Election bannerElection banner
Published:Updated:

அதிசார குரு... அதிர்ஷ்டம், செலவு, ஆரோக்கியம், எச்சரிக்கை... 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்!

குரு
குரு

உலகமே பெரும் பிரச்னையில் சிக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் குருவின் இந்த அதிசாரப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

நவகிரகங்களில் குரு பூரணமான சுபகிரகம் ஆவார். மற்ற கிரகங்கள் தாங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப பலன்களைத் தருவார்கள். ஆனால், குருவோ தான் இருக்கும் இடத்துக்கு உரிய பலன்களை விடவும் தான் பார்க்கும் இடத்துக்கு உரிய பலன்களை அதிகமாகத் தருவார். அதனால்தான், `குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தன்னுடைய ஆட்சி வீடாகிய தனுசு ராசிக்கு பிரவேசித்த குரு பகவான், தற்போது 28.3.2020 முதல் 6.7.2020 வரை மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் சஞ்சரிக்க உள்ளார். உலகமே பெரும் பிரச்னையில் சிக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் குருவின் இந்த அதிசாரப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. குருவின் நற்பார்வை பெற்று உலகம் மீண்டும் இயல்புக்குத் திரும்பும் காலகட்டமாக இது அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தன்னுடைய ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய பார்வைகளால் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகளைப் பார்வையிடுகிறார். இதன் அடிப்படையில் இங்கே பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசியைச் சேர்ந்த அன்பருக்கும் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

மேஷம்:

இதுவரை தங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் இருந்த குரு பகவான், தற்போது அதிசாரமாக பத்தாம் வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். அங்கிருந்தபடி உங்கள் ராசிக்கு தனம், சுகம் மற்றும் கடன், ரோகம் ஆகிய ஸ்தானங்களைப் பார்வையிடுகிறார். பத்தில் குரு பதவி பறி போகும் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் பத்தில் குரு பதவியைப் பறிக்கமாட்டார். மாறாக அவரவர் பூர்வபுண்ணியத்துக்கு ஏற்ப பதவியில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். நிர்வாகத்தினரின் ஆதரவு உற்சாகம் தரும். குரு இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்ற நீண்டநாள் விருப்பம் நிறைவேற வாய்ப்பு உண்டு. தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அவருக்கு ஏற்பட்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும். கடன்கள் அடைபடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமான காலம்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு எட்டில் இருந்த குரு பகவான் தற்போது அதிசாரமாக ஒன்பதாம் இடத்துக்கு வந்திருக்கிறார். அங்கிருந்தபடி உங்கள் ராசியையும் தைரிய ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம் ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். இதுவரை இருந்து வந்த மன இறுக்கங்கள் நீங்கி, உற்சாகமாகச் செயல்படுவீர்கள். முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். பூர்வபுண்ணியத்துக்கு ஏற்ப நற்பலன்களைப் பெறுவீர்கள். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். அதாவது ஒருவர் வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால் அவருடைய ராசிக்கு ஒன்பதில் குரு இருக்கவேண்டும். அல்லது அவருடைய ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்வை செய்யவேண்டும் என்பதே இதன் பொருள். அதன்படி சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பங்குதாரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

மிதுனம்

இது வரை ஏழாம் வீட்டில் இருந்த குரு பகவான், தற்போது எட்டாம் வீட்டில் அதிசாரமாகவும் வக்கிரமாகவும் அமர்ந்து பலன்களைத் தரப்போகிறார். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பார்கள். அதன்படி குருபகவான் தன்னுடைய அதிசாரக் காலத்தில் உங்களுக்குப் பல வகைகளிலும் நற்பலன்களையே தரவிருக்கிறார். தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆனாலும், எந்த ஒரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். குருபகவான் உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம் அவருடைய பார்வை தன குடும்ப ஸ்தானத்துக்கும் ஏற்படுவதால் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்து விடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த பதவிஉயர்வு, ஊதியஉயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு கனிந்து வரும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் ஏற்படலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குரு பகவான்
குரு பகவான்

கடகம்

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து சிற்சில விஷயங்களில் சிரமங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்த குருபகவான், தற்போது அதிசாரமாக ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். அவருடைய பார்வை உங்கள் ராசிக்கு ஏற்படுவது மிகவும் சிறப்பானது. மேலும் அவர் தன்னுடைய ஐந்தாம் பார்வையால் லாபஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் தைரிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலுடனும் விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பெற்றோருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். அவர்கள் மூலம் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல் பளிச்சிடும். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடி நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தைப் பொறுத்தவரை மிகுந்த பொறுமையுடன் இருக்கவேண்டிய காலம். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைத்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகளும் வீண் செலவுகளும் ஏற்படும்.

