ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

அற்புதங்கள் நிகழ்த்தும் எளிய பரிகாரங்கள்!

பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் கடன் பிரச்னைகள் வரை எளிய பரிகார வழிபாடுகள்

பெரும் கடற்பரப்பில் திசைதெரியாமல் அல்லாடுபவன்தான் கவலைக்கு உரியவன். திசைமானியோடு உரிய திசை அறிந்து பயணிப்பவன், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. வாழ்க்கைப் பயணத்துக்கும் ஒரு திசைகாட்டி உண்டு. அதுதான் ஜனன ஜாதகம். இதை ஆய்ந்தறிந்து, என்னென்ன காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை முன்னரே அறிந்து நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளலாம்.

அற்புதங்கள் நிகழ்த்தும் 
எளிய பரிகாரங்கள்!
Anupam Nath

இதுபோன்றே கிரக தோஷ நிலைகளும்! என்ன காரணத்தால் இந்த தோஷத்துக்கு ஆளானோம் என்பதைத் தெளிந்துணர்ந்து, அதற்குக் காரணமான பூர்வஜென்ம குற்றம் - குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும். அவ்வகையில், வாழ்வில் பலரும் சந்திக்கும் தோஷங்கள், பாதிப்புகள், அவற்றுக்குக் காரணமான கிரக நிலைகள், எளிய பரிகாரங்களைத் தெரிந்துகொள்வோம்.

அற்புதங்கள் நிகழ்த்தும் 
எளிய பரிகாரங்கள்!

செவ்வாய் வழிபாடு!

தோஷங்களில் அதிக பயத்துக்கும் பாதிப்புக்கும் ஆளாக்குவது, செவ்வாய் தோஷம்தான். பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

சில தருணங்களில் இந்த தோஷம் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது.

செவ்வாய் தோஷ பாதிப்புகளுக்கு வேறு பரிகாரங்கள் என்னென்ன... தெரிந்து கொள்வோமா?

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள (நிலம், சகோதரர்கள் முதலான...) விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

முடிந்தவரையிலும் ரத்த தானம் செய்யுங் கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள், பெற்றோரின் மனத் தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு.

ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக் குச் செம்பருத்திமற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக முருகப் பெருமான் வழிபாடு செவ்வாய் தோஷ பாதிப்புகளைக் குறைத்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.

தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் வீட்டில் ஷட்கோணம் வரைந்து, அதில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதிவைத்து, 6 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து குமார ஸ்தவம், சண்முகக் கவசம் படித்து வழிபடலாம். அப்போது வெல்லம் கலந்த தினைமாவு நைவேத்தியம் செய்து, முல்லைமலர், செவ்வரளி அல்லது செம்பருத்தி சமர்ப்பித்து முருகனை வணங்கிட, செவ்வாய் தோஷ பாதிப்புகள் விலகும்.

ராகு-கேது தோஷமா?

காலப் பிரகாசிகை, சுக்ர நீதி போன்ற பழம்பெரும் நூல்கள் ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் எனக் கூறுகின்றன. ஒருவரின் தாய்வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக ராகு வருகிறார். கேது - தந்தை வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக வருகிறார். ராகு- கேது குறித்து முழுமையாக அறிந்துகொண்டால், தோஷத்துக்கு மட்டுமல்ல; பல தருணங்களில் பூரண சந்தோஷத்துக்கும் இவர்களே காரணமாகத் திகழ்வது புரியும்.

ராகு தோஷ பாதிப்புகள் மட்டுப்பட, வீட்டிலேயே சனிக்கிழமைகளில் மாலையில் அம்பிகைக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டு வரலாம். அதேபோல், பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை தரிசித்து வழிபட்டு வருவதாலும் ராகு தோஷப் பாதிப்புகள் விலகும்.

கேதுபகவானின் திருவருளைப் பெற செவ்வாய்க் கிழமைகளில், கேது பகவான் காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. பிள்ளையாருக்கு அருகம்புல் மோதகம் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், கேது பகவான் மகிழ்வார். ஏழை மாணவர்களின் படிப்புக்கும் சமயச் சொற்பொழிவு முதலான ஆன்மிக காரியங்களுக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கும் உதவி செய்வதால் கேதுபகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

காஞ்சி சித்ரகுப்தரைத் தரிசித்து வருவதும் கேது பகவானுக்கு ப்ரீத்தியானது. கீழப் பெரும்பள்ளம், திருப்பாம்புரம் தலங்களுக்கும் சென்று வழிபடலாம்.

அற்புதங்கள் நிகழ்த்தும் 
எளிய பரிகாரங்கள்!

நோய் பாதிப்புகளால் சங்கடமா?

ஓர் ஆணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டுக்கு உரிய கிரகம் மறைந்து பலவீனமாகி இருக்க, அந்தக் கிரகத்துடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகங்களும், பாதகாதிபதியும் சேர்ந்திருந்தால், அவருக்குத் திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியால் மருத்துவச் செலவுகளும், மற்ற செலவுகளும் வந்துகொண்டே இருக்கும்.

அதேபோல், ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதனுடன் 6-க்கு உரிய கிரகமும் சேர்ந்து, இவர்களுடன் 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகமும் சேர்ந்து, இந்தக் கூட்டுக் கிரகங்களை சனி பார்த்து விட்டால், அவருக்கு மருந்தே வாழ்க்கையாகி விடும். அதாவது, அவர் வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரைகளுடனேயே வாழ்வார். பூர்வ புண்யாதி பதியுடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்தால் பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும்.

