Published:Updated:

வாடகை வீட்டில் இருப்பவர்களும் வாஸ்து பார்க்க வேண்டுமா?

வாஸ்து
வாஸ்து

இரும்பின் பயன்பாட்டை வீட்டில் குறைப்பது நல்லது. மரத்தாலான ஃபர்னிச்சர் வகைகள் மிகவும் நல்லது. பணத்தை மரப்பெட்டிகளில் சிவப்புத் துணியில் சுற்றி வைப்பது பெரிய அளவில் நன்மை தரும்.

சொந்தவீடு கட்ட நினைக்கும் பலரும் தங்கள் வீட்டை வாஸ்துப்படி அமைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். அதற்கெனக் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்யும்போதே, வாஸ்து ஆலோசகரையும் தேர்வுசெய்து, அதன்படி வீட்டைக் கட்டுவார்கள். இது சொந்தவீடு கட்டுபவர்களுக்குச் சாத்தியம். ஆனால், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு?

'வாஸ்துவுடன் உளவியல் மாற்றத்தையும் சேர்த்துதான் வலியுறுத்துவேன்' என்று சொல்லும் வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான எளிய வாஸ்து பரிகாரங்களைக் கூறினார்.

சுத்தமான அறை
சுத்தமான அறை

''எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகளும் பரிகாரங்களும் நிச்சயம் உண்டு. அதனால்தான், 'இறைவன் பூட்டைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே சாவியைத் தயார்செய்துவிடுவார்' என்று சொல்லுவார்கள். சொந்த வீடோ வாடகை வீடோ வாஸ்துப்படி அந்த வீடு அமையாவிட்டால், அந்த வீட்டில் வாசிப்பவர்களுக்குப் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.

வாடகை வீடாக இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் முன்னேற்றம், சரளமான பணவரவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் இவையெல்லாம் இருந்தால்தான் வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக இருக்கமுடியும். இதெல்லாம் கிடைக்க நாம் இருக்கிற வீட்டையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.

* வாடகை வீட்டிலிருப்பவர்கள் வாஸ்து சரியில்லாமலிருந்தால், நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் மீன்தொட்டி வாங்கி வையுங்கள். சின்னச் சின்ன கலர் மீன்கள் நீரில் துள்ளித் துள்ளித் திரியும். அவை, வீட்டின் தீயசக்திகளை விரட்டி, நம் மனத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.

வீட்டின் முகப்பு
வீட்டின் முகப்பு

* இரும்பின் பயன்பாட்டை வீட்டில் குறைப்பது நல்லது. மரத்தாலான ஃபர்னிச்சர் வகைகள் மிகவும் நல்லது. பணத்தை மரப்பெட்டிகளில் சிவப்புத் துணியில் சுற்றி வைப்பது பெரிய அளவில் நன்மை தரும்.

* வீட்டில் தேவையில்லாத பொருள்களைச் சேர்த்து வைக்காதீர்கள். அவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்திவிடுங்கள். மூன்று மாதத்துக்குள் ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் அவற்றைப் பிறகு தேவைப்படுமே என வீட்டில் அடைத்து வைக்காதீர்கள்.

* வீட்டில் வெளிச்சமும் காற்றோட்டமும் மிகமுக்கியமான இரண்டு அம்சங்கள். அவற்றுக்கு எந்தத் தடையுமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* தென்கிழக்கில் சமையலறையும் தென்மேற்கில் பணப்பெட்டி வைக்கும் அறையையும் இருக்கும் விதமான வீட்டை, வீடு தேடும்போதே கவனத்தில் கொண்டுபாருங்கள். வாடகை வீடுதானே என்று அசட்டையாக வீடு தேடாதீர்கள். உங்களுக்குச் சொந்த வீடு அமையும் வரை அதுதான் உங்கள் சொந்த வீடென பாவியுங்கள். அதுவே உங்களுக்குச் சொந்தவீடாக அமையலாம்.

* ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பூனையில்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவு, பூனையை வளர்க்கிறார்கள். பூனையை 'பணப்பானை' என்றே சொல்லுவார்கள். உலகின் தலைசிறந்த உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டு, 'பூனையுடன் விளையாடிய நாள்கள் எனக்கு வீணாகவே போனதில்லை'' என்கிறார்.

ஆண்டாள் பி சொக்கலிங்கம்
ஆண்டாள் பி சொக்கலிங்கம்

* வீட்டில் எப்போதும் உங்களின் மனதுக்குப் பிடித்த இசைநயம் மிக்க பாடல்களை ஒலிக்கச்செய்வது நல்ல சூழ்நிலையையும் மனநிலையையும் உருவாக்கும்.

* வீட்டு பூஜையறையில் திருப்பதி வேங்கடாஜலபதி பெருமாள், பழநிமலை முருகன், ஆண்டாள் ஆகியோரின் படங்களை வைத்து வழிபட வேண்டும். பெருமாள் உலக நன்மைக்காக 24 மணி நேரமும் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார். பழநி மலை முருகன் வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்த எவருக்கும் அவர் நன்னம்பிக்கைமுனை. ஆண்டாள் மனிதப் பிறவியெடுத்தாலும் தன்னம்பிக்கை, குறிக்கோள், திட்டம் மூன்றினாலும் பெருமாளை அடைந்தவர். இந்த மூவரையும் வைத்து வணங்குவது நல்லது.

திருப்பதி
திருப்பதி

* பீச் தெரபி எனப்படும் கடற்கரைக்கு அடிக்கடிசெல்வது, கடலையொட்டி நடந்து செல்வது ஆகியன நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

* வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிமுதல் 9 மணிக்குள் வீட்டுக்கு கல் உப்பு வாங்குவது நல்ல பலனளிக்கும். உப்பை பூஜையறையில் வைப்பது நல்லது. வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு 9 மணிக்குள் துர்கையம்மனுக்கு மண் விளக்கில் நல்லெண்ணெயில் தாமரைத் திரி போட்டு விளக்கேற்றுவது நல்ல பலனளிக்கும். பெருமாளின் தங்கையான துர்கையை வழிபட்டால், பெருமாளின் அருளும் லட்சுமிதேவியின் அருளும் கிடைக்கும்.

* பௌர்ணமி அன்று திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவது பெரும்பலனை அளிக்கும். கடலில் குளித்தால் நமக்கு வாழ்க்கை மாற்றம் நிச்சயம் வந்தேதீரும்.

* காலையில் எழுந்ததும் மனைவியின் நெற்றியைப் பார்ப்பதும், கணவனின் முகத்தை மனைவி பார்ப்பதும் சிறப்பான விஷயம். கணவன் மனைவி பரஸ்பரம் மனம் விட்டுப்பேசுவது மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும். கணவன்தான் மனைவியிடம் நிபந்தனையில்லாத அன்பை வைக்கவேண்டும். ஒருநாளில் அடிக்கடி மனைவிக்கு 'நன்றி' எனும் வார்த்தையைச் சொல்லவேண்டும்.

ஆண்டாள்
ஆண்டாள்

வாடகை வீடாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் உடனே வீட்டை மாற்ற முடிவதில்லை. வாஸ்து சரியில்லாத வீடாக இருந்தாலும் மகிழ்ச்சியை நாம்தான் கொண்டு வந்து நிரப்ப வேண்டும்'' என்கிறார் ஆண்டாள் பி.சொக்கலிங்கம்.

அடுத்த கட்டுரைக்கு