சிம்மம்

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போது அதிசாரமாக ஆறாம் வீட்டில் பிரவேசிக்க உள்ளார். சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலக்கட்டம். குருவின் பார்வைகள் ஜீவனஸ்தானம், விரயஸ்தானம், தனஸ்தானம் ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால், எதிரிகளால் பல வகைகளிலும் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். குருவின் பார்வை தனஸ்தானத்துக்கு ஏற்படுவதால், பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றாலும், கடன்கள் விஷயத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடியே பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு மாற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சிலருக்குப் புதிய கிளைகள் தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விருச்சிகம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
விருச்சிகம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

கன்னி

இதுவரை உங்கள் ராசிக்கு நான்கில் இருந்த குருபகவான், தற்போது அதிசாரமாக உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பிரவேசிக்க உள்ளார். `அஞ்சிலே குரு கெஞ்சினாலும் கிடைக்காது' என்று சொல்வது உண்டு. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் உங்களுக்கு நற்பலன்களைத் தரக் காத்திருக்கிறார். ஐந்தில் இருக்கும் குரு, உங்கள் ராசியைப் பார்ப்பதுடன் பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் ஆகிய இடங்களையும் பார்க்கிறார். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும், உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடக் குறையத்தான் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்

உங்கள் ராசிக்கு தைரியஸ்தானத்தில் இருந்த குருபகவான், தற்போது அதிசாரமாக உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான மகரத்தில் பிரவேசிக்க உள்ளார். அவருடைய பார்வை உங்கள் ராசிக்கு எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. உங்கள் உடல் நலனிலும், தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்களால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரிகள் கேட்கும் உதவிகளை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணின் திருமணத்துக்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அவ்வப்போது அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்வதில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் பாக்கிகளை வசூலிப்பதில் கனிவான அணுகுமுறை மிகவும் அவசியம்.

குரு பகவான்
குரு பகவான்

விருச்சிகம்

தனஸ்தானத்தில் இருந்த குருபகவான் தற்போது தைரிய ஸ்தானம் என்னும் மூன்றாம் இடத்துக்கு வருகிறார். அவர் அங்கிருந்தபடி களத்திரம், பாக்கியம், லாபம் ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வார். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தடைப்பட்டு வந்த திருமணம் கூடி வரும். ஆனாலும், அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இளைய சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். அவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிதுபடுத்தவேண்டாம். தந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவருடைய ஆசிகளைப் பெறுவீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களை அலட்சியமாகப் பார்த்த அதிகாரி, உங்கள் திறமையைப் புரிந்து கொண்டு உரிய மரியாதை தருவதுடன், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் வழங்குவார். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்திருந்தால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட சாதகமான காலம்.

தனுசு

உங்கள் ராசியிலேயே ஜன்ம குருவாக இருந்து பல வகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், தற்போது அதிசாரமாக தன, குடும்ப, வாக்குஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடத்தில் பிரவேசிக்க உள்ளார். குருவின் பார்வை ஆறு, எட்டு, பத்து ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் ஆற்றல் உண்டாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகள் போக சிறிது சேமிக்க வும் முடியும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சில பிரச்னைகள் முற்றிலும் விலகி, மகிழ்ச்சியும் உற்சாக மும் நிறைந்திருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள். கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அலுவலகத் தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பணிகளில் தவறுகள் ஏற்படாதபடி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மற்றும் முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடவும். போட்டிகள் ஏற்பட்டாலும் சிரமப்பட்டு சமாளித்துவிடுவீர்கள். இப்போது இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்துக்குக் கடையை மாற்ற நினைக்கவேண்டாம்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

மகரம்

உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் இருந்த குருபகவான், தற்போது அதிசாரம் பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்க உள்ளார். அங்கிருந்தபடி புத்திரம், களத்திரம், பாக்கியம் ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். திருமணமாகி நீண்டநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் பழகுவது அவசியம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். என்றாலும் சலித்துக்கொள்ளாமல் செய்து பாராட்டும் சலுகைகளும் பெறுவீர்கள். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்த்துவிடவும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்பதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பங்குதாரர்களுடன் உடன்படிக்கை செய்துகொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிகக் கடன் தரவேண்டாம்.

கும்பம்

இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த குருபகவான், தற்போது விரயஸ்தானத்தில் அமர்கிறார். அவருடைய பார்வை நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். நீண்டநாள்களாகச் செலுத்தாமல் இருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கணவன் - மனைவிக் கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் பணியின் தன்மையை நுட்பமாகப் புரிந்துகொண்டு குறித்த நேரத்தில் முடித்துவிடும் ஆற்றல் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். உங்களுடைய ஆலோசனைகள் நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் வியாபாரத்தில் நல்ல திருப்பம் ஏற்படும். புதிய முதலீடுகள் விஷயத்தில் சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு செய்வது நல்லது.

சிவபெருமான்
சிவபெருமான்

மீனம்

இதுவரை உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் வீட்டில் இருந்த குருபகவான், தற்போது அதிசாரமாக லாபஸ்தானமாகிய பதினோராம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தரப்போகிறார். அங்கிருந்தபடி தைரியம், புத்திரம், களத்திரம் ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வார். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். எப்படிப்பட்ட சவாலான காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகள் போக சிறிது சேமிக்கவும் முடியும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். ஆனாலும், உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கவும் லாபத்தைப் பெருக்கவும் கூடுதல் உழைப்பு தேவைப்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கி வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணத்தைத் தவிர்த்துவிடவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு