Published:Updated:

நட்சத்திர குணாதிசயங்கள்: ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்!’

திருவோணம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவோணம்

கற்பனைக் கிரகமான சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திருமால் அவதரித்த நட்சத்திரம்.

நட்சத்திர மாலை, `ஓதிய பொருளு நல்லான், உயர்ந்திடுஞ் செல்வனாகும், தீதறு பொருளுந் தேடும் திருவோண நாளினானே...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், நீதிநெறி தவறாதவர், சீரிய வழியில் பொருள் தேடுபவர், நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி, செல்வந்தராகத் திகழ்வீர்கள் என்று பொருள்.

நட்சத்திர குணாதிசயங்கள்: ‘ஓணத்தில் பிறந்தவர்  கோணத்தை ஆள்வார்!’

ஜாதக அலங்காரம், ‘நீங்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர், சிக்கனத் தைக் கடைப்பிடிப்பவர், ஆனால் தன்னை அண்டியவர்களுக்கு வாரி வழங்குபவர்’ என்கிறது. ‘நீங்கள் பல சாஸ்திரங்களை அறிந்த பண்டிதன், தைரியசாலி, தனவந்தன், கலைகளில் வல்லவர்’ என்கிறது யவன ஜாதகம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வருந்திய வள்ளலாரைப்போல, மனித நேயம் மிக்கவர். உங்கள் மனதைப் போல் தூய ஆடையை விரும்புவீர்கள். உங்களுக்கென தனிக்கொள்கையைக் கொண்டவர். கோபக்காரர் எனிலும் குணமும் உண்டு உங்களிடம். வாகனப் பயணத்தில் ஜாக்கிரதை மிக்கவராகவும், பெண்களால் விரும்பப்படுபவராகவும், சுருண்டகேசம் உடையவராகவும், வாசனைத் திரவியங்களை விரும்புபவ ராகவும், உள்ளங்கால் சற்றே உயர்ந்திருப்பவராகவும் இருப்பீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எதிரிக்கும் உதவும் பரந்த மனம் கொண்டவர். லட்சியத்தை அடைவதில் பின்வாங்க மாட்டீர்கள். தாயிற் சிறந்த கோயில் இல்லை என்று நினைப்பீர்கள். கடல்கடந்து சென்றாலும் கலாசாரத்தை மறக்கமாட்டீர்கள். இங்கிதமாகவும் இதமாகவும் பேசும் நீங்கள், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட்டீர்கள். நீதிமானாகவும் பழிக்கு அஞ்சி நடப்பவராகவும் வாழ்வீர்கள்.

‘ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான்’ என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, எந்தப் பகுதியில் வாழ்கிறீர்களோ, அந்தப் பகுதியில் புகழடைவீர்கள்.

கடின உழைப்பால் முன்னேறி வெற்றிவாகை சூடுவீர்கள். சில நேரங்களில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவீர்கள். பசியைப் பொறுத்துக் கொள்ளாத நீங்கள், பாலால் ஆன இனிப்புகளை விரும்பி அதிகம் உண்பீர்கள். அழகான உடலும், புன்னகை பூத்த முகமும் உடையவர். புலவராகவும் பண்டிதராகவும் சிறந்து விளங்குவீர்.

காக்கேயர் நாடியும் நந்தி வாக்கியமும் `வெகு ஜனப் பிரியர், மக்களை நேசிக்கக்கூடியவர், இல்லையென்று சொல்லாமல் வாரிவழங்கக் கூடியவர்’ என்று உங்களைப்பற்றிக் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவீனரக உடைகளை விரும்பி அணிவீர்கள். பழைய பொருள்களை விற்றுவிட்டு, சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில் விருப்பம் உடையவர். பெரிய முதலீடுகள் செய்து, பிரமாண்டமாகத் தொழில் நடத்துவீர்கள். தெய்வ அனுக்கிரகம் நிறைந்தவர் நீங்கள். எல்லோருக்கும் நல்லதே நினைப்பீர்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம், நாட்டியம் என்று கலைகளில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் கலைஞர்களை ஊக்கு விப்பவராகவும் இருப்பீர்கள்.

