வீடு கட்டும்போது எல்லா அறைகளையுமே நான்கு மூலைகள் இருக்குமாறு கட்ட வேண்டும். குறைந்தபட்சம் நான்கரை அங்குலம் அளவில், ஒவ்வோர் அறைக்கும் நான்கு மூலைகளுக்கும் மடக்கு வைத்து செங்கல் கட்டுமானம் கட்டியபிறகே, நிலைக்கால் வைக்க வேண்டும்.

தள கான்கரீட் போடும்போது நிருதி மூலையில் தொடங்கி ஈசானிய மூலையில் முடிக்கவும். அதேபோல், கூரை அமைப்புக்கு சென்ட்ரிங் பலகை அமைத்தல், கம்பி கட்டுமானம், கான்கிரீட் போடும் வேலைகளை நிருதி மூலையில் ஆரம்பிக்கவும்.
மாடி கைப்பிடிச் சுவர் தெற்கைவிட வடக்கிலும், மேற்கைவிட கிழக்கிலும் உயரமாக இருக்கக் கூடாது. சமமாக இருக்கலாம்.
மாடியில் மழை நீரும், வீட்டைக் கழுவிவிடும் நீரும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசைகளில் வெளியேறும்படி மடைத் துவாரங்கள் அமைக்கவும்.
வீட்டின் தளம் நிருதி அறையில் உயரமாக அமைக்கவும். ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிடத் தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில் எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.
சமையல் அறையில் சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக்கூடாது. வடக்குச் சுவருக்கும், ‘சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஓர் அடி இடைவெளி விட்டுக் கட்டவும்.

ஃபிளாட்டில் வாஸ்து குறை... என்ன செய்வது?
அடுக்குமாடி குடியிருப்பில் - ஃபிளாட் வாங்கி குடியிருப்பவர்கள், வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் என்ன செய்வது. அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எதையும் மாற்றி அமைக்க முடியாதே!
கவலை வேண்டாம். ‘பஞ்ச சிர ஸ்தாபனம்’ எனும் யந்திரம் குறித்து ஞானநூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யந்திரத்தை வெள்ளியிலோ தங்கத்திலோ அல்லது தாமிரத் தகட்டிலோ தயார் செய்து, வீட்டின் தலை வாயிலில் ஸ்தாபித்து, வாஸ்து பூஜை செய்தால் போதும். சிங்கம், ஆமை, பன்றி, யானை, ஆண் எருது ஆகிய ஐந்து விலங்குகளின் தலைகள் பொறிக்கப்பட்ட இந்த யந்திரம், சகல வாஸ்துக் குறைபாடுகளையும் நீக்க வல்லது.