Published:Updated:

வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகங்கள்... பரிகாரங்கள்!

வாஸ்து பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
வாஸ்து பரிகாரங்கள்

ஜோதிட விபூஷன் டாக்டர். தஞ்சை. இராஜ. ஞானசேகர்

வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகங்கள்... பரிகாரங்கள்!

ஜோதிட விபூஷன் டாக்டர். தஞ்சை. இராஜ. ஞானசேகர்

Published:Updated:
வாஸ்து பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
வாஸ்து பரிகாரங்கள்

புதிதாகக் கட்டுவோர் வாஸ்து விதிகளை அனுசரித்துக் கட்டலாம். ஆனால் ஏற்கெனவே கட்டி முடித்த கட்டடத்தை வாங்கும்போது, அதில் வாஸ்து அமைப்பு சரியில்லை எனில் என்ன செய்வது? வாடகை வீட்டில் இருப்போர் வாஸ்து குறைபாடுகளைக் களைய என்ன செய்யலாம்? இதற்கான தீர்வுகளை எளிய பரிகாரங்கள் மூலம் பெறலாம்.

வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகங்கள்... பரிகாரங்கள்!

ருள் பேராற்றல் நிறைந்த பிரபஞ்சப் பெரு வெளியின் ஓர் அங்கமான நம் பூமியில், பஞ்ச பூதங்களின் சக்தியினால் உயிரினங்கள் வாழ்வதும் வீழ்வதும் தொடர்கின்றன. மனிதன் மட்டுமே பஞ்சபூத சக்தியைத் திறமையாகக் கையாண்டு வாழ்ந்து வருகிறான். தனது மேம்பட்ட அறிவின் வளர்ச்சியால், வாழ்வதற்குரிய இடங்களை வசதியாக்கிக்கொண்டான்.

அப்படியான தனது வசிப்பிடம், பஞ்சபூதங்களின் சக்தியை முழுமையாகப் பெறுமாறு அமைந்தால் மட்டுமே சிறப்புகளை அடைய முடியும் என்ற உண்மையையும் கண்டுகொண்டான். அதன் பொருட்டு அவன் அறிந்த உண்மைகளின் விளக்கமே - `வாஸ்து’ என்பதாயிற்று. இந்தச் சொல் வசிப்பிடத்தைக் குறிப்பதாகும். ஆக, வாஸ்துப்படி அமைந்த கட்டடங்களில் வாழும்போது, சகல வளங்களும் வந்து சேரும்; வாழ்க்கை செழிக்கும்.

சரி, புதிதாகக் கட்டுவோர் வாஸ்து விதிகளை அனுசரித்துக் கட்டலாம். ஆனால் ஏற்கெனவே கட்டி முடித்த கட்டடத்தை வாங்கும்போது, அதில் வாஸ்து அமைப்பு சரியில்லை எனில் என்ன செய்வது. நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பது தெரியவந்தால்... அதற்கு தீர்வு என்ன?
அமைப்புகளை மாற்ற வேண்டும், அறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று யாரேனும் வாஸ்து நிபுணர் சொல்கிறார் எனில், இடிப்பதும் மாற்றி அமைப்பதும் எல்லோருக்கும் சாத்தியமா?

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை அல்லது ஆசை ஆசையாக வாங்கிய புது வீட்டை, வியாபார ஸ்தலத்தைச் சட்டென்று இடித்து மாற்றி அமைக்க எளிதில் மனம் வருமா? இந்த நிலை மனச் சஞ்சலத்தை அல்லவா ஏற்படுத்தும்? கவலை வேண்டாம்! இதற்கான மாற்று வழிகள்- தீர்வுகள் வாஸ்து தொடர்பான ஞான நூல்களில் உண்டு.

இந்த வழிமுறைகளில் இரண்டு விதம் உண்டு. ஒன்று கண்ணுக்குப் புலப்படும் பொருள்கள் மூலம் கிடைக்கும் தீர்வுகள்; இன்னொன்று சூட்சுமமாகப் பெறும் தீர்வுகள். இந்த வகையில், வாஸ்து தோஷம் தீர நமக்குப் பேருதவி செய்யும் பொருள்களில் பிரதானமானவை ரத்தினங்கள்.