நட்சத்திர குணாதிசயங்கள்: ‘ஓணத்தில் பிறந்தவர்  கோணத்தை ஆள்வார்!’

16 வயது முதல் 23 வயது வரை பொறுமையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதம், பெற்றோர் சரியாகப் புரிந்துகொள்ளாமை போன்ற சூழ்நிலை உருவாகும். 24 வயதிலிருந்து உங்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம், பெரிய அந்தஸ்து போன்றவை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவீர்கள்.

மனைவிக்குப் பயந்து நடப்பவராகவும், அவள்மீது தீராத அன்பு கொண்டவராகவும், பிள்ளைகளைச் சொத்தாகக் கருதுபவராகவும், மனிதாபிமானம் உடையவராகவும், பொய் சொல்லாதவராகவும் விளங்குவீர்கள்.

உங்களில் பலர், முனைவர் பட்டம் பெற்றவர் களாகவும், மொழி ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, வங்கிப் பணி ஆகிய பணிகளில் இருப்பவராகவும் திகழ்வார்கள். பேராசிரியர், எழுத்தாளர், தொழிலதிபர் என்றும் புகழ்பெற்று விளங்குவார்கள். நீண்ட ஆயுள் உண்டு.

முதல் பாதம்

(சந்திரன் + சனி + செவ்வாய்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள், தீர்க்கமான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்டவர்கள். குழந்தைப் பருவத்தில் துறுதுறுவென்று இருப்பார்கள். மன உறுதி மிக்கவர்கள்.

தொடந்து போராடி லட்சியத்தை அடைவார்கள். ஆடம்பர ஆடை, ஆணிகலன்களை அணிவதென்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உள்ளன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டார்கள். குடும்பத்தினரின் ஆதரவு இவர்களுக்கு எப்போதும் உண்டு. இருந்தாலும், படிப்பு மற்றும் வேலையின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டி வரும். உறவினர், நண்பர் ஆகியோர் இவர்களை அதிகமாக நேசிப்பார்கள். எப்போதும் உழைப்பையே விரும்பும் இவர்கள், குடும்பத்தினரிடம் கண்டிப்புக் காட்டுவார்கள்.

ஆடை வடிவமைப்பு, இன்ஜினீயரிங், கேட்டரிங், மருத்துவம், சினிமா போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சில நேரங்களில் இவர்களின் அமைதியைக் கண்டு, மற்றவர்கள் `கோழை’ என்று இகழவும் நேரிடும். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே அமையும்.

இவர்களுக்கு, 27 வயதிலிருந்து புதிய திருப்பங்கள் ஏற்படும்; 35 வயதிலிருந்து வாழ்வில் வசந்தம் வீசும்.

பரிகாரம்: மதுரை - கம்பம் வழித்தடத்திலுள்ளது சுருளிமலை. இந்தக் குன்றின் குகையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் செழிப்பு உண்டாகும்.

இரண்டாம் பாதம்

(சந்திரன் + சனி + சுக்கிரன்)

இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் சாதுர்யமாகப் பேசிப் பல காரியங் களைச் செய்து முடிப்பதில் வல்லவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவார்கள். குடும்பத்தினருடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்; தன்னிச்சையாகச் செயல்பட மாட்டார்கள்.

வெளியூர்ப் பயணங்களை அதிகம் விரும்பும் இவர்கள், மார்க்கெட்டிங் துறையில் சிறந்து விளங்குவார்கள். பொறுமைசாலிகள் என்றாலும் தேவையான தருணங்களில் பொங்கியெழவும் செய்வார்கள். புது ஆடை, அணிகலன்களை விரும்புவார்கள். எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் வியாபாரம், மசாலாத் தூள் தயாரிப்பு ஆகிய தொழில்களைச் சொந்தமாக நடத்துவார்கள்.

லாரி, டேங்கர், போன்ற கனரக வாகனம், சொகுசுப் பேருந்து போன்றவற்றை வைத்து தொழில் செய்வார்கள். நண்பர், உறவினர் ஆகியோர் புடை சூழ இருக்கவேண்டும் என நினைப்பார்கள்.

