Published:Updated:

வாடகை வீடும் வாஸ்து விதிகளும்!

வீடு
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு

சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

படைப்பின் ரகசியமாகிய பிரகிருதி எனும் இயற்கை மூன்று குணங்களைக் கொண்டதாகும். அவை: சத்வ, ரஜோ மற்றும் தமோ குணமாகும். வாஸ்து சாஸ்திர ஞானிகளாகிய நம் முன்னோர், வாஸ்து திசைகளுக்கும் குணங்களுக்கும் இடையேயுள்ள குணங்களைக் கண்டறிந்துள்ளனர்.

அவ்வகையில் ஒரு மனையின் வடகிழக்குப்பாகம் நல்ல வெளிச்சத்தையும் காற்றையும் வீட்டுக்குள் ஈர்ப்பதாக அமையவேண்டும். அது சத்வகுண சக்திகளை அளிப்பதாக இருக்கும். தென்மேற்கு திசை தமோ குணத்தைக் கொண்டது. அங்கு குறைவான வெளிச்சமே வரவேண்டும். தூங்கும் அறை மற்றும் தங்கும் அறையை அங்கே அமைக்கலாம்.

தென்கிழக்கு ரஜஸ் குணம் கொண்டது. அங்கே நிலையற்ற பொருள்கள், கழிவறை வைக்கப்படலாம். இதுவே வாஸ்து சாஸ்திரத்தின் குண ரகசியம் ஆகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுபோன்ற வாஸ்து விதிகளைச் சொந்த வீடு கட்டுவோர் முறைப்படி அனுஷ்டித்து புது வீட்டைக் கட்டுவார்கள். வாடகை வீடு எனில், என்ன செய்வது?

  சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி
சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

இன்றைய சூழலில் பெரும்பாலும் வாடகைக்கு விடப்படும் வீடுகள், குடியிருப்புகள், அடுக்குமாடி வீடுகள் போன்றவை, வாஸ்து முறைக்கு உட்பட்டுக் கட்டப்படுவதில்லை.

இருக்கும் இடத்தை ஓர் அடி கூட விடாமல் கட்டடத்துக்குப் பயன்படுத்தும் நிலையே உள்ளது. இப்படியான நிலை, அந்தக் கட்டடத்தில் குடியிருப்போருக்கும் நன்மை பயக்காது; உரிமையாளருக்கும் நன்மை பயக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாடகை செலுத்துவதிலும் பெறுவதிலும் தடைகள், மருத்துவச் செலவுகள், வாடகைதாரர் - உரிமையாளருக்கு இடையே பிரச்னைகள் முதலான சங்கடங்கள் உருவாகவும் வாய்ப்பு உண்டு. எனவே, வீட்டை வாடகைக்கு விடுவோரும், அவற்றில் குடியிருப்போரும் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகளை நாம் அறிவது அவசியம்.

கட்டடத்தின் சொந்தக்காரர்கள் பின்பற் றவேண்டிய வாஸ்து விதிகள்

தென்மேற்கு மூலையில் ஆழ்குழாய்க் கிணறு, தலைவாசல், நிலத்தடி நீர்த்தொட்டி அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால் கடன் பிரச்னை சூழ வாய்ப்பு உண்டு.

பெரிய வீடாகவோ, கட்டடமாகவோ, தொழிற் சாலையாகவோ இருந்தால், தென்மேற்கு மூலையில் ஓர் அறையை உரிமையாளர் வைத்துக் கொண்டு, மற்றவற்றை வாடகைக்கு விடுவது உத்தமம்.

சிலர் வாஸ்து விதிகள் பூரணத்துவம் பெற்றிருந்தால் வீடு வாடகைக்குப் போகாது என்று சொல்வது உண்டு. இது தவறு. வாஸ்து மிகச் சரியாக இருந்தால்தான் அந்தக் கட்டடத்தின் மூலம் வருவாய் பெற முடியும். சொந்த அனுபவத்துக்கும் மிக உகந்ததாக இருக்கும்.

வாடகை வீடும் வாஸ்து விதிகளும்!

கீழ், மேல் என இருபகுதிகளாக வீடு அமைத்திருப்பவர்கள், கீழ்ப் பகுதியில் தாங்கள் குடியிருந்துகொண்டு, மேல் பகுதியை வாடகைக்கு விடலாம்.