ரத்தினங்கள் என்றதுமே வைரம், வைடூரியம் போன்றவை சிந்தனையில் எழும். இவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனில் பெரும்பொருள் செலவாகுமே என்றும் தோன்றலாம். இவற்றுக் கெல்லாம் மூலமாகவும் எல்லோரும் எளிமையாகப் பயன்படுத்தக் கூடியதுமான ரத்தினம் ஒன்று உண்டு. அதுதான் ஸ்படிகம்.

வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகங்கள்... பரிகாரங்கள்!

ஸ்படிகங்களால் வாஸ்து தீர்வு

பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட 2,000 அடி ஆழத்தில் மென்மையான ஸ்படிகப் பாறைகள் கிடைக்கின்றன. இவற்றை எடுத்துச் சீர்செய்து பட்டை தீட்டிப் பயன்படுத்தும்போது, அவை மிக அருமையான பலன்களைத் தருகின்றன.

ஸ்படிகம் ஒளி ஊடுறுவக் கூடிய ரத்தினக்கல். இது குவார்ட்ஸ் எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது. குளிர்ச்சி பொருந்தியது. நினைவுகளைச் சேமித்து வைக்கும் தன்மையும் உண்டு.

பஞ்சபூதங்களின் சக்தியை உள்வாங்கி வெளியிடும் ஆற்றல் மிக்கது ஸ்படிகம். ஆரம்ப நிலையில் முரட்டுத்தன்மையுடனும் ஒளி ஊடுறுவும் தன்மை குறைவான நிலையிலும் இருக்கும். இந்த நிலையில் இதைப் படிகாரம் என்பார்கள்.

திருஷ்டி நீங்க படிகாரத்தை வீட்டு வாயிலில் கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். கண் திருஷ்டியை மட்டுமன்றி, கண்ணுக்குப் புலப்படாத எதிர்மறை சக்திகளைத் தடுக்கும் ஆற்றலும் படிகாரத்துக்கு உண்டு.

வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகங்கள்... பரிகாரங்கள்!

ஸ்படிகங்களும் பரிகாரங்களும்...

ஆறு பட்டைகள் கொண்ட ஸ்படிகங்களை, வாஸ்துப் பிரச்னைகள் தீரப் பயன்படுத்தலாம். வீட்டுக்குத் தலைவாசல் முக்கிய அங்கம். இதுவே கிரக சக்திகளை உள்ளே அனுமதிக்கிறது.

தலை வாசலில் சரியான அளவில் படிகள் இல்லாமல் இருப்பது, நீச்சப் பகுதியில் வாசல் அமைவது தோஷம் ஆகும். இப்படியான குறைகள் உள்ள தலைவாசலில் மேற்பகுதியில் இடப்புறம் - மேற்புறம் - வலப்புறம் ஸ்படிகங்களைப் பதிக்க வேண்டும். அதேபோல், கீழ்ப்பகுதியில் இடப்புறம் - கீழ்ப்புறம் - வலப்புறம் ஸ்படிகங்களைப் பதிக்க வேண்டும். ஸ்படிகங்களின் கூர்முனை வாசலின் மையப்பகுதியை நோக்கி அமையும்படி பதித்தல் அவசியம். இவற்றை உள்வாசல் பகுதியில் துளை இட்டும் பதித்துக் கொள்ளலாம். இதனால் தலை வாசலின் தோஷம் குறையும்.

ஒவ்வொரு முறையும் கதவுகள் திறந்து மூடப் படும்போது, உண்டாகும் அழுத்தம் ஸ்படிகங்களில் காந்த அதிர்வுகளை ஏற்படுத்தி, வீட்டில் நேர்மறை ஆற்றலை உண்டாக்கும்.

கழிப்பறை தவறான இடத்தில் கட்டப்பட்டிருந்தால், அங்கேயும் படிகாரத்தைப் பயன்படுத்தி தோஷம் களையலாம். ஒரு கண்ணாடிப் பாத்திரத் தில் கனமான படிகாரத்தை வைத்து, கழிப்பறையில் காற்றுப் போக்கு உள்ள ஜன்னல் பகுதியில் வைத்து விடலாம். எதிர்மறை சக்திகள் செயலிழக்கும்.