கையில் இருப்பதையெல்லாம் கரைத்தாவது கௌரவத்தை நிலைநாட்ட முனைவார்கள். கிரானைட், மார்பிள், அரிசி மண்டி, கெமிக்கல் போன்றவற்றில் மொத்த வியாபாரம் செய்து ஏற்றம் காண்பார்கள்.

13 வயதிலேயே குடும்பச் சுமையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப தங்கள் மகிழ்ச்சியைத் தியாகம் செய்து உழைப்பார்கள். 24, 27, 33, 37 ஆகிய வயதில் திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்: திருப்பதி அருள்மிகு வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

மூன்றாம் பாதம்

(சந்திரன் + சனி + புதன்)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் பணம், பகட்டு வாழ்க்கையை ஒரு பொருட்டாக நினைக்காமல் நல்ல மனதையே எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தில் இவர்களுக்குத் தனி மரியாதை இருக்கும்.

எதிரிகளையும் மன்னிக்கும் குணமுடையவர்கள். அவ்வப்போது கோபமும் கொப்பளிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைச் செய்து காட்டுவார்கள். ‘தன்னால் எதுவுமில்லை, எல்லாம் அவன் செயலே’ என்று கடவுளைச் சுட்டிக் காட்டுவார்கள். சிறந்த ஆன்மிகவாதிகள்.

ஆடம்பரமான வண்டி இருந்தாலும் நடந்தே செல்வார்கள். சாலையில் கல்லும் முள்ளும் கிடந்தால், மற்றவர்களைப் போல் பார்த்துக் கொண்டே அலட்சியமாகப் போகாமல், அவற்றை அப்புறப்படுத்திவிட்டுச் செல்லும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களில் பலர், சினிமா, அரசியல், பத்திரிகை, ஏற்றுமதி - இறக்குமதி போன்ற துறைகளில் தனி முத்திரை பதிப்பார்கள்.

அறுசுவை உணவு கிடைத்தாலும் சரி, பழைய சாதம் கிடைத்தாலும் சரி இரண்டையும் சமமாக பாவித்து உண்பார்கள். வாழ்வில் உயர்ந்த பின்னும், பால்யகால நண்பர்களை மறக்காதவர்கள். பெற்றோருக்கு மனதில் கோயில் கட்டிக் கும்பிடுபவர்கள். மறைத்துப் பேச இவர்களுக்குத் தெரியாது.

சிலருக்குக் கலப்புத் திருமணம் அமையும். பிள்ளைகளைப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கவைப்பார்கள். 28 வயதிலிருந்து எல்லாவற் றிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: திருப்புல்லாணி தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகல்யாணவல்லி மற்றும் ஸ்ரீபத்மாஸினி உடனுறை ஸ்ரீஆதிஜகந்நாதப் பெருமாளை வணங்குதல் நலம்.

நான்காம் பாதம்

(சந்திரன் + சனி + சந்திரன்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்களைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு மகிழ்ச்சி பரவும். எப்போதும் சாந்தமாக இருப்பவர்கள்.

பிரச்னையென்று வருபவர்களுக்கு ஆறுதல் அளிப்பதில் வல்லவர்கள். யாரையும் வஞ்சிக்காமல் நேர்வழியில் சென்று பொருள் ஈட்டுவார்கள். எப்போதும் தூய்மையை விரும்புவார்கள்.

பகிர்ந்தளித்து உண்ணும் குணம் கொண்டவர்கள். பசியோடு இருப்பவர்களைத் தேடிப் பிடித்து உணவு அளிப்பார்கள். உண்ணும்போது விவசாயிகளையும் உடுக்கும்போது நெசவாளிகளையும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

தெருச்சண்டை, பங்காளிப் பிரச்னை என்ற கூச்சல் குழப்பம் எழும் இடத்துக்கு வலியச் சென்று சமாதானம் செய்வார்கள். சிறு வயதிலேயே இவர்களிடம் அறிவு பிரகாசிக்கும்.புதிய எண்ணங்கள் இவர்களுக்குள் ஊறிக் கொண்டே இருக்கும்.

