்று எண்ணிவிடக் கூடாது.
பெயருக்கு ஒப்பான செயல்பாடு ராசிக்கு உண்டு. அது பெயருக்கு ஒப்பான உணவையும், பெயருக்கு ஒப்பான இயல்பையும் சுட்டிக்காட்டும் (ஸ்வனாமஸத்ருசா: ஸ்வசரா:ச).
மேஷத்துக்கு- ஆடு. அதன் இயல்பு மற்றும் உணவு, அந்த ராசியில் பிறந்தவனில் தென்படும். காரமான, கொஞ்சம் சூட்டோடு இருக்கும் உணவை ஆடு விரும்பும். ரிஷபம்- மாடு; அது புல்லை உணவாக்கும். மிதுனம்- மனிதன். அவன் அரிசி, கோதுமை போன்றவற்றை விரும்புவான். கர்க்கடகம்- நண்டு. அது மீனை உண்ணும். சிம்மம்- சிங்கம். அது, மிருகங்களை உண்டு களிக்கும். இப்படி உணவோடு நிற்காமல் இயல்பிலும் பிரதிபலிக்கும்!
பிறந்தவன் மேஷ ராசியானால்... அதாவது மேஷ லக்னமோ, சந்திர லக்னமோ ஆனால், நான்காலி போல நடைப்பயணத்தில் விருப்பம் இருக்கும். அவசர அவசரமாக உணவை ஏற்பவனாகவும் இருப்பான். நீரில் பயம் உண்டு. அளவுக்கு அதிகமான ஆசையும் இருக்கும்.
ரிஷபம் லக்னமானால் பயணத்தில் வேகம் இருக்காது; மெள்ள நடப்பான். பாரத்தைச் சுமப்பான்; துயரத்தைப் பொறுத்துக் கொள் வான்; உடலுழைப்பில் சளைக்க மாட்டான். உட்கொண்ட உணவு ஜீரணிக்கும் அளவு அக்னி பலம் இருக்கும்.

இங்ஙனம் அந்தந்த ராசிகளின் அடையாளங்கள், அதில் பிறந்தவனின் மாறுபட்ட இயல்பைச் சுட்டிக்காட்டி உதவுகின்றன. ஆக, ராசிகளின் பெருமையைப் புரிந்து கொண்டு, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை வழிபடுவது போன்று ராசி களையும் வழிபடச் சொல்கிறது பிரச்ன ஜ்யோதிடம்.
மேஷாய நம: ரிஷபாய நம: மிதுனாய நம: என்று ராசிச் சக்கர வழிபாடு உண்டு. ராசியை வழிபட்ட பிறகு, பிரச்ன ஜ்யோதிடத்தில் இறங்குவர். நாமும் நமது நட்சத்திரத்துக்கு உரிய ராசியை வழிபட வேண்டும்.
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். அதன் சரிபாதிக்கு சூரியனும் சந்திரனும் அதிபதி. நவாம்சத்தில் 9 கிரகங்கள் இருக்கும். த்வாதசாம்சத்தில் 12 ராசியும் இருக்கும். அத்துடன் அதன் அதிபதிகளும் இருப்பார்கள். இரண்டேகால் நட்சத்திரமும் அதன் தசாநாதன்மார்களும் இருப்பார்கள். ராசியை வணங்கினால் அத்தனை கிரகங்களையும் வணங்கியதாகி விடும். நமது நல்லது- கெட்டதை வரையறுப்பதில்... கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் ஆகிய மூன்றில் ராசியின் பங்கு சிறப்பானது. ஆகவே, நட்சத்திர வழிபாட்டில் ராசியையும் சேர்த்து வழிபடுவது நல்லது.
இனி 12 ராசிகளைப் பற்றி அடுத்து வரும் இதழ்களில் விரிவாக அறிவோம்.
-தொடரும்...