Published:Updated:

புத்தம் புது காலை: தமிழ்ப் புத்தாண்டு ஏன் ஏப்ரலில் துவங்குகிறது? #6AMClub

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு ஏன் ஏப்ரல் மத்தியில் துவங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னர், நம் முன்னோர்கள் காலத்தை எவ்வாறு புரிந்து பகுத்து வைத்திருந்தனர் எனபதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

புத்தம் புது காலை: தமிழ்ப் புத்தாண்டு ஏன் ஏப்ரலில் துவங்குகிறது? #6AMClub

தமிழ்ப் புத்தாண்டு ஏன் ஏப்ரல் மத்தியில் துவங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னர், நம் முன்னோர்கள் காலத்தை எவ்வாறு புரிந்து பகுத்து வைத்திருந்தனர் எனபதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு

காலத்தை சிறுபொழுது மற்றும் பெரும்பொழுது என்று வகைப்படுத்தும் தொல்காப்பியம், நமது ஒரு நாளை வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என நான்கு மணிநேரம் கொண்ட ஆறு சிறுபொழுதுகளாகப் பிரித்ததுடன், ஓர் ஆண்டை அதன் பருவநிலைகளுக்கு ஏற்ப இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என்ற ஈரிரு மாதங்கள் கொண்ட ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரித்துள்ளது.

சூரியனை பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதைக் கணக்கிட்டு (365நாட்கள்), அதன் அடிப்படையில் ஆங்கில மாதங்களை, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என எவ்வாறு கிரிகோரியன் காலண்டர் 12 மாதங்களாகப் பிரிக்கிறதோ, அதேபோல தமிழ் வருடமும் 12 மாதங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதற்கு, சித்திரை, வைகாசி, ஆனி எனப் பெயரிடப்பட்டிருந்தாலும், இந்த சித்திரைத் துவக்கத்திற்கு ஒரு காரணத்தையும் கூறுகிறது பஞ்சாங்கம் என்ற நமது தமிழ்க் காலண்டர்.

தமிழ்ப் புத்தாண்டு பொதுபலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பொதுபலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் 12 ஆகவும், நட்சத்திரங்கள் 27 ஆகவும் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்ததால், அதையே அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு இராசியிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை ஒரு மாதம் எனக் கணக்கில் கொண்டு, பூமத்திய ரேகைக்கு நேர் மேலாக சூரியன் ஒளிரும் மாதத்தை முதல் மாதமாக கணக்கிட்டுள்ளனர் முன்னோர்கள். அதனால் தான், மேஷம் இராசிகளில் முதல் ராசியாகவும், சித்திரை வருடத்தின் முதல் மாதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நமது அருகாமை மாநிலங்களும் உகாதி, விஷூ என இதனைப் பின்பற்றிக் கொண்டாடும் வேளையில், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரியப் புத்தாண்டுதான் பின்பற்றப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரவு-பகல் என நாட்களும், ஞாயிறு-திங்கள் என வாரங்களும், சித்திரை-வைகாசி என மாதங்களும் சூரிய சுழற்சி முறையில் அமைந்தது போலவே, பிரபவ எனத் துவங்கி அட்சய என முடியும் அறுபது வருட சுழற்சியைக் கொண்டது நமது தமிழ் காலண்டர். இந்த ஒவ்வொரு சூரிய மாதத்திலும் 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் சந்திரன் பூரணம் அடைந்து பௌர்ணமி வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரைத் தான் ஒவ்வொரு மாதத்திற்கும் வழங்கியுள்ளனர்.

ஆக, சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் மாதம் சித்திரை எனவும், விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் மாதம் வைகாசி என்றும், கேட்டையில் வந்தால் ஜேஷ்டா என்ற ஆனியாகவும், அவிட்டம் ஆஷாட என்ற ஆடியாகவும், திருவோணம் சிரவண ஆவணியாகவும் துவங்கி, அதேபோல மகம் நட்சத்திரத்தில் மாசி, உத்திரப் பல்குணி, பங்குனி மாதம் என்றும் ஒவ்வொரு மாதத்தின் பெயரும் நட்சத்திரங்கள் சார்ந்தே அழைக்கப்பட்டு வந்துள்ளன.

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு
பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு

இந்தக் காலக்கணக்குகள் அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டவை என்பதுடன், இதைப் போலவே, சீனர்களும் நட்சத்திரங்களின் சுழற்சியைக் கொண்டு அறுபது வருடங்களை கணித்துள்ளனர் என்கிறது சீன வரலாறு.

மேலும், பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் வித்தியாசப்படுகிறது என்பதால் அதிகப்பட்ச தூரமான perihelion வரும் ஆடிக்கு 32 நாட்களும், குறைந்தபட்ச தூரமான apohelion வரும் மார்கழிக்கு 29 நாள்களும் தந்துள்ளனர் என்பதை அறியும்போது காலத்தை அவர்கள் கணக்கிட்ட துல்லியம், நமக்கு பெரும் ஆச்சரியத்தைத்தான் தருகிறது.

புத்தாண்டு எந்த மாதம் துவங்குகிறது என்பதிலும், பிரபவ, பிலவ, அட்சய என்ற இந்த வருடங்களின் பெயர்களிலும், சில அபிப்ராய பேதங்கள் உள்ளது என்றாலும், தொல்காப்பியத்தில், பெரும்பொழுதின் துவக்கம் இளவேனிற்காலம் என்ற சித்திரை மாதம் என்பதும் நன்கு விளங்குகிறது..

ஆக... இந்த 'பிலவ' வருடத்தில், வசந்தத்தின் முதல் நாளான இன்றைய சித்திரைத் திருநாளில், அனைவரும் ஒன்றுகூடி, துன்பமெனும் கசப்பை விழுங்கி, அன்பெனும் இனிப்பை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும். பசி பிணியின்றி மகிழ்ந்திருப்பதுடன், கோடையில் விளையும் முக்கனிகளையும், மஞ்சள், குங்குமம், மலர்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களையும், கண்ணாடியையும் வைத்து, அத்துடன் நாவின் சுவையே வாழ்வின் சுவை என்பதைக் குறிக்கும் வகையில் இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்ற அறுசுவையையும் இறைவனுக்குப் படைத்து, இயற்கைக்கு நன்றிகூறுவோம் வாருங்கள்.

அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!