ஆர்ட் டைரக்ஷன், நடிப்பு, திரைப்பட இயக்கம், கவிதை ஆகிய துறைகளில் பிரகாசிப்பார்கள். வானொலி - தொலைக்காட்சி, நட்சத்திர உணவு விடுதிகள், ஆர்க்கிடெக்சர், ஜுவல்லரி, டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளில் வெற்றி பெறுவார்கள். 26 வயது வரை அடிக்கடி நோய்வாய்ப்படுவார்ள். 27 வயதிலிருந்து வாழ்வில் தொடர் வெற்றிகள் உண்டு.

பரிகாரம்: கொல்லூரில் அருள்பாலிக்கும் மூகாம்பிகையை வணங்கி வாருங்கள்; எதிர்காலம் சிறக்கும்.

திருவோணம்

திருநட்சத்திர தேவதை : கருடவாகனத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால்.

வடிவம் : அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

எழுத்துகள் : ஜு, ஜே, ஜோ, கா

ஆளும் உறுப்புகள் : சுரப்பி, முட்டிகள்

பார்வை : மேல்நோக்கு

பாகை : 280.00 - 293.20

நிறம் : கருமை

இருப்பிடம் : பட்டினம்

கணம் : தேவ கணம்

குணம் : மென்மை

பறவை : நாரை

மிருகம் : பெண் குரங்கு

மரம் : பாலுள்ள எருக்கு மரம்

மலர் : ஜாதிப் பூ

நாடி : வாம பார்சுவ நாடி

ஆகுதி : சிவப்பு அரிசி

பஞ்சபூதம் : வாயு

நைவேத்தியம் : பால் ஏடு - அக்காரஅடிசில்

தெய்வம் : ஸ்ரீமகாவிஷ்ணு.

சொல்ல வேண்டிய மந்திரம்

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம் ச்ரவண நட்சத்திர வல்லபம்

விஷ்ணும் கமலபத்ராக்ஷம் த்யாயேத் கருட வாகனம்

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 8

அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், வெளிர்ச் சிவப்பு

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்டக் கிழமைகள் : புதன், சனி

அதிர்ஷ்ட ரத்தினம் : வைரம்

அதிர்ஷ்ட உலோகம் : தங்கம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

பொய்கையாழ்வார், விபீஷணன், சுவாமி நரசிம்ம பாரதி, வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசார்யர், விக்ரம் சாராபாய், கார்ல்மார்க்ஸ்.

திருவோண நட்சத்திரத்தில்...

விவாகம், பெண் பார்த்தல், தாலிக்குப் பொன் உருக்குதல், சீமந்தம், பூ முடித்தல், கதிரறுத்தல், தொட்டிலில் குழந்தையை விடுதல், சிகை நீக்கிக் காது குத்துதல், பெயர்ச் சூட்டுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், மாடு வாங்குதல், மருந்துண்ணல், புதிய ஆடை, ஆபரணம் அணிதல், குளம், கிணறு வெட்டுதல், வாசக்கால் வைத்தல், புத்தக வெளியீடு, குடமுழுக்கு, நவகிரக சாந்தி, வியாபாரம், பல்லக்கு ஏறுதல், ஆயுதப் பிரயோகம், விதைவிதைத்தல், யாத்திரை, புதுமனைப் புகுதல், விருந்துண்ணல், உபநயனம், கல்வி, நாட்டியம் ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் உண்டாகும்.

பரிகார ஹோம மந்திரம்

ச்ருண்வந்தி ச்ரோணாம்

அம்ருதஸ்ய கோபாம்

புண்யாமஸ்யா உப ச்ருணோமி வாசம்

மஹீந் தேவீம் விஷ்ணுபத்னீ-மஜூர்யாம்

ப்ரதீசீமேனாஹூம் ஹவிஷா யஜாம:

த்ரேதா விஷ்ணுருருகாயோ விசக்ரமே

மஹீந் திவம் ப்ருதிவீம் அந்தரிக்ஷம்

தச் ச்ரோணேதி ச்ரவ இச்சமானா

புண்யஹூம் ச்லோகம் யஜமானாய க்ருண்வதீ