வாஸ்துப்படி ஒரு வீட்டின் தென்மேற்கு மூலை யில், குடும்பத் தலைவரின் படுக்கை அறை அமைதல் சிறப்பு. அந்தத் திசை காலியாக விடப்பட்ட வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் நஷ்டம் ஏற்படும். வேலையில் பிரச்னை உண்டாகும். இப்படியான வீடுகளில், தென்மேற்குப் பகுதியில் நான்கு மூலை களிலும் பலமுனைப் பட்டைகள் கொண்ட ஸ்படிகப் பந்துகளைக் கட்டித் தொங்கவிட வேண்டும். இதனால் அந்த அறையின் வாஸ்து சக்தி சமநிலைப்படும்.

வீட்டின் வடமேற்குப் பகுதியில் வாஸ்துக் குறைபாடுகள் இருப்பின் நிம்மதி பறிபோகும். இந்தப் பகுதியில் இருக்கும் அறைகளை, வீணான தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கும் கிடங்கு போன்றோ அல்லது எப்போதும் மூடிவைத்திருக்கும் நிலையிலோ பயன்படுத்தினால் தோஷம்தான்.

உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. தொழில் இறங்குமுகம் ஆகும். இப்படியான வீட்டுக்குள் நுழைந்தால், எதையோ பறிகொடுத்தது போன்ற உணர்வு எழும்.

இதுபோன்ற குறையுள்ள வீடுகளில் கிளஸ்டர்ஸ் எனப்படும் அடர்த்தி மிகுந்த ஸ்படிகங்கள், அமிதிஸ்ட் ஸ்படிகம் ஆகியவற்றை (உள்ளங்கை அளவிலானது) அந்த அறையின் மையப்பகுதியில் வைத்துவிட வேண்டும். இதனால் அந்த அறையில் எதிர்மறை ஆற்றல் கரைந்துபோகும்.

வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகங்கள்... பரிகாரங்கள்!

வீட்டின் முக்கியமான பகுதி ஹால். இது சரியாக அமைந்தால் வீட்டின் மற்ற பாகங்களில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் சரியாகிவிடும் என்பார்கள். ஹால் தோஷமுடன் இருப்பது நல்லதல்ல. ஒருவேளை ஹால் சரியான அளவில் அமையாமல் தோஷத்துடன் இருந் தால், கோள வடிவ ஸ்படிகத்தை ஹாலின் மையத்தில் வைக்கலாம்.

சிறு ஸ்டூல் ஒன்றை ஹாலின் மையத்தில் வைத்து, அதன் மீது கண்ணாடிக் கிண்ணம் ஒன்றில் கோள வடிவ ஸ்படிகத்தை வைத்தால் போதும். பிரபஞ்சத்தின் சகலவிதமான தூய சக்திகளை இந்த ஸ்படிகம் ஈர்த்து, வீடு முழுவதும் வெளிப்படுத்தும். இதனால் வீட்டுல் உள்ளோர் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். திருஷ்டி தோஷம் வீட்டை பாதிக்காது. காரியங்கள் திட்டங்கள் தடையின்றி நிறைவேறும்.

வீடுகளில் மையத்தை பிரம்ம ஸ்தானம் என்பார்கள். அந்தக் காலத்தில் மையப்பகுதியை, சூரிய ஒளி விழும் படி திறந்தவெளியாக அமைப்பார்கள். தற்காலத்தில் இதுபோன்ற அமைப்புகளுடன் வீடு கட்டுவது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. ஆக, ஹாலின் மையத்தில் நாம் சொன்னது போன்று ஸ்படிகக் கோளத்தை வைப்பதன் மூலம் இந்தக் குறை நீங்கிவிடும். இது, எண்திசைகளிலும் ஏற்படும் தோஷங்களை விலக்கக் கூடியது.

வசிக்கும் இல்லம் அல்லது புதிதாகக் கட்டப்பட்ட வீடு வாஸ்துப்படி சரியான முறையில் இல்லை என்பது தெரிந்தால், வீட்டின் உரிமையாளரும் வீட்டில் இருப்பவர்களும் தூய்மையான ஸ்படிக மாலைகளை தங்களது கழுத்தில் அணிந்துகொள்ளலாம். இதனால் சுயபலம் கூடும்; சிந்தனை சிறக்கும் செயல்கள் வெற்றிப் பெறும்.

இன்றைய நாளில் இந்த ஸ்படிகங்களைக் கொண்டு பலவிதமான தெய்வச் சிலைகள் செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடுவ தால், அந்த இறை ஆற்றலுடன் ஸ்படிகத்தின் ஆற்றலும் இணைய, வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்கும்.

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால்...

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர, 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும்.