திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

‘வாஸ்துப்படி மனையில் எந்த திசையில் போர்வெல் அமைக்கலாம்?’

வாஸ்து
பிரீமியம் ஸ்டோரி
News
வாஸ்து

மனையில் போர்வெல் அல்லது கிணறு அமைக்க விரும்பினால், கட்டடத்துக்கும் மதிலுக்கும் இடையில் அமைந்த காலியிடத்தில், கீழ்க்காணும் திசைகளில் அமைக்கவேண்டும்.

?எனக்குச் சுக்ரதசை நடந்து கொண் டிருக்கிறது. சுக்ர தசை காலத்தில் செல்வ - சுகபோகங்கள் வாய்க்கும் என்பார்கள். அதேநேரம், ஜாதகத்தில் சுக்ரன் அமைந்திருக்கும் நிலையின் அடிப்படையில் பலன்கள் மாறுபடலாம் என்கிறார் நண்பர். ஜாதகப்படி சுக்ர தசை எனக்கு நன்மை அளிக்குமா?

-கே.குமார்செல்வம், தாழையுத்து

ஜோதிடம் கூறும் விதிப்படி, ஒருவரது ஜாதகத்தில் சுக்ர தசை 20 ஆண்டுகளுக்கு நடக்கும். சுக்ர தசை காலத்தில், ஆசைப்படும் அனைத்தை யும் கொடுத்துச் சந்தோஷப்படுத்துவார் சுக்கிரன் என்பது பொதுவிதி.

ஆனால், சுக்ரன் இருக்கும் இடம், உடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சிலருக்கு மாறுபட்ட பலன்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதேபோல் சில அன்பர்களுக்கு வாழ்க்கை முழுக்கவே சுக்ர தசை நடக்கும் பாக்கியம் இல்லாமலும் போய்விடும்.

சுக்ர தசை நடக்கும்போது சுக்ரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்த நேரத்தில் கிடைக்கும் பலன்கள் மாறுபடும். லக்னத்தில் சுக்ரன் இருந்தால், எந்தச் செயலை எடுத்தாலும் அதில் வெற்றி கிட்டும். அரசாங்க வேலை கிடைக்கும். படிப்பு, சுகமான வாழ்வு என எல்லாமே நிறைவாக அமையும். சுக்ரன் 4-ம் இடத்தில் இருந் தால், ராஜபோக வாழ்க்கைதான். அரசியல் செல்வாக்கு பெருகும். அந்த ஜாதகர், உலகம் முழுக்கப் பெயர் தெரிகிற அளவு பிரபலமாவார்.

புதனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஜாதகதாரரின் மனைவி கஷ்டப்பட நேரிடும்.

தங்கள் ஜாதகப்படி, வியாழனுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கிறார். இது, நல்ல அம்சம். எங்கு போனாலும் அங்கு தலைமைப் பொறுப்பை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும். நிறைய சம்பாதிக்கும் வாய்ப்புகளும் உண்டு.

? புது வீட்டில் கிரகப் பிரவேசத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் முதலான வைபவங்களை நடத்த வுள்ளோம். சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்கிறார் எங்கள் பாட்டனார். சுதர்சன ஹோம பலன்கள் குறித்து விளக்குங்களேன்!

-சி.ராஜூ, கரூர்

ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்கவல்லது. ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அறுகம்புல்லை பசும்பாலில் முக்கி எடுத்து, அதை அப்படியே அக்னியில் போட்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க - தாமரைப்பூவை நெய்யில் முக்கி எடுத்து, அக்னியில் போட்டு பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும்.

ஆபத்து வராமல் தடுக்க - குக்குலு (கோலிக்குண்டு மாதிரி உருண்டையாக இருக்கும்) என்கிற ஹோமப் பொருளை அக்னியில் சமர்ப்பித்து ஆயிரத்தெட்டு தடவை ஹோமம் செய்ய வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

இப்படி பலவிதமான பலன்களை அருள வல்லது ஸ்ரீசுதர்சன ஹோமம். விரிவான முறையில் இந்த ஹோமத்தைச் செய்ய இயலா தவர்கள், கீழ்க்காணும் துதியைச் சொல்லி ஸ்ரீசுதர்சனரை வழிபட்டு பலனடையலாம்.

`சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்களைக் கொண்டவருமான ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும், பலமான - பயம் தரும் சிரிப்புக் கொண்டவ ருமான ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

கைகளில் சக்கரம்- கதை- சங்கு- தாமரைப் பூ- உலக்கை- பாசம்- அங்குசம்- தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்குபவருமான ஸ்ரீசுதர்சன மூர்த்தியை வணங்குகிறேன்’ என்று சொல்லி வழிபடுவ தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

?வாஸ்துப்படி மனையில் எந்தத் திசையில் போர்வெல் அமைக்கலாம்.?

-பி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-66

‘வாஸ்துப்படி மனையில் எந்த திசையில் போர்வெல் அமைக்கலாம்?’

மனையில் போர்வெல் அல்லது கிணறு அமைக்க விரும்பினால், கட்டடத்துக்கும் மதிலுக்கும் இடையில் அமைந்த காலியிடத்தில், கீழ்க்காணும் திசைகளில் அமைக்கவேண்டும்.

1. ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு.

2. வடக்கில் சரிபாதிக்கு மேல் கிழக்கு பாகத்தில்.

3. கிழக்கில் சரிபாதிக்கும் மேல் வடக்கு பாகத்தில்.

அதேபோல், கட்டடம் கட்டுவதற்கு மனையில் அமைக்கப்பட்ட போர்வெல் அல்லது கிணற்றிலிருந்து எடுத்த நீரை முதலில் பயன்படுத்துவது மிக விசேஷம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com