பொதுவாக, மேஷம் தொடங்கி மீனம் வரையிலான 12 ராசியினருக்குமே நோய்கள் வந்து மருத்துவச் செலவு ஏற்பட்டாலும், மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசியினர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்; உடல்ரீதியான பிரச்னைகளைச் சந்திப்பார்கள். ராசிநாதனே இந்த நான்கு ராசிகளுக்கும் 6, 8-ஆம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால், மற்ற ராசியினரைவிட இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

இவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால், நோயற்ற நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்.

மருத்துவச் செலவு தேவைப்படும் நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யலாம். பழைமையான ஆலயங்களின் தலவிருட்சப் பராமரிப்பில் ஈடுபடலாம். மா, அத்தி உள்ளிட்ட பால் மரக் கன்றுகளை பொது இடங்களில் நட்டுப் பராமரிக்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ யாருடைய சொத்தையோ பணத்தையோ அபகரித்து இருந்தால், அவற்றை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவது நன்று.

இந்தப் பரிகாரங்களோடு, கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கோயில்கொண்டுள்ள சரபேஸ்வரரை வழிபட்டு, அவரவர் வயதைக் குறிக்கும் எண்ணிக்கை யில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால், நோய், கடன், வழக்கு பிரச்னைகளில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

அற்புதங்கள் நிகழ்த்தும் 
எளிய பரிகாரங்கள்!

கடன் தோஷம் நீங்க வேண்டுமா?

பொதுவாக, கடன் ஒருவரது வாழ்க்கையில் வருவதும் போவதுமாக இருக்கும் என்றாலும், சிலர் ஆயுசு முழுக்கக் கடனாளியாகவே இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். அவர்கள் எந்தவித முயற்சியில் இறங்கினாலும் பொருள் நஷ்டத்தால் சிரமப்படுவார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் (2-ஆம் வீட்டுக்குரிய)தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4-ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ, இந்த ஜாதக அமைப்புடன் பிறந்த எவர் ஒருவரின் ஜாதகமும் நஷ்ட ஜாதகம்தான்.

அதேபோல், லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுவிழந்து, ஆனால் 6-க்கு உரியவன் வலுவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.

இங்ஙனம் கடன் தோஷ ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்களுக்கு, பாதிப்புகள் விலகிட தானம்தான் மிகச் சிறந்த பரிகாரம். அது, உணவாகவோ, ஆடையாகவோ அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆசிரியராக இருப்பவர்கள், மற்றவர்களுக்குக் கல்வியை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ தருவது சிறந்த பரிகாரமாகும்.

நம்மால் முடியும்போதெல்லாம் பசுவுக்கு உணவாக பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி ஆகியவற்றைத் தரலாம்

பரிகாரக் கோயில் என்று எடுத்துக்கொண்டால், சம்ஹார தலங்களுக்குச் சென்று வழிபடலாம். குறிப்பாக, சஷ்டி தினங்களில்... திருச் செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது நல்லது. முடிந்தால், வருடத்துக்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று, கந்தவேளை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

மனைவியால் யோகம் வேண்டுமா?

ஓர் ஆணின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7-வது இடம் மனைவி ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த வீட்டுக்குரிய கிரகம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, இந்தக் கிரகம் 2, 4, 5, 9 ஆகிய வீடுகளுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பெண், இல்வாழ்க்கைத் துணைவியாக அமைவாள்.

ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் (சப்தமாதிபதி) சுபத் தன்மை பெற்ற குருவின் பார்வை பெறுவது சிறப்பு. அதேபோல் லக்னாதிபதி வலுவடைந்து, 7-ஆம் வீட்டுக்குரிய கிரகமும் பாவக் கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இல்லாமல் இருந்தால், அழகு, அன்பு, அறிவு, அந்தஸ்து, நற்குணம் கொண்ட மனைவி அமைவாள்.

அதேநேரம் ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் 6, 8 ஆகிய வீடுகள் மற்றும் பாதகாதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ, திருமணத்துக்குப் பிறகு பிரச்னைக்குரிய வாழ்க்கையே அமையும்.

திருமணத்துக்குப் பிறகு நல்வாழ்க்கை அமைந்து இல்லறம் இனிக்க கீழ்க்காணும் எளிய பரிகாரங்களைச் செய்து பலன் பெறலாம்.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்யலாம் அல்லது திருமணச் செலவின் குறிப்பிட்ட பகுதியை மனமுவந்து ஏற்பது சிறப்பு. குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யம் வாங்கித் தருவது நல்லது. அதேபோல் கன்னிப் பெண்களுக்கு வெள்ளியால் ஆன பொருள் தானம் செய்வது சிறப்பாகும்.

சஷ்டி திதியன்று திருத்தணி சென்று முருகப் பெருமானை வழிபட, அதிர்ஷ்டம் அள்ளித்தரும் பெண் மனைவியாக அமைவாள்.

அற்புதங்கள் நிகழ்த்தும் 
எளிய பரிகாரங்கள்!

படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டுமா?

ஒருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும்போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.

சிலருக்குக் கிரக நிலைகள் காரணமாக படிப்புக்கேற்றபடி நல்ல வேலை அமையா மல் சிரமப்படுவார்கள். அவர்கள், மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித்தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம்.

தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பணவசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

நல்ல மதிப்பெண் எடுத்தும், நல்ல காலேஜில் சீட் கிடைத்தும், பணப்பற்றாக்குறை காரணமாக மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்படும் நாத்தனாரின் மகனையோ, கொழுந்தனாரின் மகளையோ நம்மால் முடிந்த பண உதவி செய்து படிக்கவைக்கலாம்.

* கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.