கிழக்கு - மேற்கு அல்லது வடக்கு - தெற்கு என இரண்டு பகுதிகளைக் கொண்ட வீடுகள் எனில், சொந்தக்காரர் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குடியிருந்துகொண்டு கிழக்கு அல்லது வடக்கு பகுதியை வாடகைக்கு விடலாம்.

வாடகை வீட்டில் குடியேறுவோருக்கான வாஸ்து விதிகள்

இயன்றவரையிலும் கீழ்க்காணும் விவரப்படி, அவரவர் ராசிக்கு உகந்த தலைவாசலைக் வீடுகளில் குடியேறலாம்.

கிழக்கு: மேஷம், கடகம், விருச்சிகம், மீனம் ராசியினருக்கு உகந்தது.

தென்கிழக்கு: கன்னி, மகர ராசியினர்.

வடகிழக்கு: கடகம், விருச்சிகம், மீனம்.

மேற்கு: மிதுனம், துலாம், கும்பம்.

வடமேற்கு: மிதுனம், துலாம், கும்பம்.

வடக்கு: சிம்மம், தனுசு.

தெற்கு: ரிஷபம், கன்னி, மகரம்.

தென்மேற்கில் தலைவாசல் இருக்கக்கூடாது. அப்படி அமையப் பெற்ற வீடுகளைத் தவிர்க்கலாம்.

தெருக்குத்து வீடு ஆகாது. அதேபோல் கிழக்கு, வடக்கு உயர்ந்தும், தெற்கு மேற்கில் தாழ்ந்தும் உள்ள வீடுகள் ஆகாது.

தென்மேற்கில் ஆழ்குழாய்க் கிணறு, தொட்டி உள்ள வீடுகளைத் தவிர்க்க வேண்டும். சமையலறை தென்கிழக்கில் இருந்தால் நன்று. இல்லையெனில் உரிமையாளரிடம் சொல்லி மாற்றி அமைத்துத் தரும்படி கேட்கலாம்.

எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் வீட்டின் தென்மேற்கு அறையில் கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து ஒரு பீரோவை வைத்து, அதில் பணம் வைத்துப் பயன்படுத்துங்கள்; செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.

அக்னி மூலையில் கழிப்பறை இருக்கக்கூடாது. வீட்டின் தரை மற்றும் சுவர்கள் பெயர்ந்தோ வெடிப்பு விட்ட நிலையிலோ இருக்கக் கூடாது.

வீட்டின் வாயில்கள் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருக்க வேண்டும். 3 அல்லது 5 எனும்படி அமைந்திருந்தால், மேற்கு அல்லது தெற்குப் பகுதியிலுள்ள ஒரு கதவைப் பயன்படுத்தாமல் மூடி வைக்கலாம்.

குடும்பத் தலைவர் தென்மேற்கு அறையில் படுக்கை அறையாகப் பயன்படுத்தலாம்.

மூன்று அல்லது நான்கு சாலைகள் சந்திக்கும் மூலையில் உள்ள தெற்கு, மேற்கு பார்த்துள்ள வீடுகளில் குடியேற வேண்டாம். வடக்கு, கிழக்குப் பார்த்து அமைந்த மூலைமனை எனில் தோஷம் இல்லை.

வீட்டில் ஶ்ரீசக்கரம் - ஶ்ரீவித்யா சக்கரம் வைத்து வழிபடுவதால், வீட்டில் சகல நன்மைகளும் உண்டாகும்; செல்வ சுபிட்சங்கள் பொங்கிப் பெருகும்.

தோஷம் நீக்கும் வாஸ்து மந்திரம்

வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதாகக் கருதினால், வாஸ்து நாள்களில் வாஸ்து பகவான் நித்திரை விடும் நேரத்தில் வாஸ்து மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.

வாஸ்து மூர்த்தி பரம்ஜோதி

வாஸ்து தேவோ பரசிவ

வாஸ்து தேவாஸ்து

வாஸ்து தேவாம் நமாம்யஹம்

ஸ்ரீ வாஸ்து தேவதாப்யோ நம:

வாஸ்து காயத்ரீ மந்திரம்

ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே

பூமிபுத்ராய தீமஹி

தன்னோ வாஸ்து பிரசோதயாத்: