Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - துலாம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் துலா ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - துலாம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் துலா ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

துலாம்: இங்கிதமான பேச்சால் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பவர்களே! சந்திரன் லாப வீட்டில் நிற்கும் போது இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வேலை அமையும்.

உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவானப் பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரு போர்களம் போல் தெரிந்ததே, இனி குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனைவிவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். குடும்பத்திலும் வீண் குழப்பங்கள் வரும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களை தவறான பாதைக்கு தூண்டுவார்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 4-ம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும் போதும், சாலையை கடக்கும் போதும் அலைப்பேசியில் பேச வேண்டாம். சின்ன சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும்.

வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நீடிப்பதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பைக் கோளாறு, அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போங்கள். சிலர் கணவன் -மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தக் கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அடிக்கடி வருந்தினீர்களே! இனி அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்
துலாம்

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்...

28.04.2022 முதல் 24.05.2022 வரை மற்றும் 16.02.2023 முதல் 13.03.2023 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனமாக கையாளுங்கள்.

10.08.2022 முதல் 9.10.2022 வரை மற்றும் 29.11.2022 முதல் 14.03.2023 வரை செவ்வாய் 8-ல் மறைவதால் சகோதரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். பணம் எடுத்துக் கொண்டு செல்லும் போதும், வரும் போதும் உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள்.

வியாபாரிகளுக்கு...

வியாபாரஸ்தர்களே! கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். பங்குனி மாதத்தில் இடவசதியில்லாத கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவார்கள். கெமிக்கல், இரும்பு, கடல் உணவு வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்தியோகஸ்தர்களே, நெருக்கடிகள் நீங்கும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பி பணி புரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயரும். மேலதிகாரி தவறான வழிகளை கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு.

நாலா விதத்திலும் நிம்மதியில்லாமல் அலைகழித்த உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும், மன அமைதியையும் அள்ளித்தரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism