Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - விருச்சிகம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் விருச்சிக ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - விருச்சிகம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் விருச்சிக ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம்: எந்த வேலையையும் உடனே செய்து முடிக்க வேண்டுமென நினைப்பவர்களே! இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களது 10-வது ராசியில் பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது உத்யோகம் அமையும்.

சூரியன் 6-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிப் போயிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும். வழக்கு வெற்றி அடையும். வேலை கிடைக்கும். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அதிக வட்டி கடனை அடைக்க குறைந்த வட்டியில் எதிர்பார்த்த லோன் கிடைக்கும். உங்களை மதிக்காமல் போன சில உறவினர்கள் இனி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

5-ம் வீட்டிற்கு குரு செல்வதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சொந்தம் பந்தங்கள் மதிப்பார்கள். எப்போதும் மருந்து மாத்திரை என்றிருந்த தாய் குணமடைவார்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்யம் மேம்படும். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடி வரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்கும்படி கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

09.10.2022 முதல் 29.11.2022 வரை மற்றும் 14.03.2023 முதல் 13.4.2023 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8-ல் மறைந்து பலவீனமாவதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும். முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

24.5.2022 முதல் 18.6.2022 வரை மற்றும் 13.3.2023 முதல் 7.04.2023 வரை சுக்ரன் 6-ல் மறைவதனால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் லாபம் கணிசமாக உயரும். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புரட்டாசி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முரண்டுபிடித்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்ந்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் புது பங்குதாரர்கள் வருவார்கள். பங்குனி மாதத்தில் தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்று தீரும். புதிய ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். அரசாங்கக் கெடுபிடிகள் தளரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமையை மேலதிகாரிகள் புரிந்து கொள்வார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிட்டும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கணினி துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வேலையை தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள்.

இந்தப் புத்தாண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதாக அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism