திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

புது வீடு புது மனை... தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்!

வாஸ்து வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
News
வாஸ்து வழிகாட்டல்

வாஸ்து வழிகாட்டல் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

சொந்த வீடு பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். அவ்வகையில் புதிய மனையில் வீடு கட்டும்போது, அவசியம் களைய வேண்டிய சில குறைகளை `வேதைகள்’ எனும் பெயரில் குறிப்பிட்டு விளக்குகின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள். நாமும் குறிப்பிட்ட சில வேதைகளை - குறைகளை அறிந்துகொள்வோம்.

புது வீடு புது மனை...
தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்!

சிவ - சக்தி வேதைகள்: இல்லத்தின் நேர் எதிரில் 300 அடிக்குள் சிவாலயம், சக்தி கோயில் அமைந்து இருத்தல் கூடாது. அதேபோல் இல்லத்தின் நேர் எதிரில் விஷ்ணு கோயில் (அ) விக்கிரகம் இருந்தால் விஷ்ணுவேதையாகும்.

மடவேதை: துறவிகள் வாழ்கின்ற மடத்துக்கு நான்கு புறங்களிலும் 200 அடி தூரத்துக்குள் இருந்தால் அங்கு வசிப்பவர் பொருட்கள் திருட்டு போகும். அதேபோல், தர்ம சத்திரத்தின் எல்லையைச் சுற்றி 200 அடிக்குள் குடியிருப்பு அமைந்தால், அங்கு வசிப்பவருக்கு தீய நடத்தையும், மன சஞ்சலமும் ஏற்படும்.

சூரியகிரணாவத வேதை: கோயிலானாலும், வீடானாலும் சூரிய உதயம் முதல் 3 மணி நேரமும், சூரியன் மறையும் முன் 3 மணி நேரமும், சூரிய ஒளி பட வேண்டும். இவ்வாறு அமையவில்லை என்றால் குற்றம் ஏற்படும்.இந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும். கால்நடைகளுக்கும் அழிவு ஏற்படும்.

தரு வேதை: கோயில்களில் பயன்படுத்திய மரங்கள், பலகைகளை வீட்டுக்குப் பயன்படுத்தினால், இல்லாள் துன்பம் அடையவும், நோய், கலகம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

பிரேத தூத வேதை: மயானத்தில் எரியும் பிணத்தின் புகை பரவும் வகையில் அமைந்த இல்லத்தில் இருப்போர், ஆரோக்கியக் குறைவையும், அகால மரணத்தையும் சந்திப்பார்கள்.

நிசாசர வேதை: இல்லத்தில் சூரிய ஒளி பகலில் நன்கு படவும், இரவினில் சந்திர ஒளி நன்கு படவும் இருப்பது நன்மை. அவ்வாறு இல்லாமல் இருந்தால் தீராத நோய்கள் ஏற்படும்.

பர்வத வேதை: வீட்டின் மீது மலையின் உச்சி, மலையின் சாய்வு, மலையின் அடிவாரம் ஆகியவற்றின் நிழல் பரவினால் செல்வ அழிவு ஏற்படும்

ஸங்காத வேதை: வீட்டின் முன் கால்நடைகளைக் கொல்லும் களம் இருந்தால், இல்லத் தலைவனின் ஆயுள் குறையும். புகழ் மங்குதலும் ஏற்படும்.

கூப வேதை: வீட்டின் தலைவாசலுக்கு நேர் எதிரில் கிணறு இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் தலைவனுக்கு விபத்துக்கள் (அ) இதயம் சம்பந்தமான (சுவாச) கோளாறுகள் ஏற்படும்.

விருட்ச வேதை: வீட்டிற்கு நேர் எதிரில் பட்டுப்போன மரம் போன்று பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால், அந்த இல்லத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்குத் துயரம் ஏற்படும், வறுமையும், தீங்கும் ஏற்படும்

பங்க வேதை: இல்லத்தின் எதிரில் எப்போதும் சகதியும் சாக்கடை நீரும் தங்கி இருந்தால், அந்த இல்லத்தில் வசிப்போருக்கு துக்கம் ஏற்படும்.